Bhakthi Yogam

Entries categorized as 'உபநிஷத்'

திருக்குறளும் உபநிஷத் வாக்கியங்களும்

செப்டம்பர் 18, 2005 · No Comments

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு

மேற்கண்ட குறளுக்கு ஒற்றை வரியில் பொருள் சொல்ல வேண்டுமென்றால் சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐந்தின் கூறுபாட்டையும் ஆராய்ந்தறியும் யோகிகளின் அறிவிற்கு உட்பட்டதே உலகம் என்பதாம். மொழிஞாயிறு ஞா.தேவநேய பாவாணர் அவர்களின் தமிழ் மரபுரையில் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறார்:

ஐந்தின் கூறுபாடாவன, மேற்கூறிய பூதமூலம் ஐந்தும், அவற்றின்கண் தோன்றிய நிலம், நீர், தீ, வளி,வெளி என்னும் பூதங்கள் ஐந்தும், அவற்றொடு தொடர்புடைய புலனைக் கொண்ட மெய், வாய், கண்,மூக்கு, செவி என்னும் அறிவுப்பொறி ஐந்தும் அவற்றைப்போல உடம்பின் கூறாகிய நாவு, கை, கால்,அண்டி (எருவாய்), குறி (கருவாய்) என்னும் கருமப்பொறி ஐந்தும் ஆக இருபதுமாம். இனி ‘வகைதெரிவான் கட்டு’ என்றதினால், தெரிகின்ற ஆதனும் (புருடனும்) அவன் தெரிதற் கருவியாகிய மதி(மான்) தன்முனைப்பு (அகங்கார) மனங்களும் அவற்றிற்கு முதலாகிய சித்தமும் (மூலப்பகுதியும்)பெறப்படும்.

ஆதன் தான் ஒன்றினின்று தோன்றாமையாலும் பிறிதொன்றை தோற்றுவியாமலும் தனிநிலையாம். மூலமுதனிலை (சித்தம்) தான் ஒன்றினின்று தோன்றாமையால் முதனிலையாம். மதியும் அதனின்று தன்முனைப்பும் அதனின்று பூத மூலங்களுமாக ஏழும், மூல முதனிலையினின்று முறையே தோன்றுவதனாலும் மன முதலியவற்றை தோற்றுவித்தலாலும் இடைநிலையாம். மனமும் அறிவுப்பொறிகளும் கருமப்பொறிகளும் பூதங்களுமாகிய பதினாறும் இடைநிலையினின்று தோன்றுவதானாலும் வேறெவற்றையுந் தோற்றுவியாமையாலும் இறுதிநிலையாம். எல்லாவற்றோடுங் கலந்து நின்று அவற்றையியக்கி முத்தொழிற்படுத்தும் இறைவனென்னும் முழுமுதனிலையோடு சேர்க்க, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தாறாம்.

நுண்ணிய அடிப்படைப்பாகுபாட்டில் ஆதனும் (சீவாத்துமா) பரவாதனும் (பரமாத்துமா) காற்றுள் அடங்குவதால் ஐந்தின் வகையென்று எல்லாவற்றையும் அடக்கினார் ஆசிரியர் (திருவள்ளுவர்).

இதே கருத்து வேத உபனிஷத்துக்களிலும் காணப்படுகிறது.

अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत् ।
अनाधनन्तं महत: परं ध्रुवं निचाय्य तन्मृत्युमुखात्प्रमुच्यते ॥

அசப்தம் அஸ்பர்சம் அரூபம் அவ்யயம்
ததா அரசம் நித்யம் அகந்தவத் ச யத்
அநாத்-யனந்தம் மஹத: பரம் த்ருவம்
நிசாய்ய தன் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யதே
- கடோ பநிஷத்.

இந்த உபநிஷத் வாக்கியத்திற்கு விளக்கமாவது, அசப்தம், அஸ்பர்சம், அரூபம், அவ்யயம், அரசம்,அகந்தம் என்ற வார்த்தைகளில் - அது ஒலி ஊறு உருவம் சுவை மணம் அற்றது என்று பொருள். அநாதி - அனந்தம் என்றால் தொடக்கமும் முடிவும் அற்றது. அது எல்லா புத்திகளுக்கும் மேற்பட்டது நிலையானது - இத்தகைய பரம்பொருளை உணர்ந்தவனுக்கு ம்ருத்யு முகா: எமனின் வாயிலிருந்துப்ரமுச்யதே - விடுதலை அடைகிறான் என்று பொருளாகிறது. அதாவது சுவை ஒளி ஓசை மணமற்றதான இறைவனை உணர்ந்தவன் மரணமற்றவனாகிறான் - அவன் பிறப்பதுமில்லை - இறப்பதும் இல்லை.

இன்னொரு வாக்கியம் கூட உண்டு…

येन रूपं रसं गन्धं शब्धान् स्पर्शाश्च मैथुनान् ।
एतेनैव विजानाथि किमत्र परिशिष्यते - एतद्वै तत् ॥

யேன ரூபம் ரஸம் கந்தம் சப்தான்
ஸ்பர்சாம்ஸ்ச மைதுனான்
ஏதேனைவ விஜாநாதி கிமத்ர
பரிசிஷ்யதே ஏதத் வை தத்
- கடோ பநிஷத்.

இதன் பொருளாவது, உருவம், சுவை, மணம், ஒலிகள், தொடு உணர்ச்சி, உடலின்பங்கள் இவற்றை தம் ஆத்மாவினால்உயிர்கள் அறிகின்றன. இந்த ஆத்மாவினால் அறியப்படாதது ஒன்றும் மிச்சம் இல்லை. ஆத்மாவே சத்யமானதும் இறுதி உண்மையானதுமாகும்.

பக்திபூர்வமாக இதை ஆராய முற்படுகையில் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார் அவர்களின் உபதேசங்கள் நமக்கு உதவுகின்றன. அவரது உபதேசங்களின் படி,

ப்ரணவ சப்தம் எப்படி ஏற்பட்டதென்றால் வேதங்களை ஆராய்ந்த பெரியோர் ரிக்வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களையும் யஜுர் வேதத்திலிருந்து எட்டு அக்ஷரங்களையும் சாம வேதத்திலிருந்து எட்டுஅக்ஷரங்களையும் மிக முக்கியமாக எடுத்தார்கள்.

(எப்படி அக்ஷரங்களை முக்கியமாக எடுக்கமுடியும் என்று வரும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. நாராயணன் என்ற வார்த்தையில் முக்கியமானது ரா என்ற எழுத்து - ரா இல்லாவிட்டால்ந அயனன் என்ற வார்த்தை வந்து நாராயணன் என்ற பரம் பொருளை குறிக்கும் அர்த்தமே மாறிவிடும்.நமச்சிவாய என்ற வார்த்தையில் முக்கியமான எழுத்து ம - இது இல்லாவிட்டால் ந சிவாய என்று ஆகி பொருள் மாறிவிடும் - இந்த இரண்டு முக்கியமான எழுத்துக்களும் சேர்த்ததால் வந்ததுதான்ராம ! )

வேதங்களிலிருந்து எடுத்த முக்கியமான இருபத்து நான்கு எழுத்துக்களிலிருந்து தோன்றியது தான் காயத்ரி மந்திரம். இந்த காயத்ரி மந்திரத்தையும் சுருக்கினார்கள் - மூன்றே எழுத்துக்கள் மிஞ்சின. அது அ - உ - ம. இந்த மூன்று எழுத்துக்களை மட்டும் சேர்த்தால் ஒரே எழுத்து அதுதான் ப்ரணவம் !

அகார: விஷ்ணு வாசக: என்றதன் படி அ என்றால் மஹா விஷ்ணு - உ என்றால் மஹா லக்ஷ்மி. உ என்றால் இன்னொரு பொருளும் உண்டு - அகாரத்துக்கு உரியது என்பதாம். ம என்ற எழுத்துக்கு மனம் என்பது பொருள். அ வுக்கு உரியது மனம். ம என்றால் அறிவு; அறிவை உடையவன் என்று பொருள் கொள்ளலாம்.

அறிவை உடையவன் ஜீவாத்மா. ஜீவாத்மா அறிவை உடையவனாகவும் இருக்கிறான் அறிவாகவும் இருக்கிறான். இந்த ஜீவாத்மாவுக்கு ஆதாரமாக மூன்று தத்வங்கள் - அவை ப்ரக்ருதி, மஹத் மற்றும் அஹங்காரம் (3). இந்த மூன்று தத்வங்களிலிருந்து பஞ்சதன் மாத்திரைகள் (5) தோன்றின. அந்த பஞ்சதன்மாத்திரைகளிலிருந்து பஞ்ச பூதங்கள் (5) தோன்றின. அதிலிருந்து விசேஷமாய் தோன்றிற்று - பஞ்ச கர்மேந்த்ரியங்கள் (5); பஞ்ச ஞானேந்த்ரியங்கள் (5). இவற்றுக்கெல்லாம் மேலே மனஸ் என்கிற ஒர் இந்த்ரியம் (1) இவற்றின் கூட்டுத்தொகை 24. இதைக்காட்டிலும் வேறானவன், இருபத்தைந்தாவதான ஜீவாத்மா. இதையும் விட வேறானவன் 26 ஆகிற பரமாத்மா.

கொஞ்சம் கவனித்து பார்த்தோமானால் சம்ஸ்கிருதத்தில் க1 க2 க3 க4 ங5 என்று கூட்டும்போது ம என்ற எழுத்து 25 ஆவதாக வருகிறது. ம என்பது 25 ஆன ஜீவாத்மாவையே குறிக்கிறது. ஆகவே ப்ரணவமான ஓங்காரத்தை பிரித்து வரும் அ உ ம என்ற எழுத்துக்களின் பொருளாக மஹாவிஷ்ணுவான பரமாத்மாவுக்கு உரியவன் ஜீவாத்மா என்று கொள்ளலாம். எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்ப்பணம் பண்ண வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.

Categories: உபநிஷத் · தமிழ்ப்பதிவுகள் · பக்தி