Archive for ஜனவரி, 2006

புருஷ:


வானம் நீ – வானம் நீங்கி
வையம் வந்த –
ஞானம் நீ ! – ஞானம் பெற்றார்
நாளும் காக்கும் –
மோனம் நீ ! – மோனம் நீங்கி
ஓதும் வேத
கானம் நீ !
ஏனம் நீ! மீனம் நீ!
கூர்மம் நீ ! குறள் நீ!
அரியாய் வந்து – அவுணனை
அரிந்த அரியும் நீ !
யாவும் நீ ! – யாவும் படைத்த
தேவும் நீ – எதையும்
விஞ்சியவனும் நீ – எதிலும்
மிஞ்சியவனும் நீ…
– வாலி (‘அவதார புருஷன்’)

புருஷ என்ற பதத்துக்கு பெரியோர்கள் நான்கு இலக்கணம் சொன்னார்கள்.

புரிசயனாத் புருஷ: – இந்த உடலுக்குள் பரமபுருஷன் சயனித்திருப்பதாக பொருள். புரி என்று சரீரத்தை குறிப்பிடுகிறார்கள். இந்த சரீரமே இறைவனின் வாச ஸ்தலமென்று நாம் நினைத்து விட்டால் தவறான காரியங்களை எண்ணிப்பார்க்கவோ, பேசிவிடவோ, செயல்படுத்தவோ முடியுமா?

இதே பொருளில்தான் பெரியாழ்வார் இந்த உடலை பற்றும் நோய்களை பார்த்து விலகுங்கள் இந்த உடல் பரமபுருஷன் வாழும் கோயில் என்கிறார்.

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள் ! காலம்பெறஉய்யப்போமின்
மெய்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார் கிடந்தார்
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே!

மங்கியவல்வினைநோய்காள்! உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்றுகண்டீர் புகேன்மின்
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர்
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே!

அடுத்து

பகுதானாத் புருஷ: – நிறைய அளவிலடங்காமல் அள்ளிக்கொடுப்பவன் என்று பொருள். புருஷ என்ற வார்த்தையிலேயே புரு என்ற வேர்சொல்லுக்கு நிறைய – அதிகமான என்று பொருள். சரி எதை அள்ளி அள்ளி வழங்குவான்? யாருக்கு கொடுப்பான்? என்ன காரணத்துக்காக அல்லது என்ன காரியத்துக்காக கொடுப்பான்? கொடுப்பது என்பது சக்தியுடயவனது இச்சையின் விளைவு. அவன் நினைத்தால் நினைத்ததை கொடுக்க ஐஸ்வரியங்கள் நிறைந்தவனாக இருக்கிறான். அவனே பரம புருஷன்.

மூன்றாவது,

புராணத்வாத் புருஷ: – இப்போதிலிருந்து அப்போதிலிருந்து என்ற காலம் அவனுக்கு ஒரு அளவில்லை. அவன் ஆதி அந்தமற்றவன். புராணத்வாத் என்றால் பழமையானவன். பழமையில் புதுமையானவன்.

பூர்ணத்வாத் புருஷ: – அவன் நிறைந்த நிறைவாக இருக்கிறான். த்ருப்தியுடன் இருக்கிறான். அவனுக்கு இன்னது வேண்டும் என்றோ இன்னது இல்லை என்ற குறைவின்றி பூர்ணமாக இருக்கிறான்.

இப்படி புருஷனை ஸ்ம்ருதிகள் அடையாளம் காட்டுகின்றன.

புருஷோத்தமனைப் பற்றிய ஒரு விசாரத்தில் கீதாசார்யனே முடிவாக சொல்கிறார்.

यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम्
स सर्वविभ्दजति मां सर्वभावेन भारत ॥

யோ மாமேவமஸம்மூடோ ஜாநாதி புருஷோத்தமம்
ஸ ஸர்வவித்பஜதி மாம் ஸர்வபாபேந பாரத
– கீதை 15.19

ஹே பாரத! ஞானியானவன் என்னையே புருஷோத்தமன் என்று அறிந்து எப்போதும் எல்லாவிதத்திலும் வழிபடுகிறான் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள். இதில் அஸம்மூட: என்றால் ஞானி என்று அர்த்தம்.

பகவான் க்ஷரன், அக்ஷரன், புருஷோத்தமன் என்று பிரித்து ஆராய்ச்சி செய்யும் இடம் இது. இது கீதையின் “புருஷோத்தமயோகம்” எனப்படும் பதினைந்தாவது அத்தியாயத்தில் அற்புதமான விசாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அத்தியாயத்தில் தான் அழியும் பொருள்களை க்ஷரம் என்றும் அழியாத ஆத்மாவை அக்ஷரம் என்று இரு தத்துவங்கள் சொல்லப்படுகிறது. இவற்றிலிருந்து வேறுபடுத்தி புருஷ உத்தமனாக இறை அடையாளம் காட்டப்படுகிறது. புருஷோத்தமனான பகவான் அழியும் பொருள்களும் அழியாத பொருளான ஆத்மாவும் அடங்கிய தத்துவமாக இருக்கிறான் – என்பதே இதன் சாரம்.

கடோ பநிஷத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்,

अङ्गुष्टमात्र: पुरुषो मध्य आत्मनि तिष्टति
ईसानां भूतभव्यस्य न ततो विजुगुप्सते ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி
ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே

இந்த வாக்யத்தில் புருஷன் என்றால் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தவன் என்ற பொருளில், இதயக்கூட்டினுள் கட்டைவிரல் அளவு இடைவெளிக்குள் ஒடுக்கிக்கொண்டு இருப்பதும் ஆகாய வெளியில் பரந்து விரிந்திருப்பதும் ஒரே பரம்பொருள்தான்.
காலாதீதனாக கால அளவுகளை கடந்தவனாக கடவுளை எவர் உணர்ந்து கொள்கிறார்களோ அவர்கள் தங்களை எதிலிருந்தும் காத்துக்கொள்ள முனைவதில்லை என்பதே இந்த வாக்கியத்தின் பொருள். தன்னையும் சுற்றத்தையும் பிரித்தறியாமல் தன்னுள்
இருப்பதே எங்கும் இருப்பது என்று உணர்ந்தபின் எதனிடமிருந்து எதை காப்பாற்றுவது?

இதே இடத்தில் அடுத்த ஸ்லோகம்,

अङ्गुष्टमात्र: पुरुषो ज्योतिरिवाधूमक ।
ईसानो भूतभव्यस्य स एवाध्य स उश्व ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ ஜ்யோதிரிவ அதூமுக
ஈசானோ பூதபவ்யஸ்ய ஸ ஏவ அத்ய ஸ உ ச்வ

கட்டை விரலளவு இருக்கிற புருஷன்தான் புகையில்லாத நெருப்பைப்போன்றவன். காலாதீதன் – காலங்களை கடந்தவன். அவன் இப்போதும் இருக்கிறான். எப்போதும் இருப்பான் என்பதே இவ்வாக்கியத்தின் பொருள். புகையில்லாத நெருப்பென்று சொல்லும் போது கம்ப ராமாயணத்தில் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. புருஷோத்தமன் என்றாலே ஸ்ரீராமனே நினைவுக்கு வருகிறார் இல்லையா?

பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங் கனல் என்ன எழுந்தான்;
அழிந்தது வில் என விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள், முப்பகை வென்றார்.
– கம்பராமாயணம்.

நெய் பொழிந்த நேரத்தில் வேள்வித்தீ எப்படி பொங்கி உயர்ந்து எழுமோ அதுபோல சுரீரென்று ஜ்யோதி ஸ்வரூபமாய் எழுந்தானாம் பரம்பொருள். தீயும் அவன்தான் அதன் ஒளியும் அவன் தான். அவன் எழுந்த வேகத்தில் சனகனது வில் முறிந்ததென்றே முடிவு செய்தார்களாம். என்ன ஒரு அழகான உவமை.

அவனது பெளருஷம் அப்படிப்பட்டது.

ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள் கோதை. அவதாரங்களிலேயே விசேஷமாக திருவிக்கிரமாவதாரத்தை சொல்கிறாள். ஏகோதச (பதினொரு) ருத்ரர்கள், த்வாதச (பனிரெண்டு) ஆதித்யர்கள், அஷ்ட (எட்டு) வசுக்கள், அஸ்வினி தேவர்கள் இரண்டு என முப்பத்து மூவரான அமரருக்கும் முன்னால் ஊற்றமுடையாய்! திறலுடையாய்!! பெரியாய்!! என்றெல்லாம் சொல்வது பெளருஷேயத்தைத்தானே! திருவிக்கிரமாவதாரத்தின் முன் பாதியில் பகவான் அங்குஷ்ட மாத்ர: புருஷ என்றதைப்போல் சின்ன குறளுருவாய் வாமனனாய் எழுந்தருளிய போது தனது மார்பை உத்தரீயத்தினால் மூடிக்கொண்டானாம் – ப்ரம்மசாரியாய் இருந்த போதும் விடாமல் மஹாலக்ஷ்மி வக்ஷ ஸ்தலத்தில் வீற்றிருந்தபடியினாலே.


இன்னும்…

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்