நாத ப்ரும்மம் 4

இந்த உலகம் சரீர சுகங்களுக்கானது. இன்பம் என்று இங்கே சொல்லப்படும் எவையும் நேராகவோ மறைமுகமானதாகவோ போய் சேருவது இந்த்ரிய சுகங்களில் தான். அது நல்ல வீடாகட்டும் நிறைய செல்வமாகட்டும். மண், மனை, மனைவி, மக்கள் என்று எல்லாமே இந்த உடல் இருந்து அனுபவித்து, வாழ்ந்து, ஆண்டுஇன்புறுவதாகவே இருக்கிறது.

உலகில் உண்மை என்றால் பொய். தீமை என்றால் நன்மை. தர்மம் என்றால் அதர்மம் என்று இரட்டையாகவேஇருக்கிற பட்சத்தில் சரீர சுகம் என்றால் ஆத்ம சுகம் ஒன்று இருந்துதானே ஆகவேண்டும்?

இறைவனை, இறையை அனுபவிக்கும் அத்மானுபவத்தை உணர்ந்தவர்களுக்கு ஒன்று உயர்ந்தது – இன்னொன்று தாழ்ந்தது என்கிறது இல்லை. இறை இதுதான் – இது இல்லை என்பதே இல்லை. சர்வம் விஷ்ணுமயம் ஜகத் என்றார்களே அதைப்போல…

ஆனால் மாயத்தோற்றங்களையே நாடும் மனது தானும் துன்பத்திலுழன்று சுயநலத்தில் சிக்கி “பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பலவேடிக்கை மனிதர்”என்றதைப்போல் பலதவறுகள் பாவங்கள் செய்து விடுகிறது. இந்த அற்ப ஜீவாத்மாவின் சார்பில் யார் முறையிடுவது ?

த்யாகப்ரும்மம் தான் !

த்யாகப்ரும்மம் இந்த கருத்தை சொல்ல எடுத்த க்ருதிதான் டுடுகு கல நன்னே… என்ற க்ருதி. இந்த க்ருதிகெளள ராகத்தில் அமைந்தது. கெளள ராகமே மிக விசேஷமானது. ஒரு சுய இரக்கம் – பச்சாதாபம் – பக்திமுதிர்ந்த நிலை இந்த ராகத்தை கேட்கும் போது உணரமுடியும். இந்த விஷயத்துக்கு சற்றும் சம்பந்தமில்லாதவரை கூட சற்றே அசைத்துப்பார்த்து விடக்கூடிய ராகம். இந்த க்ருதியை அவசரமில்லாமல் பக்திக்காகவென்று நேரம் ஒதுக்கி கேட்டால் புரியும்.

அதுவும் இந்த ராகத்தில் வரும் நிஷாதம் சாகித்ய கர்த்தாவின் மனதை எளிய முறையில் படம் பிடித்து காட்டிவிடுகிறது.

துடுக்கு என்று தமிழில் ஒரு வார்த்தை உண்டு. துடுக்குத்தனம் என்றால் முரட்டுத்தனம். துஷ்டத்தனம். நல்லது அற்ற ஒரு தன்மை. Arrogance.

டுடுகு கல நன்னே தொரா கொடுகு ப்ரோசுரா யெந்தோ…

தமிழில் துரை என்பதுதான் தொரா என்று தெலுங்கில் வழங்கியுள்ளது. (சீதா – சீதை என்பதை போல்)…தொரா கொடுகு – சக்ரவர்த்தி திருமகன் – பெரிய இடத்து பிள்ளை – தாசரதி!

ப்ரோசு – என்றால் காப்பாற்று.. நான் மிகவும் துடுக்குத்தனம் – உள்ளவனாய் உழலுகிறேன் – நற்கதிக்கானவழிகாட்டுதலின்றி நல்லது எதுவென்றே அறியாது தீமையையே நாடி தீமையையே செய்து உழலுகிறேன்….ஹே தாசரதி… காப்பாற்று… (யெந்தோ என்றால் ரொம்ப.. நிறைய கெட்டதனங்கள்)

சரி காப்பாற்று என்று சொல்லியாகிவிட்டது – திருந்த சந்தர்ப்பம் கொடுப்போம் என்று தெய்வம் பேசாது இருந்து விட்டால்?

அடுத்த அனுபல்லவி சொல்கிறது…

கடு துர்விஷயாக்ருஷ்டுடை கடிய கடிய நிந்தாரு

ஆக்ருஷ்டுடை – ஈர்க்கிறது – எது ஈர்க்கும்? நல்லவிஷயம் என்றால் தான் தேடிப்போகவேண்டும். கெட்டது – கடு துர்விஷயா – கெட்ட விஷயங்கள் என்னை தேடித்தேடி ஒவ்வொரு நிமிடமும் என்னை அடைந்து என் நேரத்தை கொண்டு போய்விடுகின்றன…
அதனால் காப்பாற்று – சரணாகதி…

ஈசனேயானாலும் சக்தி தேவை – ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயப்படியும் பிராட்டியின் அனுக்கிரகமும் தேவை… அதுவே சரணாகதியின் முதற்படி… அதனால் தியாகையரும் பத்து சரணங்களுள்ள இந்த கிருதியில் முதல்சரணமாக இப்படி சொல்கிறார்…

ஸ்ரீ வனிதா ஹ்ருத் குமுதாப்ஜ வாங்மனசா கோசர… – (டுடுகு)

வெள்ளை தாமரை – குமுதாப்ஜ – தாமரையான உன் – ஹ்ருத் – இதயகமலத்தில் வீற்றிருக்கு ஸ்ரீவனிதா – மஹாலக்ஷ்மி என் வாக்கிலும் மனதிலும் தோன்ற செய்து என்னை காப்பாற்று… இந்த ஜீவனுக்கு லோகமாதாவே அபயம்…

அதென்ன… என் வாக்கிலும் மனதிலும் மஹாலக்ஷ்மி தோன்ற வேண்டும் என்று கேட்டால் அவள் – அவளுடனானஈசன் – பரப்ரும்மம் – ஏற்கனவே அங்கிருக்கவில்லையா? எங்கும் இருக்கும் சர்வாந்தர்யாமி – Omnipotent – Omnipresent – Omnisient – அந்த தெய்வம் இங்கே தோன்றவேண்டும் என்று கேட்பது எப்படி இருக்கிறது?இதுவும் த்யாகராஜரே எண்ணிப்பார்த்தது தான்…

அதுதான் இரண்டாவது சரணம்…

சகல பூதமுலயந்து நீவை யுண்டக மதிலேகா போயின – (டுடுகு)

எனக்கெங்கே தெரிகிறது நீ எங்கும் இருக்கிறாயென்று…சகல பூதமுலயந்து – எல்லா பூதங்களிலும் (எனக்கு தெரிந்ததென்னவோ ஐந்துதான் – உனக்கு தெரிந்ததுஎவ்வளவோ எல்லாவற்றிலும்) நீவை – நீயே இருக்கிறாய்… மதிலேகா போயின – அடப்பாவமே எனக்குத்தான்தெரியாமல் போய்விட்டது… 🙂

எப்போது இது தெரியவந்தது என்று கேட்டால்…

சிருத ப்ராயமுலநாடே பஜனா அம்ருத ரசவிஹீன குதர்க்குடைன – (டுடுகு)

சின்ன வயதிலிருந்தே உன் பஜனாம்ருதத்தை விட்டுவிட்டு அற்பமான குதர்க்கமான விவாதங்களில் பங்கு கொண்டு நேரத்தை விரயம் செய்து போக்கிவிட்டேன்… என்னை நானே பெரிய சாஸ்த்ரக்ஞன் – அறிவாளி என்று எண்ணி மற்றவர்களுடன் வாதப்பிரதிவாதங்கள் செய்து பொழுது போக்கிவிட்டேன். இது சாதாரண மனிதர்களின் ஸ்வபாவம். சொற்சிலம்பம் விளையாடுவது ஒரு சுபாவமாகவே கொண்டு பொழுதை கழிக்கிறேனே… உண்மையை உணராமல் என்று இந்த சரணத்தில் சொல்கிறார்.

மூன்றே சரணங்கள் தான் முடிந்திருக்கிறது… இன்னும் ஏழு சரணங்கள் இருக்கின்றன…கொஞ்சம் கொஞ்சமாக வரும் நாட்களில் பார்ப்போம்…

பாடலின் ஒரு பகுதி

பல்லவி
டுடுகு கல நன்னே தொரா..
கொடுகு ப்ரோசுரா… யெந்தோ

அனுபல்லவி
கடு துர்விஷயாக்ருஷ்டுடைகடிய கடிய நிந்தாரு

சரணம் – 1
ஸ்ரீ வனிதா ஹ்ருத் குமுதாப்ஜ வாங்மனசா கோசர… – (டுடுகு)

சரணம் – 2
சகல பூதமுலயந்து நீவை யுண்டக மதிலேகா போயின – (டுடுகு)

சரணம் – 3
சிருத ப்ராயமுலநாடே பஜனா அம்ருத ரசவிஹீன குதர்க்குடைன – (டுடுகு)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: