Archive for பிப்ரவரி, 2005

நாத ப்ரும்மம் 1

ஆத்ம மத்ய கதா: ப்ராணா:
ப்ராண மத்ய கதோ த்வனி:
த்வனி மத்ய கதோ நாத:
நாத மத்யே சதாசிவ:
– ஸ்வரார்ணவம்

பொருள்:
உடம்பின் நடுவுள் உயிர்
உயிரின் நடுவுள் ஓசை
ஓசையின் நடுவுள் நாதம்
நாதத்துள் சதாசிவம் !

ப்ரம்மத்தை அடைவதற்கு இரண்டு பெரு வழிகளுண்டு. கர்ம மார்க்கம் – ஞான மார்க்கம். இவை உயர்ந்த தத்துவங்கள். கர்ம மார்க்கத்தில் கடமையை செய்து பற்றறுத்து வாழ்வது ஒரு வகை. கர்மாக்களை தாண்டி ஞானத்தை வேதாந்தத்தை பேரறிவை அடைந்து முதிர்ச்சி அடைவது ஒரு வகை. இது இரண்டுமே கடினம். முதலில் இவற்றை புரிந்து கொள்வதற்கே பக்குவம் தேவைப்படுகிறது.

இவ்விரண்டுக்கு இடையில் இருப்பதுதான் உபாசனை. அதாவது எல்லையில்லாத ப்ரம்மத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதை உபாசித்து “எழுப்புதல்”. ஒரு மாதிரி invocation. இந்த உபாசனையில் சிறந்தது நாதோபாசனை. இசை வழிபாடு.

வீணா வாதன தத்வக்ஞ: ச்ருதி ஜாதி விசாரத:
தாளகஞச்ச அப்ரயத்னேன மோக்ஷமார்க்கஸ ஸ கச்சதி:

மகரிஷி யக்ஞவல்க்யரின் வார்த்தைகள். ச்ருதி தவறாமல் சுத்தமான சங்கீத மார்க்கத்தின் நாதோபாசனை ஒன்று போதும். வேறொரு ப்ரயத்னம் எதுவும் தேவையே இல்லை. நாதோபாசனை என்பது அவ்வளவு உயர்ந்தது. இந்த நாதத்துக்குத்தான் எத்தனை சக்தி.

நாத உபாசனை செய்த மகான்களுள் த்யாகப்ரும்மத்துக்கே முதலிடம். தியாகராஜர் தன் ஆயுள் முழுவதிலும் ராம நாம ஜபத்திலும் நாதோபாசனையிலுமே செலவிட்டார். தியாகராஜர் பதினெட்டு வயதாகும் போது காஞ்சீபுரத்திலிருந்து வந்த ராமகிருஷ்ண யதீந்திரர் என்ற மகான் ராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்குமாறு உபதேசித்தாராம். அதன்படியே தன் மனைவி உதவியும் கூடி 96 கோடி முறை தியாகராஜர் ஜெபித்தாராம். இந்த ஜபத்தை செய்து முடிக்க இருபத்தியோரு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அப்படியென்றால் நாளொன்றுக்கு ஏறக்குறைய 1,25000 முறை. இப்படியே கணக்கு பார்த்தால் ஒரு நிமிடத்திற்கு 86 முறைகளுக்கும் சற்று மேல் வருகிறது. எத்தனை வைராக்கியம்! எத்தனை நம்பிக்கை.

அதனால்தான் ராமபிரானுக்கே பொறுக்கவில்லையோ என்னவோ. தியாகராஜர் ஜபத்தை முடிப்பதற்கு முன்பே பலமுறை தரிசனம் அருளினாராம். அச்சமயங்களில் ஏற்பட்ட அனுபவங்களே “கனு கொண்டினி” – “ஏல நீ தயராது ” போன்ற கிருதிகள். “போதிஞ்சின” – என்ற பஞ்ச ரத்ன கீர்த்தனையில் வரும் பதத்தில் இந்த கிருதிகளையெல்லாம் தான் இயற்றவில்லை இறைவனே போதித்தது என்கிறார்.

தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை கேட்டால் இசை வெள்ளத்தில் கல்லும் கரையும். அதுவும் கெளள(கெளளை என்றும் சொல்வர்) – “டுடுகு கல நன்னே” என்ற கிருதி “ராமா இன்னும் ஏன் தாமதம் – இதற்கு மேலும் ஏன் சோதிக்கிறாய் என்று கேட்பதுபோல் ஒரு இரைஞ்சல். பத்து சரணங்களுடன் கூடிய இந்த கிருதியை பிறகொரு முறை விரிவாக பார்ப்போம்.

தியாகராஜர் சிறந்த வைணிகர். வீணை வாசிப்பதில் வல்லவர். வீணையொலிக்கே உரித்தான கமகங்கள் தியாகராஜ கிருதிகளெங்கும் காணப்படுவது இதனால்தான். இவ்வளவு இசைச்செல்வம் இருந்தும் சிறிதும் தனக்கென சம்பாதிக்க முயலாது முற்றிலும் சர்வேச்வரனான பகவான் ஸ்ரீராமனிடமே தன்னை அர்ப்பணித்தார். தியாகராஜர் வாழ்ந்த காலத்தில் அவரது சீடர்கள் பலர் அவருடனே தங்கியிருந்தனர். இன்னும் பல மகான்களும் யாத்ரிகர்களும் தியாகராஜரைப்பற்றி கேள்விப்பட்டு வந்து அவருடனே தங்கிவிடுவர். தான் வாழும் காலத்திலேயே மதிப்பு உணரப்பட்ட பெருமை தியாகராஜருக்குத்தான் சேரும்.

இவர்கள் எல்லோருக்கு உணவளிப்பதற்கும் தங்க வசதி பண்ணி கொடுப்பதற்குமாகவே வாரம் ஒரு முறை உஞ்ச விருத்திக்கு தியாகராஜர் போவாராம். வழிநெடுக இல்லறத்தார்கள் பலரும் இந்த யோகியை வணங்கி அருள் பெறுவார்கள். தியாகராஜர் இதற்கு மேல் எதுவும் இவ்வுலகிலிருந்து எதிர்பார்த்ததில்லை. அரசனே அழைத்த போதும் அவர் வர மறுத்திருக்கிறார். அது வேறு ஒரு சம்பவம்.

தியாகராஜரின் வாழ்க்கையில் பல சுவையான சம்பவங்கள் உண்டு. இன்னும் பார்ப்போம்.

Advertisements

Comments (1)