मनस्ते पादाब्जे निवसतु वच: स्तोत्रफणितौ
करौ चभ्यर्चायं श्रुतिरपि कथाकर्णनविधौ
तव ध्याने बुध्दिर्नयनयुगलं मूतिविभवे
परग्रन्थान्कैर्वा परमशिव जाने परमता ॥
- சிவானந்த லஹரி
ஹே ஈஸ்வரா! மனஸ்தே பாதாப்ஜே நிவஸ்து – என் மனம் உன்பாதங்களிலேயே இருக்கட்டும். வச: ஸ்தோத்ரபணிதெள – வாக்கு உன்னையே போற்றட்டும். கரெள சப்யார்சயம் – என் கைகள் உன்னையே வணங்கட்டும். க்ஷுதிரபி கதாகர்ணனவிதெள – என்செவிகள் உன் கதையையே கேட்கட்டும். தவ த்யானே புத்தி – என்புத்தி உன்னையே த்யானிக்கட்டும். நயனயுகலம் மூர்த்திவிபவே -என் கண்கள் உனது உருவையே தரிசிக்கட்டும். என் அவயங்கள் எல்லாமே உனக்கே என்றான பிறகு வேறெந்த தத்துவங்களுக்கும் எப்படி புலனை கொடுக்கமுடியும்? எல்லாமே நீயே என்றானபிறகு மற்ற தத்துவங்களின் பயன் ஏதுமில்லை. பரக்ரந்தான்கைர்வா பரமசிவஜானே பரமத!
जिह्वे कीर्तय केशवं मुररिपुं चेतो भज श्रीधरं
पाणिद्वन्द्व समर्चय अच्युत कथा: श्रोत्रद्वय त्वं श्रुणु ।
कृप्णं लोकय लोचनद्वय हरेर् गच्छ आङिघ्र युग्मालयं
जिघ्र घ्राण मुकुन्दपाद तुलसीं मूर्धन् नमाधोक्षजम् ।।
- குலசேகராழ்வாரின் முகுந்தமாலை
ஏ நாவே – கேசவனையே போற்றட்டும் – ஜிக்வே கீர்த்ய கேசவம். முரரிபும்சேதோ பஜ: மனமே முராரியயே வணங்கு. கைகளே.. ஸ்ரீதரனையே தொழுங்கள். செவிகளே அச்சுதனின் கதையையே கேளுங்கள். க்ருஷ்ணம் லோகய லோசனாத்வய – கண்களே கண்ணனிடமே இருங்கள் – ஹரேர் கச்சாங்க்ரியுக்மாலயம் – கால்களே ஹரியின் ஆலயத்துக்கே செல்லுங்கள் – ஜிக்ரா க்ராண முகுந்தபாத துளசீம் -மூக்கே.. முகுந்தனின் பாதத்தில் உள்ள துளசியின் மணத்தையே முகருங்கள். மூர்தான் நமாதோக்ஷஜம் – சிரசே… மஹாவிஷ்ணுவையே வணங்கு.
जपो जल्प: शिल्पं सकलमपि मुद्राविरचना
गति: प्रादक्षिण्यऋमणमशनाध्याह्रुतिविधि:
प्राणामस्संवेशस्सुखमखिलमात्मार्पणदृशा
सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम्
- ஆதிசங்கரரின் செளந்தர்யலஹரி
ஹே அம்பா! ஜபோ ஜல்ப : நான் பேசுவதே உன் ஜபமாகட்டும். சகலம் சில்பம்அபி முத்ர விரஞ்சனா – என் கை அசைவுகள் உன் பூஜைக்கான கைஅசைவுகளாகவே இருக்கட்டும். கதி ப்ரதக்ஷிண்யா க்ரமணம் – என் கால்கள் நடக்கும் போது உன்னைச்சுற்றி வரும் திவ்ய ப்ரதக்ஷிணமாகவே இருக்கட்டும். ஆஸனாதி ஆஹுதி விதி – என் புலன்கள் உணர்வதெல்லாம் உன்னுடையதாகவே ஆகட்டும். ப்ரணாமஸ்ஸம்வேஷா – நான் கீழே படுத்து உறங்குவதும் கூட உனக்கு வணங்குவதாகவே ஆகட்டும். சுகம் அகிலம் ஆத்மார்பணாத்ருச சபர்யா பர்யாயா தவ பவது யன்மே விலசிதம் – ஆத்மாவே அர்பணித்த பிறகு நான் என்ன செய்தாலும் அது உனக்கு செய்யும்பூஜையாகவே இருக்கட்டும்.
