Archive for மார்ச், 2005

நாத ப்ரும்மம் 4

இந்த உலகம் சரீர சுகங்களுக்கானது. இன்பம் என்று இங்கே சொல்லப்படும் எவையும் நேராகவோ மறைமுகமானதாகவோ போய் சேருவது இந்த்ரிய சுகங்களில் தான். அது நல்ல வீடாகட்டும் நிறைய செல்வமாகட்டும். மண், மனை, மனைவி, மக்கள் என்று எல்லாமே இந்த உடல் இருந்து அனுபவித்து, வாழ்ந்து, ஆண்டுஇன்புறுவதாகவே இருக்கிறது.

உலகில் உண்மை என்றால் பொய். தீமை என்றால் நன்மை. தர்மம் என்றால் அதர்மம் என்று இரட்டையாகவேஇருக்கிற பட்சத்தில் சரீர சுகம் என்றால் ஆத்ம சுகம் ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்?

இறைவனை, இறையை அனுபவிக்கும் அத்மானுபவத்தை உணர்ந்தவர்களுக்கு ஒன்று உயர்ந்தது – இன்னொன்று தாழ்ந்தது என்கிறது இல்லை. இறை இதுதான் – இது இல்லை என்பதே இல்லை. சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்றார்களே அதைப்போல…

ஆனால் மாயத்தோற்றங்களையே நாடும் மனது தானும் துன்பத்திலுழன்று சுயநலத்தில் சிக்கி “பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதர்”என்றதைப்போல் பலதவறுகள் பாவங்கள் செய்து விடுகிறது. இந்த அற்ப ஜீவாத்மாவின் சார்பில் யார் முறையிடுவது ?

த்யாகப்ரும்மம் தான் !

த்யாகப்ரும்மம் இந்த கருத்தை சொல்ல எடுத்த க்ருதிதான் டுடுகு கல நன்னே… என்ற க்ருதி. இந்த க்ருதிகெளள ராகத்தில் அமைந்தது. கெளள ராகமே மிக விசேஷமானது. ஒரு சுய இரக்கம் – பச்சாதாபம் – பக்திமுதிர்ந்த நிலை இந்த ராகத்தை கேட்கும் போது உணரமுடியும். இந்த விஷயத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாதவரை கூட சற்றே அசைத்துப்பார்த்து விடக்கூடிய ராகம். இந்த க்ருதியை அவசரமில்லாமல் பக்திக்காகவென்று நேரம் ஒதுக்கி கேட்டால் புரியும்.

அதுவும் இந்த ராகத்தில் வரும் நிஷாதம் சாகித்ய கர்த்தாவின் மனதை எளிய முறையில் படம் பிடித்து காட்டிவிடுகிறது.

துடுக்கு என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டு. துடுக்குத்தனம் என்றால் முரட்டுத்தனம். துஷ்டத்தனம். நல்லது அற்ற ஒரு தன்மை. Arrogance.

டுடுகு கல நன்னே தொரா கொடுகு ப்ரோசுரா யெந்தோ…

தமிழில் துரை என்பதுதான் தொரா என்று தெலுங்கில் வழங்கியுள்ளது. (சீதா – சீதை என்பதை போல்)…தொரா கொடுகு – சக்ரவர்த்தி திருமகன் – பெரிய இடத்து பிள்ளை – தாசரதி!

ப்ரோசு – என்றால் காப்பாற்று.. நான் மிகவும் துடுக்குத்தனம் – உள்ளவனாய் உழலுகிறேன் – நற்கதிக்கானவழிகாட்டுதலின்றி நல்லது எதுவென்றே அறியாது தீமையையே நாடி தீமையையே செய்து உழலுகிறேன்….ஹே தாசரதி… காப்பாற்று… (யெந்தோ என்றால் ரொம்ப.. நிறைய கெட்டதனங்கள்)

சரி காப்பாற்று என்று சொல்லியாகிவிட்டது – திருந்த சந்தர்ப்பம் கொடுப்போம் என்று தெய்வம் பேசாது இருந்து விட்டால்?

அடுத்த அனுபல்லவி சொல்கிறது…

கடு துர்விஷயாக்ருஷ்டுடை கடிய கடிய நிந்தாரு

ஆக்ருஷ்டுடை – ஈர்க்கிறது – எது ஈர்க்கும்? நல்லவிஷயம் என்றால் தான் தேடிப்போகவேண்டும். கெட்டது – கடு துர்விஷயா – கெட்ட விஷயங்கள் என்னை தேடித்தேடி ஒவ்வொரு நிமிடமும் என்னை அடைந்து என் நேரத்தை கொண்டு போய்விடுகின்றன…
அதனால் காப்பாற்று – சரணாகதி…

ஈசனேயானாலும் சக்தி தேவை – ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயப்படியும் பிராட்டியின் அனுக்கிரகமும் தேவை… அதுவே சரணாகதியின் முதற்படி… அதனால் தியாகையரும் பத்து சரணங்களுள்ள இந்த கிருதியில் முதல்சரணமாக இப்படி சொல்கிறார்…

ஸ்ரீ வனிதா ஹ்ருத் குமுதாப்ஜ வாங்மனசா கோசர… – (டுடுகு)

வெள்ளை தாமரை – குமுதாப்ஜ – தாமரையான உன் – ஹ்ருத் – இதயகமலத்தில் வீற்றிருக்கு ஸ்ரீவனிதா – மஹாலக்ஷ்மி என் வாக்கிலும் மனதிலும் தோன்ற செய்து என்னை காப்பாற்று… இந்த ஜீவனுக்கு லோகமாதாவே அபயம்…

அதென்ன… என் வாக்கிலும் மனதிலும் மஹாலக்ஷ்மி தோன்ற வேண்டும் என்று கேட்டால் அவள் – அவளுடனானஈசன் – பரப்ரும்மம் – ஏற்கனவே அங்கிருக்கவில்லையா? எங்கும் இருக்கும் சர்வாந்தர்யாமி – Omnipotent – Omnipresent – Omnisient – அந்த தெய்வம் இங்கே தோன்றவேண்டும் என்று கேட்பது எப்படி இருக்கிறது?இதுவும் த்யாகராஜரே எண்ணிப்பார்த்தது தான்…

அதுதான் இரண்டாவது சரணம்…

சகல பூதமுலயந்து நீவை யுண்டக மதிலேகா போயின – (டுடுகு)

எனக்கெங்கே தெரிகிறது நீ எங்கும் இருக்கிறாயென்று…சகல பூதமுலயந்து – எல்லா பூதங்களிலும் (எனக்கு தெரிந்ததென்னவோ ஐந்துதான் – உனக்கு தெரிந்ததுஎவ்வளவோ எல்லாவற்றிலும்) நீவை – நீயே இருக்கிறாய்… மதிலேகா போயின – அடப்பாவமே எனக்குத்தான்தெரியாமல் போய்விட்டது… 🙂

எப்போது இது தெரியவந்தது என்று கேட்டால்…

சிருத ப்ராயமுலநாடே பஜனா அம்ருத ரசவிஹீன குதர்க்குடைன – (டுடுகு)

சின்ன வயதிலிருந்தே உன் பஜனாம்ருதத்தை விட்டுவிட்டு அற்பமான குதர்க்கமான விவாதங்களில் பங்கு கொண்டு நேரத்தை விரயம் செய்து போக்கிவிட்டேன்… என்னை நானே பெரிய சாஸ்த்ரக்ஞன் – அறிவாளி என்று எண்ணி மற்றவர்களுடன் வாதப்பிரதிவாதங்கள் செய்து பொழுது போக்கிவிட்டேன். இது சாதாரண மனிதர்களின் ஸ்வபாவம். சொற்சிலம்பம் விளையாடுவது ஒரு சுபாவமாகவே கொண்டு பொழுதை கழிக்கிறேனே… உண்மையை உணராமல் என்று இந்த சரணத்தில் சொல்கிறார்.

மூன்றே சரணங்கள் தான் முடிந்திருக்கிறது… இன்னும் ஏழு சரணங்கள் இருக்கின்றன…கொஞ்சம் கொஞ்சமாக வரும் நாட்களில் பார்ப்போம்…

பாடலின் ஒரு பகுதி

பல்லவி
டுடுகு கல நன்னே தொரா..
கொடுகு ப்ரோசுரா… யெந்தோ

அனுபல்லவி
கடு துர்விஷயாக்ருஷ்டுடைகடிய கடிய நிந்தாரு

சரணம் – 1
ஸ்ரீ வனிதா ஹ்ருத் குமுதாப்ஜ வாங்மனசா கோசர… – (டுடுகு)

சரணம் – 2
சகல பூதமுலயந்து நீவை யுண்டக மதிலேகா போயின – (டுடுகு)

சரணம் – 3
சிருத ப்ராயமுலநாடே பஜனா அம்ருத ரசவிஹீன குதர்க்குடைன – (டுடுகு)

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்

நாத ப்ரும்மம் 3

இந்த நிதி சால சுகமா கீர்த்தனை விசேஷமானது…

ஏ மனமே நிதி.. செல்வம் ஒரு சுகமா?

இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வது? அவரவர் மனம் தான் பதில் சொல்லவேண்டும்.மனமோ மயங்கி கிடக்கிறது.

பத்ருஹரி வைராக்கிய சதகத்தில் இப்படி சொல்கிறார்…

अवश्यं यातरश्चिरतरमुशित्वापि विशया वियोगे को मेदस्तयजति न जनो यत्स्वयममून् ।
व्रजन्त: स्वातन्त्र्यादतुलपरितापाय मनस: स्वयं त्यक्ता ह्योते शमसुखमनन्तं विदयधति ॥

அவஸ்யம் யாதராஸ் சிரதரம் உஸித்வாபி விஷயா
வியோகே கோ பேதஸ்த்யாஜதி ந ஜானோ யத் ஸ்வயம் அமுன:
வ்ரஜந்த: ஸ்வாதந்த்ரயாத அதுலபரிதாபாய மனஸா:
ஸ்வயம் த்யாக்தா ஹ்யதே ஷம்சுகம் அனந்தம் வித(த)தி:

எவ்வளவு காலம் இருந்தாலும் இந்த உலக பொருள்கள் மறையவும் விட்டு செல்லவும் கூடியவை.அப்படியெனில் நான் அவற்றை விடுவதற்கும் அவை என்னை விடுவதற்கும் என்ன வேறுபாடு?அப்படியெனில் நல்லவர்கள் ஏன் பற்றறுப்பதில்லை? ஸர்வ சுதந்திரமாக பொருள்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் ஒருவன் விலகினால் அது அளவற்ற ஆனந்தத்திலும் நிம்மதியிலும் முடியாதோ?அதனாலேயே பொருளாசையை விட்டொழிக்க வேண்டும்…

இல்லை… முடியாது… நான் பற்றிய சம்சார பற்று என்னை விடாதெனில் இதுதானே எல்லார் வாழ்விலும்நடக்கிறது…

निवृत्ता भोगेच्छा पुरुशबहुमानोपि गलितस्समाना: स्वर्याता सुपदि सुहृदो जीवितसमा ।
शनॅर्यष्ट्शृत्थनं घनतिमिररुध्दे च नयने अने मृट: कायस्तदपि मरणापायचकित:

நிவிர்த்தா போகேச்ச புருஷபஹுமானொபி கலிதா
ஸமானா ஸ்வர்யதா: சபதி சுஹ்ரிதோ ஜீவிதஸமா:
சனைர் யஸ்தி உத்தானம் கநதிமிர ருத்தே ச நயனே
அஹோ மூட: க்யாஸ் ததபி மரணாபாயசகித:

என் ஆசைகள் கரைந்து போகின்றன. என் மக்களிடையே என் புகழ் குறைகிறது. என் கூட இருந்த சக நண்பர்கள்இரக்க குணமுள்ளவர்கள் துன்பத்திலும் துணையிருந்தவர்கள் பிரிந்து போகிறார்கள். எழுந்து நிற்பதற்கே ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது. பார்வையும் மங்கிவிடுகிறது. அஞ்ஞானத்தில் உழன்ற உடல் மட்டும் இன்னும் இறப்பைநினைத்து அஞ்சுகிறது. இந்த நிலையிலும் விட்டு பிரிவதை – மரணத்தை – மனது ஏற்று கொள்வதில்லை. இது எவ்வளவு விந்தை…

அஞ்ஞானம் என்பது “தான்” என்பது இந்த மாமிச உடலே என்று நினைக்கப் பண்ணுகிறது. இந்த உடலை காப்பதற்கும் இதன் சுகம் தேடுவதற்குமே தவிக்கிறது. இந்த மனுஷ சரீரம் அநித்யம் என்பதை உணராது அஞ்சுகிறது – வருந்துகிறது…

விஷயத்திற்கு வருவோம்…

தியாகையரும் இப்படித்தான் ஆரம்பிக்கிறார்…

மநஸா, நிதி சால சுகமா… ராமுனி சந்நிதி சேவ சுகமா?
நிஜமுக பல்கு – உண்மையை சொல்லு !

அனுபல்லவியில்
ததி நவநீத க்ஷீரமுலு – தயிர் வெண்ணை பால் – ருசோ – ருசியோ?

தாஸரதி த்யான பஜன சுதா ரசமு ருசோ ?

சரணத்தில்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு சுகமா?

பாவத்தை போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?

கர்த்தம துர்விஷய கூபஸ்நாநமு சுகமா?
இந்த்ரிய சுகம் தேடும் துர்க்கந்தமான இவ்வாழ்வுக்கு ஒப்பான கிணற்று நீர் குளியல் சுகமா?

(எவ்வளவு பெரியது தூய்மையானது ஞானம்? எவ்வளவு தூய்மையற்றது அஞ்ஞானம்… என்பது உள்ளடக்கம்)

மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா?
அகங்காரமுள்ள மனிதர்களை புகழ்வது சுகமா?

ஸுமதி த்யாகராஜநுதுநி கீர்த்தந
நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்பட்ட ராம கீர்த்தனம் சுகமா?

முழுப்பாடலும்:
பல்லவி:
நிதி சால ஸுகமா ராமுநி ஸந்

நிதி ஸேவ ஸுகமா – நிஜமுகபல்கு மநஸா

அனுபல்லவி:
ததி நவநீதக்ஷீரமுலு ருசோ – தாஸரதி

த்யானபஜந ஸுதா ரஸமு ருசோ

சரணம்:
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு ஸுகமா கர்த்தம

துர்விஷய கூப ஸ்நாநமு ஸுகமா
ஸுமதி த்யாகராஜநுதநி கீர்த்தந ஸுகமா…

(இன்னும் வரும்)

பின்னூட்டமொன்றை இடுங்கள்

நாத ப்ரும்மம் 2

த்யாகையர் சிறு வயதிலேயே சங்கீதத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவரது குருவான ஸொண்டிவெங்கடரமணய்யா திருவையாற்றில் ஒரு வித்வத் சபையில் தியாகராஜரை பாடுமாறு பணித்தார். உள்ளம் உருகி “தொரகுனாஇடு வண்டி ஸேவ” என்ற பிலஹரி ராக க்ருதியை பாடினார் தியாகராஜர். ஆசாரியனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முடிவில்குருவே “தொரகுனா இடுவண்டி சிஷ்யுடு” என்று புகழ்ந்தார். தியாகராஜருக்கு தஞ்சாவூர் சரபோஜி மகாராஜாவிடம் தாம் பெற்றசில பரிசுகளையும் கொடுத்தார்.

சுமார் 1802 வாக்கில் தஞ்சையை பெருமை வாய்ந்த சரபோஜி மஹாராஜா ஆண்டு வந்தார். சரபோஜி தேர்ந்த கலாரசிகர். அவரது அவையில் சங்கீத வித்வான்கள் சுமார் நானுறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். சரபோஜி மஹாராஜாவின் வரலாறு பல சம்பவங்கள் நிறைந்தது. அது பற்றி பிறகொரு சமயம் பார்ப்போம். அக்காலத்தில் தியாகையரின் புகழ் இவ்வாறு சரபோஜி மஹாராஜா வரை எட்டியது.

தியாகராஜரின் குருவின் தந்தையான ஸொண்டி வெங்கட சுப்பைய்யா தஞ்சை ராஜ சபையில் ஆஸ்தான வித்வான். அவர் முன்னிலையில் தியாகராஜர் பாடுமாறு ஒருமுறை ஏற்பாடாகியது. தியாகராஜரின் பாட்டை கேட்ட பின் வித்வான்கள் அரண்மனைக்கு சென்று இரவு வேறொரு இசை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதாக ஏற்பாடு. தியாகராஜரும், தன் குரு, குருவின் தந்தை, இன்ன பிற வித்வான்கள் கூடியிருந்த சபைக்கு வந்தார்.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பார்கள். வித்வத் சபையை கண்டதும் மெய்சிலிர்த்து காம்போதி ராகத்தில் “மரி மரி நின்னே” என்ற கிருதியை பாட நேரம் போனதே தெரியாமல் வித்வான்கள் உட்கார்ந்து விட்டனர். ஆலாபனம், தாளம்,பாட்டு, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் என்று பலமணி நேரம் நடந்த கச்சேரியின் முடிவில் இந்த இளைஞனுக்கு இவ்வளவுகுறுகிய கால பயிற்சியில் இவ்வளவு திறமையா என்று வியந்து விட்டனர் அவையோர். அன்றிரவு இசை நிகழ்ச்சிக்கு போகாமல் இந்த கான ரஸாப்தியிலேயே மூழ்கிவிட்டனர்.

காலையில் அரண்மனை சென்ற போது மஹாராஜாவிடம் தியாகராஜரைப்பற்றி சொல்லி ஒவ்வொருவரும் பெருமைப்படவும்சரபோஜி மகாராஜாவுக்கும் ஆசையும் ஆர்வமும் ஏற்பட்டது. இதன் பிரகாரம், அரண்மனை அதிகாரிகள் சிலர் தியாகராஜரைசந்தித்து அழைத்தனர். சாதாரணமாக இருந்தால் தியாகராஜர் வந்திருப்பார். ஆனால் வந்தால் அரசரை புகழ்ந்து ஒரிருசாகித்யமாவது பாடவேண்டுமென்றும் அப்படி பாடினால் 50 ஏகரா நிலமும் தங்க பாளமும் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்லவும் விரசமாக போய்விட்டது.

உள்ளெழுந்த கோபத்தினால் இயற்றியது தான் கல்யாணி ராகத்தில் அமைந்த “நிதி சால சுகமா” என்ற கல்யாணி ராக கிருதி. இந்த கிருதியில் தன் மனதை எதிர் நிறுத்தி கேள்விகளாக தொடுத்துவிடுகிறார். இது மாதிரி ஒரு மறுமொழியை அரசர் எதிர்பார்க்கவில்லை. அச்சமயம் கிழக்கிந்திய கம்பெனியார் அரசரை பெயரளவில் விட்டு அரசுரிமையை வேறு பறித்திருந்ததினால்எழுந்த ஆற்றாமையும் கோபமுமாக சேர்ந்து மனதில் தைக்கவே, தியாகராஜரை “கொண்டு” வருமாறு தம் ஆட்களை பணித்தார் மஹாராஜா.

ஆனால் அவர் ஆட்கள் புறப்பட்ட கணமே கொடும் வயிற்று வலி ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்களால் குணமாகாமல் வலி அதிகரித்துக்கொண்டே இருக்கவும் அரண்மனை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களும் ஏதோ ஒரு மகானை அவமதித்ததினால் இருக்கக்கூடும் என்று நிமித்தம் கூறினார்கள். அதனால்வேறு சிலரை அனுப்பி முன் அனுப்பிய ஆட்கள் திரும்ப பெறப்பட்டனர். நோவும் தீர்ந்தது. பிறகு வேறொரு சமயம் சரபோஜிமகாராஜாவே நேரில் திருவையாறு சென்று தியாகையரை தரிசனம் கண்டார் என்பது வரலாறு.

அக்காலங்களில் தியாகராஜரின் ஏகாதசி பஜனை கேட்க சரபோஜி மன்னர்களும் ராஜ குடும்பத்தினரும் திருவையாறு வந்து கல்யாண மஹாலில் தங்குவார்களாம். பிறகு பஜனை கேட்டுவிட்டு மறுநாள் ஊர் திரும்புவார்களாம்.

தியாகராஜருக்குத்தான் என்னே மன உறுதி…

பின்னூட்டமொன்றை இடுங்கள்