Bhakthi Yogam

திருப்பாவை 21 - ஏற்ற கலங்கள்

ஜனவரி 6, 2008 · No Comments

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடி எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பிராட்டியும் எழுந்திருந்து வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டு பகவானை எழுப்புவதாகச் சொல்வர். வேறு விதமாக இந்த பாசுரத்திலும் பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடுவதாகவும் சொல்வர். எப்படியாயினும் இவர்கள் பகவான் க்ருஷ்ணனை கண் முன்னே கண்டு அனுபவித்து பாடுவது இந்த பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் புரியும்.

ஏற்ற கலங்கள் - எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப என்று அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், மாற்றாதே பால் சொரியும், ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! என்கிறாள். பகவ¡ன், பக்தியில் இவன் சிறியவன், இவன் புதியவன், இவன் பலகாலம் பக்தி செய்தவன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அதோடு மட்டும் அல்ல, அவனையே நினைக்காதவர்களையும் அவன் ரக்ஷிக்கிறான். அதனால் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாத வள்ளன்மை அவனுக்கு. அதற்கு பசுக்களை உதாரணமாக சொல்கிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இந்த குணம் உண்டே. அதோடு இந்த பசுக்களுக்கெல்லாம் சொந்தக்காரரின் மகன், எங்களில் ஒருவனல்லவா நீ என்று அவனது விபவ அவதார மாயையில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து போகிறாள் ஆண்டாள். எங்களோடு உனக்கிருக்கும் சம்பந்தத்தை மறந்து போய்விட்டாயா! என்கிறாள்.

அடுத்த வரியிலேயே அந்த அவதார மாயையை மீறி அவன் அருளாலே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் ஏற்படுகிறது. அடுத்து ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள், “ஊற்றம் உடையாய்!” - சிறிதளவும் அயராது, தயங்காது ஊற்றமாய் உலக வியாபாரத்தை கவனிக்கிறாய்! ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் படைத்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? என்று ஆச்சரியப்படுகிறாள். அவனது இந்த ஊக்கத்தை பூர்வாசார்யர்கள் இப்படி சொல்கிறார்கள் ‘ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிக்ஞையை மஹாராஜருள்ளிட்டாரும் விட வேணுமென்னிலும் விடாதே முடிய நின்று தலைக்கட்டுகை’ என்று விபீஷண சரணாகதியில் சுக்ரீவன் முதலானவர்கள் எதிர்த்தாலும் ரக்ஷித்தே தீருவேன் என்று ஊக்கக் குறைவில்லாமல் ரக்ஷணத்தை செய்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பெரியாய்! - வேதத்தை நினைக்கிறாள் ஆண்டாள். வேதங்கள் அனந்தம் - எண்ணி அடங்கமுடியாதது. அவனும் அனந்தன். வேதம் அனாதி - ஆதி அந்தம் இன்றி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாதது. - அவனும் அப்படித்தான். அப்படி அவனது சுவாசமாக இருக்கிற வேதத்துக்கும் பெரியவனாக இருப்பவனே! என்கிறாள். இதற்கு பூர்வாசார்யர்கள் பகவானின் பெரிய தன்மையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்து பலவாறாக சொல்வர், “அந்த ப்ரதிக்ஞா சம்ரக்ஷணத்தளவின்றியேயிருக்கும் பலமென்றுமாம்!”, “ஆஸ்ரித விஷயத்தில் எல்லாஞ் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருக்கை என்றுமாம்!”, “தன் பேறாயிருக்கை என்றுமாம்!”, “தன் பெருமைக்கு ஈடாக ரக்ஷிக்குமவன் என்றுமாம்” என்று பலவாறாக அவன் பெரிய தன்மையை, அதே நேரத்தில் எளிமையை சொல்கிறார்கள்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! - ‘பர வியூஹ அந்தர்யாமி தஸைகள் போலன்றிக்கே, சேதன ஜனங்கள் மத்யத்தில் தோற்றமாய் நின்ற’ என்று பூர்வாசார்யர்கள் சொல்கிறார்கள். வேதத்தைவிட பெரியவனான உன்னை, ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டோம், யாரோ சொன்னார்கள் கேட்டோம் என்று இல்லாமல் இங்கே எங்கள் மத்தியில் வந்து தோன்றினாயே! என்று அவன் செளலப்யத்தை - எளிய தன்மையை எண்ணி ஆச்சர்யப் படுகிறாள். ‘சுடரே’ என்ற பதத்துக்கு பூர்வாசார்யர்கள் மிகவும் உகந்து ‘ஸம்ஸாரிகளைப் போலே பிறக்கப் பிறக்க கறையேறுகையன்றிக்கே, சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிவிடா நிற்கை’ என்றார்கள். ஜீவர்கள் பூமியில் பிறந்து பிறந்து கறையேறிப்போய் இருக்கிறோம். ப்ரக்ருதியின் மாயையில் மூழ்கி இருக்கிறோம். ஆனால் அவன் எத்தனை தடவை வந்து பிறந்தாலும் மாயையில் சிக்குவதில்லை.

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி, ஒவ்வொரு உடலினுள்ளும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருக்கிறது. இதில் ஜீவாத்மா எல்லா சுக துக்கங்களையும் அனுபவிக்க, பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த பாவ புண்ணியங்கள், சுக துக்கங்கள் அந்த பரமாத்மாவை தீண்டுவதில்லை. அதனால் அது அப்பழுக்கில்லாத சோதி, சுடர் என்று ஆண்டாள் சொல்கிறாள். அதோடு, ஏற்கனவே வையத்து வாழ்வீர்காள் பாசுரத்தில் பார்த்தபடி, அவன் சுடர் விட்டு ஒளிர்வது இந்த உலகில் தானே - இங்கேதானே அவன் பெருமைகள் சுடர்விட்டு ஒளிரும் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். துயிலேழாய்! - நீ இந்த உன் தன்மைகளையெல்லாம் தெரிந்தும், நாங்கள் ஏற்ற கலங்களாக இருப்பது தெரிந்தும் நீ இன்னும் உறங்கலாமா!

மாற்றார் உனக்கு வலி தொலைந்து - ஆஸ்ரிதர்களையும், அவர்களது விரோதிகளையும் நினைத்துப் பார்த்து சொல்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு எதிரிகள் யாரும் இல்லை, அவனது பக்தர்களுக்கு விரோதியை தனக்கும் விரோதியாகவே கொள்கிறான். இங்கே ஆண்டாள், பக்தனுக்கும் விரோதிக்கும் சில விதங்களில் ஒற்றுமை சொல்கிறாள்.

பக்தனும் உன்னை நினைத்து தன் முயற்சி, வலிமை, தன் சாமர்த்யம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அகங்கார மமகாரங்களை தொலைத்து விடுகிறான். விரோதியோ, ஹிரண்ய கசிபு, ராவணன் என்று உனக்கெதிரே நின்று தன் வலிமைகள் அனைத்தையும் தொலைத்து பகவானின் குணங்கள் தோன்ற செய்த புண்ணியத்துக்கு அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பக்தர்களும், அவர்கள் விரோதிகளும் கூட, தம் வலிமை எல்லாம் தொலைத்து, தங்கள் நாடு, பொருள், பலம் எல்லாம் தொலைத்து உன் வாசலில் வந்து இப்பேர்ப்பட்டவனை நமக்கு சமம் என்று எண்ணினோமே என்று ஆற்றாமை தோன்ற உன் அடிபணிகிறார்கள்.

அப்படி ‘போற்றியாம் வந்தோம் புகழ்ந்து’ என்று உன்னை நாங்கள் போற்றி புகழ்ந்து வந்தோம், உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்து உன் வீரத்துக்கு தோற்று உன்னிடம் வந்து அடைந்தார்கள். உன் பக்தர்கள் உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு தோற்று உன்னிடம் வந்து சேர்ந்தார்கள். எங்களை இந்த கோஷ்டியில் எதாவது ஒன்றில் சேர்த்தாவது ரக்ஷிக்கக் கூடதா! யாம் போற்றி வந்தோம் என்று பகவானுக்கே பல்லாண்டு சொல்லி போற்றிய பெரியாழ்வாரை ஆண்டாள் நினைத்து அதைப்போலே
‘ஆற்றாமை இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே வந்தோம்’ என்று சொல்கிறாள்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 20 - முப்பத்து மூவர்

ஜனவரி 5, 2008 · No Comments

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்!
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்!
செப்பென்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலேழாய்!
உக்கமுந் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.

இங்கே இந்த திவ்ய தம்பதிகளுக்குள் போட்டியென்றெல்லாம் சொல்வது நமக்கு தத்துவத்தை விளக்கவதற்காகத்தான் - ஒரே ப்ரஹ்மம் - நிர்விசேஷமாக சின் மாத்ரமாக - அத்வதீயமாக ஒன்றாகவே இருக்கிறது - அதுவும் நிர்குணமாக இருக்கிறது என்று சொல்வது ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லுகிற அனேக வேத வாக்யங்களை தள்ளி வைப்பது போல் ஆகும். அது தத்துவம் அன்று. பகவானும் பிராட்டியும் திவ்ய மிதுனமாக - இரட்டையாகவே இணை பிரியாமல் இருக்கிறார்கள். வேதம் பகவானின் அனந்தமான கல்யாண குணங்களைச் சொல்லுகிறது. இப்படி குண சம்ருத்தி உள்ள ப்ரஹ்மத்திடம் குணக்லேசம் உடைய நாம் எப்படி சென்று சேர்வது? அதற்குத்தான் பிராட்டி புருஷகாரம் - சிபாரிசு செய்கிறாள்.

இப்படி இரண்டு பேர்கள் இருப்பதால் உடனே நம் மனதில் ஐயம் எழ வாய்ப்பிருக்கிறது - இரண்டு பேர் என்றால், அதில் யார் பெரியவர்? ஒருவர் செய்யும் செயலை மற்றவர் தடுப்பரோ? என்றெல்லாம் தோன்றக்கூடும். அது தத்துவமன்று என்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் வீர பல பராக்ரம ப்ரக்யாதிகளை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் ஸ்த்ரீத்வ பூர்த்தியை சொல்கிறாள். நங்காய் என்பது பூர்ணமான பெண்ணே! என்று பொருள். பகவானே ஸ்ருஷ்டி - ஸ்திதி - ஸம்ஹார வ்யாபாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான். பிராட்டி அதில் அவனோடு சேர்ந்து அவனுக்கு உற்ற துணையாகவும் அவனுக்கு சந்தோஷத்தை - பூர்த்தியை தரக்கூடியவளாகவும் இருக்கிறாள் என்பதை இங்கே சுத்தாந்த சித்தாந்தமாக ஸ்தாபனம் செய்கிறாள்.

முப்பத்துமுவர் என்று ஆதி தேவர்களான ஏகோதச ருத்ரர்கள், த்வாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இருவர் - என்று முப்பத்து மூன்று தேவர்களுக்கும், அவர்கள் வம்சத்து தேவர்களுக்கும் ஒரு கெடுதி ஏற்பட்டால் உடனே ஓடிப்போய் முன்னே நிற்கிறான். கப்பம் என்பது கம்பனம் என்ற கஷ்டத்தை - சிரமத்தை குறிக்கும். இப்படி ஓடி ஓடி தேவர்களது துயர் துடைப்பவனே! எங்கள் குரல் கேட்டு உறக்கம் தவிர்த்து எழுந்திராய்! எங்களுக்கு அமரரைப்போல் ராஜ்யங்கள், ஐஸ்வர்யங்கள் வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் கடாக்ஷத்தையே எதிர்ப்பார்த்து இருக்கிறோம்.

செப்பம் உடையாய்! இனிமை, எளிமை, கருணை, தைரியம் என்று எண்ணற்ற குணங்களால் பூர்ணமாக இருப்பவன்! திறலுடையாய்! சாமர்த்யம் உடையவன். இந்த இடத்தில் அவனது திறல் - பராபி பவந ஸாமர்த்யம் என்று பூர்வாசார்யர் அருளுகிறார். ஆஸ்ரித விரோதிகளாக இருப்பவர்கள் அவனை உணர்ந்து கொள்ளவே முடியாதவனாக இருக்கிறானாம்!

தேவர்கள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கு சில படிகள் மேலானதாக இருக்கிறது. தேவர்களை விட உயர்ந்த ப்ரஜாபதிகள் ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவர்களுக்கும் சில படிகள் மேலே இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் உயர்ந்த ப்ரம்மா இந்த ப்ரஹ்மத்தை அண்டினால் அது அவருக்கும் மேலே சில படிகள் உயர்ந்து இருக்கிறது. இவர்களெல்லாரையும் விட தாழ்ந்த ஜீவர்களுக்கும் அது சில படிகளில் எட்டிப்பிடிக்குமாப்போலே தென்படுகிறது. அணோர் அணீயான்! மஹதோ மஹீயான்! என்று அணுவுக்குள் அணுவாக, பெரியவற்றுக்கும் மிகப்பெரியதாக இருக்கும் ப்ரஹ்மத்தின் சாமர்த்யத்தை திறலுடையாய்! என்று ஆண்டாள் சொல்கிறாள்.

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்! - அவன் ஆஸ்ரித விரோதிகளை தன் சினத்தினால் தண்டிக்கிறான் - ஆஸ்ரிதர்களுக்கோ காருண்யத்தால் அதன் குளிர்ச்சியால் நனைக்கிறான்! இப்படி சில ஜீவர்களை தண்டிப்பதும், சில ஜீவர்களை ரக்ஷ¢ப்பதும் அவனுக்கு குறையாகாதோ? என்றால் இல்லை - அவன் விமலன்! மலம் என்றால் தோஷம் - அவன் குற்றங்கள் அற்றவன் - விபீஷண சரணாகதியின் போது, அங்கே இருந்த சுக்ரீவன் முதலானவர்கள் எல்லோரும் தடுக்க, ராமன் சொல்கிறான் - அந்த ராவணனே என்னிடம் சரணடைய வந்தாலும் அபயம் தருவேன் என்று சொல்லும் போது அவனது கல்யாண குணங்கள் வெளிப்படுகிறது. அத்தகைய உயர்ந்த ப்ரஹ்மத்தை உணராமல் தம்மை தாமே தாம் தாழ்த்திக்கொள்கிறார்களே தவிர அவன் ஒருவரையும் விலக்குவதில்லை.

அடுத்து பிராட்டியை அவள் பெருமைகள் தோன்ற மங்காளாசாசனம் செய்கிறார்கள். செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் என்று நாயகனான பகவான் உகந்து பிராட்டியும் உகப்பிக்கும் அவயவ லக்ஷணங்களைச் சொல்லி அவர்களுக்குள் நெருக்கத்தைச் சொல்லி, திருவே! துயிலெழாய்! என்று அந்த மஹாலக்ஷ்மியே இங்கே நப்பின்னை என்று திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு! - இங்கே பூர்வாசார்யர்கள் ‘உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’ என்று அர்த்தம் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, பஞ்ச லக்ஷம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா! இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் ப்ரஹ்மமாயிற்றே!
எப்படி தசரதன் ராமனை ‘தந்தேன்!’ என்று விஸ்வாமித்திரரிடம் எடுத்துக்கொடுத்தானோ அப்படி உன் மணாளனை தூக்கி எங்களிடம் கொடுத்து விடு என்கிறார்கள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அசேதனங்களை எடுத்துக்கொடுப்பது போல், பகவானையும் தூக்கி பக்தர்களிடம் சேர்ப்பிக்கக் கூடியவள் அவள். உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று கைங்கர்யத்துக்கு. ஒன்று ஸ்வரூபத்தைக் காட்டுவதற்கு.  கைங்கர்யமும், ஸ்வரூப ஞானத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று ப்ரஹ்மத்தை அடைவதே மோக்ஷம். அதை தரவேண்டும் என்று மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் வேண்டுகிறார்கள்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 19 - குத்துவிளக்கெரிய

ஜனவரி 3, 2008 · 1 Comment

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

ஆண்டாளுடன் சேர்ந்த திருவாய்ப்பாடிப் பெண்கள் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் பகவானை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அடுத்த உந்து மத களிற்றன் பாசுரத்தில் பிராட்டியை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த பாசுரத்தில் மலர்மார்பா! என்று பகவானையும், மைத்தடங் கண்ணினாய்! என்று பிராட்டியையும் சேர்த்தே அனுசந்திக்கிறார்கள். இது ஒரு அபூர்வ அழகுடைய பாசுரம் - பராசர பட்டர் இந்த பாசுரத்தின் நினைவில்தான் திருப்பாவையின் தனியன்களுள் ஒன்றான “நீளா துங்க” என்ற ஸ்லோகத்தை அருளினார். அப்படி பாகவதர்கள் உகந்த பாசுரம் இது!

இந்த பாசுரத்தில் ஆண்டாளோடு சேர்ந்த ஆய்பாடி பெண்பிள்ளைகள் சிறு குழந்தைகளாக குதூகலித்து, பக்தியினால் உள்ளம் கரைய விகசித்து போகிறார்கள். விடிவதற்கு முன்னமே எழுந்திருந்து, “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று நாங்கள் இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான பகவான் மீது சயனித்து அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே! இது தத்துவமன்று! என்கிறார்கள்.

மாதாவாக பிராட்டி இவர்களுக்கு ப்ரியமானதையே செய்பவள். பிதாவாக பகவான் இவர்களுக்கு ஹிதமானதையே செய்கிறவன். ஒரு ஜீவன் எத்தனையோ பாவங்கள் செய்து பகவானிடம் சரணாகதி என்று வரும்போது, இவனுக்கேற்ற ஒரு பிறப்பைக் கொடுத்து, இவன் ஞானத்தைப் பெற செய்ய வேண்டும் என்று பகவான் நினைப்பனாம். பிராட்டியோ, இந்த ஜீவன் நமக்கு குழந்தை அல்லவா! அவன் அப்படி ஒன்று பெரிய பாவங்கள் செய்து விடவில்லை. இவனுக்கு ஞானத்தை நான் தருகிறேன்.. ப்ரம்ம வித்யையை நான் தருகிறேன். இவனை மறுபடி மறுபடி சம்சாரத்தில் சிக்க வைக்க வேண்டாம் என்று புருஷகாரம் செய்வளாம். பகவானும் அதை ஏற்று அப்படி ஞானம் பெற்ற ஜீவனை அழைத்து முக்தி கொடுத்து தன் பாம்பணை மேல் தூக்கி இருத்துவனாம்.

இப்படி மாதா பிதாக்களான இவர்கள் பஞ்ச சயனத்தில் படுத்திருப்பதைப் பார்க்கிறார்கள். அதுவும் சாதாரண பஞ்சு படுக்கை அல்ல அது. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய பஞ்ச குணங்கள் உள்ள படுக்கையாம் அது. இவர்கள், திவ்ய தம்பதிகளின் குழந்தைகளாக, உங்கள் படுக்கையில் முதலில் நாங்களன்றோ ஏறி காலால் துகைத்து விளையாட வேண்டும். நாங்கள் ஏறி விளையாடிய பின்புதானே இந்த படுக்கை நீங்கள் அனுபவித்து உகக்கக் கூடியதாகும்?? (இந்த அழகான விளக்கம் அடியேன் சொல்லவில்லை - பூர்வாசார்யர்கள் வியாக்கியானத்திலிருக்கிறது).

கண்ணன் போர்களில் யானைகளோடு பொருதி அவற்றைக் கொன்று அவற்றின் தந்தங்களை எடுத்து வந்து ‘கோட்டுக்கால்’ - நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட தந்தக் கட்டிலில், மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள். உந்து மத களிற்றன் பாசுரத்தில், இவர்கள் நப்பின்னையை அழைக்க அவளும் எழுந்து வர, பகவானுக்கு தன் பதவி மேல் சிறிது பயம் வந்து விட்டதாம். நானல்லவோ ரக்ஷ¢க்க வேண்டும் - இவளே முதலில் போகிறாளே! நம் வேலையை செய்ய முடியாமல் போகிறதே என்று அவளை பிடித்து அவள் கொங்கைகள் இவனது அகன்ற திருமார்பில் சரிய இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறானாம். அவனாவது ஆண்பிள்ளையாக வன்முறை காட்ட வேண்டியிருந்தது. இவளோ, ‘வாய்திறவாய்!’ என்று வெளியே கேட்கப்பட்டபோது ‘மா சுச:’ என்று பதில் கொடுக்கவொண்ணாத படி தன் பார்வையாலேயே தடுத்து விட்டாளாம்! அதனால் மைத்தடங்கண்ணினாய்! என்றார்கள்.

இங்கே கொங்கைகள் என்று சொன்னது அவள் மாத்ருத்வத்தை சொல்கிறது. குழந்தைக்கு பசிக்க தாய் பொறுப்பளோ! பகவான் நான் முந்தி என்று அவளை தடுக்கிறான். அவள் நான் முந்தி என்று அவனை தடுக்கிறாள். இவர்களது ஆர்த த்வனிக்கு அவள் மாத்ருத்வம் அவளை ரக்ஷ¢க்க சொல்லி தபிக்கப்பண்ணுகிறதாம். சென்ற பாசுரத்தில் இவர்கள் லீலாவிபூதிக்கு போட்டியிட்டுக் கொண்டதை சொன்னார்கள். இந்த பாசுரத்தில் லீலாவிபூதியிலிருந்து ஜீவாத்மாக்களை விடுவித்து நித்ய விபூதிக்கு அழைத்துச் செல்ல இந்த திவ்ய தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்களாம்!

இப்படி அவனது ரக்ஷகத்வத்தை அவளும், அவளது புருஷகாரத்தை அவனும் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள்.

→ 1 CommentCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 18 - உந்து மதகளிற்றன்

ஜனவரி 2, 2008 · No Comments

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இதற்கு முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையில் கண்ணனை எழுப்ப முயற்சித்த கோபிகைகள், தம் முயற்சியில் வெற்றி அடையவில்லை. அவர்களுக்கு அப்போது தான் பகவானை ஆஸ்ரயிக்க பிராட்டியின் புருஷகாரம் தேவை என்ற புத்தி வருகிறது. ‘ஆஸ்ரயண வேளையிலிறே க்ரமம் பார்ப்பது - போக வேளையிலே க்ரமம் பார்க்கப் போகாதே!” என்றார்கள் பூர்வாசார்யர்கள். க்ருஷ்ணனை அடைய விரஹ தாபத்தாலே வந்தவர்கள், தம்மை மறந்தார்கள் - சரியான உபாயத்தை -
க்ரமத்தை மறந்தனர். பிறகு புத்தி தெளிந்து இப்பாசுரத்தில் பகவான் க்ருஷ்ணனின் பிராட்டியான நப்பின்னையை புருஷகாரம் செய்தருள எழுப்புகிறார்கள். நப்பின்னை தேவி, யசோதையின் சகோதரரான ஸ்ரீகும்பரின் மகள் என்று சொல்வர். நப்பின்னை - நற்பின்னை என்பது நல் - பின்னை - நல்ல தங்கை (அக்காளைப் பற்றித்தான் தெரியுமே!) - என்று மஹா லக்ஷ்மியைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்றார் ஒரு பெரியவர்.

மதம் உந்துகின்ற களிறு - இயல்பாகவே பலமுள்ள யானை, மதம் பிடித்து விட்டால் அதன் மூர்க்கம் மிகவும் அதிகமாகி விடும். அத்தகைய யானைகளையும் எதிர்த்து நின்று சண்டை இடக்கூடியவராம் நந்தகோபர். ஓடாத தோள்வலியன் என்ற பதத்தில் அவரது வலிமை பேசப்பட்டது. இங்கே நந்த கோபரை ஆசார்யனாகக் கொண்டு நப்பின்னையை அடைய முயற்சிக்கிறார்கள். அதனால், மதம் பிடித்த களிரைப்போல நாஸ்தீக வாதிகள், துஷ்டர்கள் வந்தாலும் ஞான பலத்தால் எதிர்த்து வெல்லக்கூடிய சக்தி படைத்தவராம் நந்த கோபர். அப்பேர்ப்பட்டவரின் மருமகளே! என்று விளிக்கிறார்கள். அவரது மருமகள் - மஹா லக்ஷ்மியான இவளிடம் தர்ம பூத ஞானம் பிரகாசிக்கிறதல்லவா! அதோடு நந்த கோபர்தான் கொடை வள்ளலாயிற்றே.. இதற்கு முந்தைய பாசுரத்தில் சொன்னார்களே! அவரது மருமகளான நீ அவரையும் விட நிரவதிகமான காருண்யம் உள்ளவளன்றோ!

இப்படி இவர்கள் அழைக்க, நப்பின்னைப் பிராட்டி எழுந்து வரவில்லையாம்! திருவாய்ப்பாடி பெண்பிள்ளைகள் எல்லோருமே நந்தகோபருக்கு மருமகள்கள் தாமே… க்ருஷ்ணன் மேல் மாளாத காதல் கொண்ட பெண்கள் தானே எல்லோரும்…! என்று பேசாமல் இருந்துவிட்டாளாம். பின் இவர்கள் நப்பின்னாய்! என்று பெயர் சொல்லி, நீ இருப்பது உன் வாசம் கமழும் குழல்களிலிருந்தே தெரிந்தது. கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்! பகவான் கந்தப்பொருள். பிராட்டி அதிலிருந்து வரும் வாசனை. இணை பிரியாத இரட்டையராயிற்றே நீவிர்! நீ யாரென்று நாங்கள் கண்டுகொண்டோம். எங்களை நீயே கடைத்தேற்ற வேண்டும்! என்று இரைஞ்சுகிறார்கள். இதற்கு நப்பின்னை, நடுராத்திரியில் வந்து எழுப்புகிறீர்களே! ஏன் என்று கேட்க, இல்லை பொழுது புலர்ந்தது… ‘வந்தெங்கும் கோழி அழைத்தன காண்!’ என்றார்கள்.

அது சாமத்துக்கு சாமம் கூவும், சாமக்கோழியாகக்கூட இருக்கலாம் என்று நப்பின்னை சொல்ல, இவர்கள் உன் வீட்டு ‘மாதவிப் பந்தல்’ மேல், பலகாலும் - பலமுறை குயில் முதலான பக்ஷிகள் கூவுவதை நீ கேட்கவில்லையா! என்றார்கள். அதற்கு அவ்விடத்திலிருந்து பதில் வராமல் போகவே உள்ளே என்ன நடக்கிறது என்று கதவில் துவாரம் வழியாக பார்த்து அங்கே கிடைத்த சேவையை ஆச்சர்யமாக சொல்கிறார்கள். நப்பின்னை ஒரு கையில் கண்ணனையும், மறு கையில் அவனோடு போட்டியிட்டு வென்ற பந்தினையும் பிடித்து வைத்துக் கொண்டு தூங்குகிறாளாம். அதென்ன… ஒரு கையில் நித்ய விபூதியாக பகவானையும், மறுகையால் லீலாவிபூதிக்கு அடையாளம¡க பந்தையும் இவள் பிடித்திருக்கிறாள்! என்று ஆச்சர்யப் படுகிறார்கள். பிஞ்சு விரல்கள் நிறைய அள்ளி நீ பிடித்திருக்கும் பந்தாக நாங்கள் பிறந்திருக்கக்கூடாதா! எதற்கு எங்களுக்கு சைதன்யம் உன் ஸ்பர்சம் இல்லாமல்! அசேதனமான பந்தாகவே இருப்போமே உன் கை படுமென்றால்!

அடுத்து சொல்கிறார்கள், நாங்கள் வந்தது உனக்கு ப்ரியமானவனான - உன் ப்ரியத்தை பெற்றவனான கண்ணனைப்பாடத்தான்! நீ மைத்துனமை பாராட்ட கண்ணனிடம் ஆசையோடு இருக்கிறாய்! நாங்களும் அப்படித்தான்! என்கிறார்கள். கண்ணனை அவள் ஏற்கனவே அடைந்தவள். இவர்கள் அடைய தவிப்பவர்கள். அதற்கு அவள் உதவியை நாடுபவர்கள். அதனால் நந்தகோபரிடமோ, யசோதையிடமோ, பலராமனிடமோ சொன்னது போல், எங்கள் கண்ணனை எங்களிடம் கொடுங்கள் என்று கேட்க
முடியவில்லை. அப்படிக் அங்கெல்லாம் கேட்டும் நடக்காமல் போய்விட்டது. அதனால் உன் மைத்துனன் என்று பகவானிடம் நப்பின்னைப் பிராட்டியின் சம்பந்தத்தைச் சொல்லி அவள் புருஷகாரத்தை வேண்டுகிறார்கள்.

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப என்ற பதத்தில் இவர்கள் அவள் அபய வரத ஹஸ்தங்களை காண தவிப்பது தெரிகிறது. நாங்கள் உள்ளே கதவை திறந்து கொண்டு வர முடியாமல் தவிக்கிறோம். நீயே வந்த திற அம்மா! உன் செந்தாமரை போன்ற கரங்கள் கதவைத் திறக்க நாங்கள் அதை தரிசிக்க வேண்டும். வந்து திறவ¡ய் மகிழ்ந்து! என்று சொல்லும் போது, மஹா லக்ஷ்மியான நப்பின்னையிடம் தர்ம பூத ஞானம் சுடர் விட்டு ஒளிர்கிறதாம். அவள் க்ருஷ்ணனை தம்முடனேயே எக்காலமும் கொண்டிருப்பதால் அவள் முகத்தில் மகிழ்ச்சி தளும்ப அந்த நிலையில் எங்களுக்கு தரிசனம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்த அத்யாச்சர்யமான பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் மஹா லக்ஷ்மியை நமக்குள்ளேயே உணரமுடியும். குரு பரம்பரைக்கதைகளில் இத்தகைய சம்பவம் உண்டு. உடையவர் எம்பெருமானார் ராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சந்யாசியாக தினமும் உஞ்சவ்ருத்தி எடுத்து உண்பது உண்டாம். அப்படி வரும்போது திருப்பாவை பாசுரங்களை அனுசந்தித்தும், வாய்விட்டு பாடியும் வரும்போது, அவரது ஆசார்யனான திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார்.

அப்போது இந்த உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியின் போது, திருக்கோஷ்டியூர் நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் ரொம்பவும் அனுபவித்துப் பாடிக்கொண்டே வந்ததில் இந்த காட்சியை காண நேரவும் அப்படியே மூர்ச்சித்து விழுந்து விட்டாராம்!

அந்த செய்தி கேட்ட, திருக்கோஷ்டியூர் நம்பியும் வெளியே வந்து ராமானுஜரை ஆஸ்வாசப்படுத்திவிட்டு, என்ன ‘உந்து மத களிற்றன்’ பாசுர அனுசந்தானமோ! என்றாராம். அவரும் அப்படி அனுசந்தித்ததால் தானே இந்த அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது! பெரியவர்கள் ஆழ்ந்து அனுபவித்ததால் இந்த பாசுரம் மிகுந்த ஏற்றம் பெற்றது என்பது தேறும்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 17 - அம்பரமே

ஜனவரி 1, 2008 · No Comments

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே ப்ரவேசித்த ஆண்டாள் நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், க்ருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள். இங்கே ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள்.

நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், அன்னம், தண்ணீர் என்று தானம் செய்கிறார். அதனால் அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் - நந்த கோபாலா! என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறார்கள். இத்தை தாரக, போஷக, போக்யமென்று பூர்வாசார்யர்கள் சொல்வர். தாரகம் - என்பது உயிர் தரிக்கப் பண்ணுவது - நீரின்றி உயிர் தரிக்காது, அதேபோல் போஷகம் என்பது வாழ்வதற்கு தேவையான போஷணை - அன்னம் இன்றி உடல் போஷிக்கப் படமுடியாது - ஆடையின்றி உயிர் வாழ்ந்தாலும் வாழ்ந்ததாகாது - அரை மனிதன் ஆகிவிடுவோம் - அது போக்யம் - வாழ்க்கையை மனிதனாக அனுபவிப்பதற்கு அடிப்படை - ஆக தாரக, போஷக, போக்யம் தருவதில் எம்பெருமானுக்கு நிகர் நீர் - என்று சொல்வதாக அர்த்தங்கள் சொல்வர்.

வேறொரு வகையில், எங்களுக்கு அம்பரமே கண்ணன்! சோறே கண்ணன், தண்ணீரே கண்ணன் - என்று எல்லாமும் எங்களுக்கு கண்ணன். கண்ணனுக்கு நாங்கள் அன்னம் - அவன் எங்களை சாப்பிடுகிறான் - நாங்கள் அவன் எங்களை உண்டு ஆனந்தப் படுகிறானே - அந்த ஆனந்தத்தை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று (அஹமன்ன: அஹமன்னாத: என்றபடி) குறிப்பிடுவதாகவும் அர்த்தங்கள் உண்டு. இன்னும் ஒரு வகை அர்த்தமும் உண்டு - நந்த கோபரே நீர் எவ்வளவோ தானம் செய்கிறீர் - அதைக் கொடுக்கிறீர் - இதை கொடுக்கிறீர் - என்று சொல்லி எங்களுக்கு எங்கள் பெருமான் கண்ணன் வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவதாகவும் அர்த்தம் உண்டு.

கொம்பு அனார்கெல்லாம் கொழுந்தே! - வஞ்சிக் கொம்பைப்போல உள்ள ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே! எங்கள் குலத்தை விளக்க வந்த குலவிளக்கே! எம்பெருமானின் மனைவியான எம்பெருமாட்டியே! யசோதா! இங்கே எழுந்திராய் என்று சொல்லாமல் அறிவுறாய் என்கிறார்கள். ஒரு பெண்ணினுடைய கஷ்டம் இன்னொரு பெண்ணுக்கன்றோ தெரியும்! இங்கே இவர்களின் த்வரை உணர்ந்து கண்ணனை தரவேண்டி பெண்ணான உனக்கு தெரியாததா! அறிவுறாய் என்கிறார்கள்.

அடுத்து, கண்ணன் அவர்கள் பார்வைக்கு வர, மற்ற எல்லாவற்றையும் மறந்தார்கள். மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, எழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்கிறார்கள். ‘உறங்குகிற ப்ரஜையைத் தழுவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே’ என்பர் பூர்வாசார்யர். எப்படி தாய் உறங்குகிற தன் குழந்தையை தழுவிக்கொண்டு இருப்பளோ அப்படி நல்லவன், தீயவன், ஆஸ்தீகன், நாஸ்தீகன் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல் எல்லார் தலையிலும் தன் திருவடிகளை ஸ்பர்சிக்க செய்தானே! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் எழுப்பியும் கண்ணன் எழுந்திருக்க வில்லை. பிறகுதான் இவர்களுக்கு உரைக்கிறது - க்ரமப்படி க்ருஷ்ணனின் தமையனான பலராமனை அல்லவோ முதலில் எழுப்ப வேண்டும் - அவன் எழாத போது கண்ணன் எப்படி எழுந்திருப்பன்? என்று எண்ணி, பொன் போன்ற திருப்பாதங்களை பொலிய விட்டு உறங்கும் எங்கள் செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறக்கத்திலிருந்து எழுக! என்று அழைக்கிறார்கள்.

பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். பிராட்டியை பிரிந்து பல நாள் இருந்தவன், தம்பியை பிரிந்தவுடன் இக்கணமே உயிர்விட்டேன் என்றவனாயிற்றே! பலராமனோ தன் ஸ்வரூப ஞானத்தால் கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து பழக்கப்பட்டவனாதலால் அவனும் பவ்யம் காட்டி கண்ணனை விட்டு விலக முடியாத ஆற்றாமையால் அணைத்து படுத்து உறங்குகிறான். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 16 - நாயகனாய் நின்ற

டிசம்பர் 31, 2007 · No Comments

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில், பத்து கோபிகைகளை - ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளைகளை எழுப்பிய ஆண்டாள், அவர்களுடன் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள். பகவான் க்ருஷ்ணன் இருக்கக்கூடிய அந்த திருமாளிகையில், க்ஷேத்ராதிபதிகள், துவார பாலகாதிபதிகள் என்று கட்டுக்காவல் அதிகமாக இருக்கிறது. அங்கே வாயிலில் இருக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல் காப்போர்களை இரைஞ்சி, அவர்களுடைய உயர்வைச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். இங்கே இவர்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் தான் உத்தேஸ்யம் என்றாலும், அதை அடைய நடுவில் என்ன தடை நேருமோ என்று பயந்து, எதிர்படுகிறவர்களை எல்லாம் அடிபணிந்து வேண்டுகிறார்கள்.

நந்தகோபர் ஆய்ப்பாடி கோபாலர்களுக்கெல்லாம் நாயகர். அவருடைய திருமாளிகையில், கோவிலுக்கு த்வஜ ஸ்தம்பத்தைப்போல, கொடிக்கம்பம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில், அதில் மணிக்கதவம் என்று அழகாக இருக்கிறது. இவற்றுக்கு காவலும் இருக்கிறது. இதற்கு முந்தைய சில பாசுரங்களைப் போல், இந்த பாசுரத்திலும் பூர்வாசார்யர்கள் தம் உரைகளில், ஆண்டாளுடைய குழுவும், காவலாளிகளும் பேசுவதாக ஆச்சர்யமாக அருளியிருக்கிறார்கள்.

இவர்கள் கண்ணன் மேலுள்ள த்வரையினால், விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், கிளம்பி வந்திருக்கிறார்கள். நந்தகோபரின் காவல்காரர்களை பரமனின் ரக்ஷணத்துக்கு சஹாயம் செய்பவர்களாக கொண்டு, அவர்கள் பெயரைச் சொல்லி அழைக்காமல், அவர்களது கார்யத்தை, அதன் பெருமையைச் சொல்லி அப்பேர்ப்பட்ட இடத்தில் இருப்பவர்களே, எங்களை கதவைத்திறந்து உள்ளே அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள்.

நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள். ‘பயமுள்ள க்ஷேத்ரத்திலே மத்யராத்ரத்திலே’ வந்து மணிக்கதவம் தாள் திறவாய்! என்று கேட்கிறீர்களே! நீவிர் யாவர்’ என்று காவலாளிகள் கேட்கிறார்கள். பயமுள்ள க்ஷேத்ரம் என்று ஆய்ப்பாடியை பூர்வாசார்யர் திருஅயோத்தியோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.

இது ராமனுக்கு அனுகூலமான அவனுக்கு ஒரு ஆபத்துக்களும் ஏற்படுத்தாத அயோத்தி அல்ல - இது ஆய்ப்பாடி, இங்கே கண்ணனுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. முளைக்கும் பூண்டுகளெல்லாம் விஷப்பூண்டுகளாய் இருக்கின்றன. அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவில் பூதனை, குதிரை, யானை, கொக்கு என்று எல்லாம் கண்ணனுக்கு தீமை செய்யக்கூடியதாய் இருக்கிறது. அதனால் நாங்கள் விழிப்புடன் காவல் காக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்றும் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள் என்று கேட்க, ஆண்டாள், ‘நாங்கள் ஆயர் சிறுமியரோம்!’ என்று பதில் சொல்லுகிறாள். இதற்கு காவலாளிகள் காவலாளிகள், நீங்கள் சிறுமிகள் என்றோ, ஆயர் குலத்தவர் என்றோ பார்த்து நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. பெண்களிலே சூர்ப்பநகை போன்ற அரக்கிகள் இருந்திருக்கிறார்கள். ஆயர் குலத்தவராக பூதனை வேடமிட்டு கண்ணனை கொல்ல வந்தாள். ஆகவே நீங்கள் ஆய்ப்பாடி சிறுமிகளாகவே இருந்தாலும், இந்த நேரத்துக்கு வந்தது ஏன்? என்று கேட்கிறார்கள் காவலாளிகள்.

ஆண்டாள் அதற்கு பதிலாக ‘அறை பறை’ என்று நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம் - துஷ்க்ருத்யங்கள் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை, என்று ஆண்டாள் சொல்கிறாள். சரி, பெருமானே வாக்கு கொடுத்தானோ! அப்படியானால் சரி, ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!’ என்று கதறுகிறார்கள். மாற்றி மாற்றி பேசாதே, உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் இருக்க, ஏற்கனவே தவித்து போயிருக்கிறோம். எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.

இதற்கு மனமிரங்கிய காவலர்கள், சரி போங்கள் என்று அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அசேதனங்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. ‘அநதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதேப்போலே, ஆத்மஸ்வரூபம், ஸ்வைவலக்ஷண்யத்தாலே, அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாயிருப்பது’ என்று சொல்கிறார் பூர்வாசார்யர். இந்த கதவுகள் தம் இயல்பால் பகவத் பக்தர்களுக்கும் உள்ளே விட மறுப்பவையாய் இருக்கின்றன. அதனால் இந்த க்ருஷ்ண ப்ரேமையுள்ள கதவை நீங்களே திறந்து உதவுங்கள் - நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 15 - எல்லே! இளங்கிளியே!

டிசம்பர் 30, 2007 · No Comments

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

‘திருப்பாவையாவது இப்பாட்டிறே’ என்று இந்த பாசுரத்தை பூர்வாசார்யர் ஆச்சரியப்பட்டு சொல்கிறார். திருப்பாவையில் இந்த பதினைந்தாம் பாசுரத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரமான ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தையும் இதல்லவோ திருப்பாவை என்று நெகிழ்ந்து சொல்கிறார். இந்த பாசுரத்தை பாகவத தாஸ்யம் சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்வதாகவும் கொண்டு அப்படி ஆச்சரியப்பட்டு சொல்கிறார்.

இதுவரை விடியற்காலையில் எழுந்திருந்து நீராடி, க்ருஷ்ணானுபவத்தை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிக்க போவதற்காக ஒவ்வொரு வீடாக சென்று ஆண்டாள் ஆய்ப்பாடி பெண்பிள்ளைகளை அழைக்கிறாள். இன்றைய பாசுரத்தில் கடைசியாக வயதில் சிறியவளான பெண்பிள்ளையை இளங்கிளியே! என்று கூப்பிட்டு அழைக்கிறாள். இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்பிள்ளையை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விட்டார்கள். ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் சேர்ந்தே பரஸ்பர ஸம்வாதமாக அமைந்திருக்கிறது.

சென்ற பாசுரத்தில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு! என்று இவர்கள் சொல்ல, அந்த வார்த்தைகளை இந்த பாசுரத்தில் வரும் பெண்ணும் கேட்டு, ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்’ என்று சொல்லிப் பார்க்கிறாள். அப்படியே அந்த நாமங்களிலே கரைந்து அமர்ந்து விடுகிறாள்.

ஆண்டாள் மற்ற பெண்களுடன் இவள் வீட்டு வாசலுக்கு வந்து, ‘எல்லே! இளங்கிளியே… இன்னும் உறங்குகிறாயோ!’ என்று கேட்க, இவள் ஏற்கனவே எழுந்து இவர்களுக்காக காத்திருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. இவள் இங்கே பகவந்நாமத்தை அனுசந்தித்து அதிலே தோய்ந்து இருக்கும் நிலையில் அவர்கள் பேசுவது இவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி சில்லென்று என் அனுபவத்தின் நடுவே அழைக்கிறீர்களே! சில்லென்று அழையேன்மின்! பூர்ணத்துவம் பெற்றவர்களே - நங்கைமீர், போதர்கின்றேன்! நான் வந்து கொண்டே இருக்கிறேன், இருங்கள் என்கிறாள். அவள் அப்படி சொல்வதற்கு, பூர்வாசார்யர் ‘திருவாய்மொழி பாடாநின்றால், செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யம் ஆமாப்போலே!” என்று சொல்கிறார். அதாவது, திருவாய் மொழி பாராயணம் செய்ய நிறைய தனத்தைக் கொடுத்து ஒருவர் ஏற்பாடு செய்திருந்தாராம். திருவாய்மொழி பாராயணமும் ஆரம்பித்தாகிவிட்டது. அவர் சிறிது காலதாமதமாக அந்த கோஷ்டிக்கு நடுவில் வர - இவர்கள் திருவாய்மொழி பாராயணத்தை சற்று நிறுத்தி விட்டார்கள்.

ஆழ்ந்து அனுபவிக்க இப்படி ஏற்பாடு செய்தவரே தடையாக இருக்கிறதைப்போலே, இந்தப் பெண் அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மற்ற பெண்பிள்ளைகள் அழைப்பது அவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி ஒரு பாகவதனுக்கு இன்னொரு பாகவதன் இடைஞ்சலாக இருப்பர்களோ? உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா.. உன் தாமதத்திற்கு எங்களைக் குறை சொல்லலாமா ? என்ற அர்த்தத்தில் - வல்லையுன் கட்டுரைகள் - நீ கட்டி உரைப்பதில் வல்லமை உடையவள் - பண்டே உன் வாயறிதும் - உன் வாக் சாதுர்யம் எங்களுக்கு புதிதல்ல - பழைய நாட்கள் தொட்டு எங்களுக்கு தெரியும், என்கிறார்கள்.

அந்தப் பெண் இதற்கு பதிலாக, நான் கெட்டிக்காரியல்ல - நீங்களே வல்லமை உடையவர்கள் ஆகட்டும் - வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! தவறு என்னுடயதாகவே இருக்கட்டும் - என்கிறாள். இவ்வளவில், இவள் தமோ குணம் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவள் அல்ல. ரஜோ குணத்தால் சண்டை இட விரும்புபவளும் அல்ல - இவள் சத்வ குணத்தை உடைய பெண் - தவறை தன்னுடையதாகவே ஏற்றுக் கொள்கிறாள். நீங்கள் பெரியவர்கள், நான் சிறியவள் என்ற நைச்ய பாவத்தை வெளிப்படுத்துகிறாள். இதெல்லாம் தான் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய உயர்ந்த குணங்கள் - பாகவதர்களுக்கு உரிய சீலங்கள்.

வெளியே மற்ற பெண்கள், “சரி, ஒல்லை நீ போதாய்!” - விரைவாக கிளம்பு - ‘உனக்கென்ன வேறுடையை’ - நீ மட்டும் வேறாக தனியாக பகவதனுபவத்தை அனுபவிக்கலாமா? எங்களோடு சேர்ந்து கொள்ள வா என்று அழைக்கிறார்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் காட்டிய வழியை விடுத்து நீ வேறு வழியில் செல்லலாமா? என்றும் அர்த்தம் சொல்வர். இதற்கு அந்தப் பெண், ‘எல்லாரும் போந்தாரோ?’ - எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள். ‘போந்தார் போந்து எண்ணிக்கொள்’ என்று
வந்துவிட்டார்கள் - நீயே வெளியே வந்து எண்ணிப்பார்த்துக்கொள், என்றார்கள் இவர்கள். இதற்கு பூர்வாசார்யர்கள், ‘நோன்பிற்கு புதியவர்களான மற்ற இளம்பெண்களும் வந்துவிட்டனரோ?’ என்று அவள் கருணையுடன் கேட்பதாக சொல்வர்கள்.

வல்லானை கொன்றானை, மாற்றரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட எங்களோடு வந்து சேர்ந்து கொள் என்று அழைக்கிறார்கள். வல் ஆனை - என்று குவலயாபீடம் என்னும் யானையை கொன்றான். கம்சன் முதலான அரக்கர்களை அவர்கள் அரக்க குணம் கெட அழிக்க வல்லவனான மாயக்கண்ணனை பாட வாராய் என்று அழைக்க அவளும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்! இந்த பாசுரத்தில், பகவந்நாமத்தை இடையறாது அனுசந்திக்க வேண்டும். பாகவதர்களை மதிக்க வேண்டும்.
கர்வம் - அஹந்தை இவைகளை விடுத்து, எளிமையாக நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும். ஆசார்யர்கள் சொன்ன வழியில் நடக்க வேண்டும். அனுஷ்டானத்தில் காலதாமதம் செய்தலாகாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரியதான குணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறாள்.

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 14 - உங்கள் புழக்கடை

டிசம்பர் 29, 2007 · No Comments

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

ஆண்டாள் தம் குழுவினருடன் ஒவ்வொரு வீடாக சென்று இன்னும் எழுந்திருந்து வராத பெண்பிள்ளைகளையும் எழுப்பி தம்மொடு சேர்த்துக்கொண்டு செல்கிறாள். இங்கே இந்தப் பாசுரத்தில் அப்படி ஒரு வீட்டு பெண்ணை விடியலுக்கான உதாரணங்களை சொல்லி எழுப்புகிறாள். திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து, பதினைந்தாம் பாசுரம் வரை பத்து பாடல்களில் பத்து பெண்பிள்ளைகளை எழுப்புகிறாள் - இதில் ஐந்து பாசுரங்களில் விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லியும் ஐந்து பாசுரங்களில் அப்படி ஒரு அடையாளத்தையும் சொல்லாமலும் எழுப்புகிறாள். இன்றைக்கு எழுப்பப் போகிற பெண் சற்று வாக் சாதுர்யம் உள்ளவள். அவளது மதுரமான பேச்சுக்கு கண்ணனே மயங்குவன் என்று இவளை விசேஷமாக எழுப்புகிறாள்.

கிராமப்புரங்களில் இப்போதும் ஒரு வழக்கு உண்டு - யாருக்காவது காத்திருந்து மிகவும் நேரமாகிவிட்டால், அவர்கள் வந்தவுடன் - “எவ்வளவு நேரம் காத்திருந்தேன்! காத்திருந்து காத்திருந்து அலமந்து போச்சு!” என்பார்கள் - அதாவது அலர்மலர்ந்து போயிற்று - என்ற அர்த்தத்தில் - மிகவும் ம்ருதுவாக பூ மலரும் - அத்தனை நேரம் காத்திருந்தேன் என்று சொல்வது வழக்கம். அப்படி “பகலில் மலரும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் மலர, இரவில் மலரும் ஆம்பல் எனும் கருநெய்தற் பூக்கள் கூம்பிட எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் உனக்காக” என்கிறார்கள். இதைக்கேட்ட அந்த பெண், “என்னைப்பார்த்து உங்கள் நீங்கள் வாய்திறந்தது செங்கழுநீர் என்றும் நான் வாய்மூடி இருப்பதைப்பார்த்து ஆம்பல் என்று சொல்கிறீர்களா? உங்களைப்பார்த்து நான் வாயடைத்துப் போய்விட்டேன் என்றா சொல்கிறீர்கள்?” என்கிறாள். இவர்கள் “இல்லை, நிஜமாகவே பொழுது விடிந்தது - பூக்களெல்லாம் மலர ஆரம்பித்துவிட்டன…” என்று சொல்ல, “நாமெல்லாம் வயற்புறங்களில் பூக்களை பிரித்தும் மூடியும் விளையாடுவது உண்டு…, இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளமா?” என்று கேட்க, “வயற்புறங்களில் மட்டுமல்ல.. உங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள சிறு குளத்திலும் இதே கதை தான்… பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன…” என்று சொல்கிறார்கள்.

“அங்கும் நீவிர் அதுவே செய்தீர்” என்கிறாள் அவள். இவர்களெல்லாம் சிறுமிகளாக விளையாடுவதை இந்த பாசுரம் அழகாக வெளிப்படுத்துகிறது. “இதென்ன இப்படி சொல்கிறாய், அளற்று பொடியிலே (செந்நிற பொடி - காவி நிறம் என்று கொள்ளலாம்) புரட்டிய ஆடை தரித்து, தம் ப்ரம்ஹசர்யம் தோற்ற வெண்ணிற பற்களை உடையவராய் சைவ சந்நியாசிகள் தங்கள் திருக்கோயில்களில் சங்க நாதம் எழ, வழிபாடு செய்ய கிளம்பி விட்டார்கள். வைஷ்ணவர்களான நாம் இன்னும் தூங்கலாமா? அனுஷ்டானமே இல்லாது போயிற்றே?” என்கிறாள். சைவ சந்நியாசிகள் க்ருஹஸ்தர்களைப்போல் தாம்பூலம் தரிப்பதில்லை - அதனால் அவர்களை வெண்பற்கள் உடையவர் என்று சிறுவர்களுக்கே உரிய விதத்தில் குறிப்பிடுகிறாள்.

இந்த பாசுரத்தில், தொடர்ந்து நங்காய்! நாணாதாய்! என்று தொடர்ந்து சொல்வதற்கு பூர்வசார்யர்கள் ஒரு அழகான விளக்கம் சொல்கிறார்கள். இந்த பெண் மிகுந்த ஞானம் உடையவள் - ஆனால் அனுஷ்டானத்தில் சிறிது வாசி ஏற்பட்டதால் அதை குறிப்பிட்டு  காட்டுகிறார்கள். வெறும் ஞானம் மட்டும் இருந்து அதற்கு தகுந்த அனுஷ்டானம் இல்லை என்றால் அது ஊருக்கு உபதேசம் போல்தான் அமையும். ‘அது நாய் வாலைப்போலே’ என்றார்கள். நாய் வால் மற்ற மிருகங்களைப்போலே ஈ எறும்பு ஓட்டுவதற்கும் பிரயோசனம் இல்லை, குறிகளை மறைக்கவும் உபயோகம் இல்லை - பேருக்கு இருக்கிறது. அதுபோல ஞானம் இருந்து அனுஷ்டானம் இல்லாமல் இருப்பது கூடாது, அனுஷ்டானமும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.

வாய்பேசும் நங்காய்! உனக்கு வெட்கமே இல்லையே! க்ருஷ்ணன் பெண்களைப் பொய்யுரைத்து ஏமாற்றும் தீம்பன் - அவனுடைய சம்பந்தத்தால் அவனைப்போலவே நீயும் வாயால் பேசினாய்… செயலில் ஒன்றும் காணோமே! எங்கள் குறைதீர எழுந்திருந்து வருவாய்! என்று அழைக்கிறாள். “உங்களோடு வந்து நான் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?” என்று அவள் கேட்க, சங்கொடு சக்கரத்தையும் ஏந்தும் தடக்கைகளை கொண்ட பங்கஜாக்ஷனான பங்கய கண்ணனை பாடு! என்றார்கள்.

வ்யாக்யான கர்த்தா இங்கே ஒரு அழகான விளக்கம் சொல்கிறார். அரவிந்த லோசனான பகவான் சங்கையும், சக்கரத்தையும் இரு மலர்களைப்பொலே தாங்குகிறானாம். ஒன்று சூர்யனாகவும் இன்னொன்று சந்திரனாகவும் இருக்கிறது. இதில், அவனது நாபி கமலம் மலர்ந்து மலர்ந்து கூம்புகிறதாம். இவனோ, ‘கண்ணாலே நமக்கெழுத்து வாங்கி, நம்மையெழுத்து வாங்குவித்து கொள்ளுமவன்’ என்று ஏமாற்றுகிறான். அதாவது அவன் கண்ணழகை காட்டுவனாம். நாம் அதில் மயங்கி அருகே செல்ல, நம்மை அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு விடுவனாம். உறங்காவில்லி தாசர் கதை நினைவுக்கு வருகிறது. இப்படிப்பட்ட மாயனை எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து பாடு என்று சொல்ல அவளும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்!

→ No CommentsCategories: Tiruppavai · தமிழ்ப்பதிவுகள் · திருப்பாவை · பக்தி · வைஷ்ணவம்

திருப்பாவை 13 - புள்ளின்வாய்

டிசம்பர் 28, 2007 · No Comments

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

போதரிக் கண்ணினாய்! என்று ஆச்சரியமாக இந்த வீட்டுப் பெண்பிள்ளையை அழைக்கிறா