நாத ப்ரும்மம் 2

த்யாகையர் சிறு வயதிலேயே சங்கீதத்தில் பெரும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். ஒருமுறை அவரது குருவான ஸொண்டிவெங்கடரமணய்யா திருவையாற்றில் ஒரு வித்வத் சபையில் தியாகராஜரை பாடுமாறு பணித்தார். உள்ளம் உருகி “தொரகுனாஇடு வண்டி ஸேவ” என்ற பிலஹரி ராக க்ருதியை பாடினார் தியாகராஜர். ஆசாரியனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. முடிவில்குருவே “தொரகுனா இடுவண்டி சிஷ்யுடு” என்று புகழ்ந்தார். தியாகராஜருக்கு தஞ்சாவூர் சரபோஜி மகாராஜாவிடம் தாம் பெற்றசில பரிசுகளையும் கொடுத்தார்.

சுமார் 1802 வாக்கில் தஞ்சையை பெருமை வாய்ந்த சரபோஜி மஹாராஜா ஆண்டு வந்தார். சரபோஜி தேர்ந்த கலாரசிகர். அவரது அவையில் சங்கீத வித்வான்கள் சுமார் நானுறுக்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். சரபோஜி மஹாராஜாவின் வரலாறு பல சம்பவங்கள் நிறைந்தது. அது பற்றி பிறகொரு சமயம் பார்ப்போம். அக்காலத்தில் தியாகையரின் புகழ் இவ்வாறு சரபோஜி மஹாராஜா வரை எட்டியது.

தியாகராஜரின் குருவின் தந்தையான ஸொண்டி வெங்கட சுப்பைய்யா தஞ்சை ராஜ சபையில் ஆஸ்தான வித்வான். அவர் முன்னிலையில் தியாகராஜர் பாடுமாறு ஒருமுறை ஏற்பாடாகியது. தியாகராஜரின் பாட்டை கேட்ட பின் வித்வான்கள் அரண்மனைக்கு சென்று இரவு வேறொரு இசை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதாக ஏற்பாடு. தியாகராஜரும், தன் குரு, குருவின் தந்தை, இன்ன பிற வித்வான்கள் கூடியிருந்த சபைக்கு வந்தார்.

கற்றாரை கற்றாரே காமுறுவர் என்பார்கள். வித்வத் சபையை கண்டதும் மெய்சிலிர்த்து காம்போதி ராகத்தில் “மரி மரி நின்னே” என்ற கிருதியை பாட நேரம் போனதே தெரியாமல் வித்வான்கள் உட்கார்ந்து விட்டனர். ஆலாபனம், தாளம்,பாட்டு, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் என்று பலமணி நேரம் நடந்த கச்சேரியின் முடிவில் இந்த இளைஞனுக்கு இவ்வளவுகுறுகிய கால பயிற்சியில் இவ்வளவு திறமையா என்று வியந்து விட்டனர் அவையோர். அன்றிரவு இசை நிகழ்ச்சிக்கு போகாமல் இந்த கான ரஸாப்தியிலேயே மூழ்கிவிட்டனர்.

காலையில் அரண்மனை சென்ற போது மஹாராஜாவிடம் தியாகராஜரைப்பற்றி சொல்லி ஒவ்வொருவரும் பெருமைப்படவும்சரபோஜி மகாராஜாவுக்கும் ஆசையும் ஆர்வமும் ஏற்பட்டது. இதன் பிரகாரம், அரண்மனை அதிகாரிகள் சிலர் தியாகராஜரைசந்தித்து அழைத்தனர். சாதாரணமாக இருந்தால் தியாகராஜர் வந்திருப்பார். ஆனால் வந்தால் அரசரை புகழ்ந்து ஒரிருசாகித்யமாவது பாடவேண்டுமென்றும் அப்படி பாடினால் 50 ஏகரா நிலமும் தங்க பாளமும் கிடைக்கும் என்று அதிகாரிகள் சொல்லவும் விரசமாக போய்விட்டது.

உள்ளெழுந்த கோபத்தினால் இயற்றியது தான் கல்யாணி ராகத்தில் அமைந்த “நிதி சால சுகமா” என்ற கல்யாணி ராக கிருதி. இந்த கிருதியில் தன் மனதை எதிர் நிறுத்தி கேள்விகளாக தொடுத்துவிடுகிறார். இது மாதிரி ஒரு மறுமொழியை அரசர் எதிர்பார்க்கவில்லை. அச்சமயம் கிழக்கிந்திய கம்பெனியார் அரசரை பெயரளவில் விட்டு அரசுரிமையை வேறு பறித்திருந்ததினால்எழுந்த ஆற்றாமையும் கோபமுமாக சேர்ந்து மனதில் தைக்கவே, தியாகராஜரை “கொண்டு” வருமாறு தம் ஆட்களை பணித்தார் மஹாராஜா.

ஆனால் அவர் ஆட்கள் புறப்பட்ட கணமே கொடும் வயிற்று வலி ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்களால் குணமாகாமல் வலி அதிகரித்துக்கொண்டே இருக்கவும் அரண்மனை ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களும் ஏதோ ஒரு மகானை அவமதித்ததினால் இருக்கக்கூடும் என்று நிமித்தம் கூறினார்கள். அதனால்வேறு சிலரை அனுப்பி முன் அனுப்பிய ஆட்கள் திரும்ப பெறப்பட்டனர். நோவும் தீர்ந்தது. பிறகு வேறொரு சமயம் சரபோஜிமகாராஜாவே நேரில் திருவையாறு சென்று தியாகையரை தரிசனம் கண்டார் என்பது வரலாறு.

அக்காலங்களில் தியாகராஜரின் ஏகாதசி பஜனை கேட்க சரபோஜி மன்னர்களும் ராஜ குடும்பத்தினரும் திருவையாறு வந்து கல்யாண மஹாலில் தங்குவார்களாம். பிறகு பஜனை கேட்டுவிட்டு மறுநாள் ஊர் திரும்புவார்களாம்.

தியாகராஜருக்குத்தான் என்னே மன உறுதி…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: