Archive for திசெம்பர், 2007

திருப்பாவை 16 – நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோப னுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மாநீ!
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!

இதற்கு முந்தைய பத்து பாசுரங்களில், பத்து கோபிகைகளை – ஆய்ப்பாடியைச் சேர்ந்த பெண்பிள்ளைகளை எழுப்பிய ஆண்டாள், அவர்களுடன் நந்தகோபருடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்தாள். பகவான் க்ருஷ்ணன் இருக்கக்கூடிய அந்த திருமாளிகையில், க்ஷேத்ராதிபதிகள், துவார பாலகாதிபதிகள் என்று கட்டுக்காவல் அதிகமாக இருக்கிறது. அங்கே வாயிலில் இருக்கும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல் காப்போர்களை இரைஞ்சி, அவர்களுடைய உயர்வைச் சொல்லி, உள்ளே செல்ல அனுமதி கேட்கிறார்கள். இங்கே இவர்களுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் தான் உத்தேஸ்யம் என்றாலும், அதை அடைய நடுவில் என்ன தடை நேருமோ என்று பயந்து, எதிர்படுகிறவர்களை எல்லாம் அடிபணிந்து வேண்டுகிறார்கள்.

நந்தகோபர் ஆய்ப்பாடி கோபாலர்களுக்கெல்லாம் நாயகர். அவருடைய திருமாளிகையில், கோவிலுக்கு த்வஜ ஸ்தம்பத்தைப்போல, கொடிக்கம்பம், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில், அதில் மணிக்கதவம் என்று அழகாக இருக்கிறது. இவற்றுக்கு காவலும் இருக்கிறது. இதற்கு முந்தைய சில பாசுரங்களைப் போல், இந்த பாசுரத்திலும் பூர்வாசார்யர்கள் தம் உரைகளில், ஆண்டாளுடைய குழுவும், காவலாளிகளும் பேசுவதாக ஆச்சர்யமாக அருளியிருக்கிறார்கள்.

இவர்கள் கண்ணன் மேலுள்ள த்வரையினால், விடிந்தும் விடியாத காலைப்பொழுதில், கிளம்பி வந்திருக்கிறார்கள். நந்தகோபரின் காவல்காரர்களை பரமனின் ரக்ஷணத்துக்கு சஹாயம் செய்பவர்களாக கொண்டு, அவர்கள் பெயரைச் சொல்லி அழைக்காமல், அவர்களது கார்யத்தை, அதன் பெருமையைச் சொல்லி அப்பேர்ப்பட்ட இடத்தில் இருப்பவர்களே, எங்களை கதவைத்திறந்து உள்ளே அனுமதியுங்கள் என்று கேட்கிறார்கள்.

நாயகனாய் நின்ற நந்தகோபருடைய கோயில் காப்போனே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! என்று காவலர்களை அழைத்து, மணிக்கதவை திறந்து எங்களை உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறார்கள். ‘பயமுள்ள க்ஷேத்ரத்திலே மத்யராத்ரத்திலே’ வந்து மணிக்கதவம் தாள் திறவாய்! என்று கேட்கிறீர்களே! நீவிர் யாவர்’ என்று காவலாளிகள் கேட்கிறார்கள். பயமுள்ள க்ஷேத்ரம் என்று ஆய்ப்பாடியை பூர்வாசார்யர் திருஅயோத்தியோடு ஒப்பிட்டு குறிப்பிடுகிறார்.

இது ராமனுக்கு அனுகூலமான அவனுக்கு ஒரு ஆபத்துக்களும் ஏற்படுத்தாத அயோத்தி அல்ல – இது ஆய்ப்பாடி, இங்கே கண்ணனுக்கு எத்தனையோ ஆபத்துக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. முளைக்கும் பூண்டுகளெல்லாம் விஷப்பூண்டுகளாய் இருக்கின்றன. அசையும் சகடம், அசையாத மரம், பெண் உருவில் பூதனை, குதிரை, யானை, கொக்கு என்று எல்லாம் கண்ணனுக்கு தீமை செய்யக்கூடியதாய் இருக்கிறது. அதனால் நாங்கள் விழிப்புடன் காவல் காக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் யார் என்றும் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்றும் சொல்லுங்கள் என்று கேட்க, ஆண்டாள், ‘நாங்கள் ஆயர் சிறுமியரோம்!’ என்று பதில் சொல்லுகிறாள். இதற்கு காவலாளிகள் காவலாளிகள், நீங்கள் சிறுமிகள் என்றோ, ஆயர் குலத்தவர் என்றோ பார்த்து நாங்கள் உங்களை அனுமதிக்க முடியாது. பெண்களிலே சூர்ப்பநகை போன்ற அரக்கிகள் இருந்திருக்கிறார்கள். ஆயர் குலத்தவராக பூதனை வேடமிட்டு கண்ணனை கொல்ல வந்தாள். ஆகவே நீங்கள் ஆய்ப்பாடி சிறுமிகளாகவே இருந்தாலும், இந்த நேரத்துக்கு வந்தது ஏன்? என்று கேட்கிறார்கள் காவலாளிகள்.

ஆண்டாள் அதற்கு பதிலாக ‘அறை பறை’ என்று நாங்கள் எங்கள் பாவை நோன்புக்கு பறை போன்ற சாதனங்களைப் பெற்றுப் போகவே வந்தோம். அவற்றைத் தருவதாக அந்த மாயன் மணிவண்ணனே, எங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறான். அதன் பொருட்டு, அவனிடம் அவற்றைப் பெற்றுபோக, தூய்மையான மனத்தினராய் வந்தோம் – துஷ்க்ருத்யங்கள் செய்யும் எண்ணம் சிறிதும் இல்லை, என்று ஆண்டாள் சொல்கிறாள். சரி, பெருமானே வாக்கு கொடுத்தானோ! அப்படியானால் சரி, ஆனாலும் சந்தேகம் இருக்கிறது என்று காவலாளிகள் தர்ம சங்கடத்தில் தவிக்க, இவர்கள், ‘வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா!’ என்று கதறுகிறார்கள். மாற்றி மாற்றி பேசாதே, உள்ளே அவன் இருக்க, வெளியே நாங்கள் இருக்க, ஏற்கனவே தவித்து போயிருக்கிறோம். எங்களை இதற்கு மேலும் சோதிக்காதீர்கள் என்று பதறுகிறார்கள்.

இதற்கு மனமிரங்கிய காவலர்கள், சரி போங்கள் என்று அனுமதிக்கிறார்கள். ஈஸ்வரன் இருக்கும் இந்த மாளிகையில், அசேதனங்கள் கூட அவனுக்கு அனுகூலமாக இருக்கின்றன. இந்த கதவு இருக்கிறதே, வெளியே க்ருஷ்ண விரோதிகள் வந்தால் அனுமதிக்காமலும், உள்ளே நுழைந்து விட்ட பக்தர்களை, வெளியே விடாது அவனுடனே இருக்க பண்ணுவதுமாக அசேதனங்கள் கூட அவனிடத்தில் ப்ரேமை கொண்டிருக்கின்றன. ‘அநதிகாரிகளுக்கு அவனை உள்ளபடி காட்டாதேப்போலே, ஆத்மஸ்வரூபம், ஸ்வைவலக்ஷண்யத்தாலே, அதிகாரிகளுக்கும் பகவத் விஷயத்தை மறைக்கக் கடவதாயிருப்பது’ என்று சொல்கிறார் பூர்வாசார்யர். இந்த கதவுகள் தம் இயல்பால் பகவத் பக்தர்களுக்கும் உள்ளே விட மறுப்பவையாய் இருக்கின்றன. அதனால் இந்த க்ருஷ்ண ப்ரேமையுள்ள கதவை நீங்களே திறந்து உதவுங்கள் – நேச நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! என்று கேட்க, காவலர்களும் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 15 – எல்லே! இளங்கிளியே!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

‘திருப்பாவையாவது இப்பாட்டிறே’ என்று இந்த பாசுரத்தை பூர்வாசார்யர் ஆச்சரியப்பட்டு சொல்கிறார். திருப்பாவையில் இந்த பதினைந்தாம் பாசுரத்தையும், இருபத்தொன்பதாம் பாசுரமான ‘சிற்றம் சிறுகாலே’ என்ற பாசுரத்தையும் இதல்லவோ திருப்பாவை என்று நெகிழ்ந்து சொல்கிறார். இந்த பாசுரத்தை பாகவத தாஸ்யம் சொல்வதாகவும் , இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யம் சொல்வதாகவும் கொண்டு அப்படி ஆச்சரியப்பட்டு சொல்கிறார்.

இதுவரை விடியற்காலையில் எழுந்திருந்து நீராடி, க்ருஷ்ணானுபவத்தை கூடி இருந்து குளிர்ந்து அனுபவிக்க போவதற்காக ஒவ்வொரு வீடாக சென்று ஆண்டாள் ஆய்ப்பாடி பெண்பிள்ளைகளை அழைக்கிறாள். இன்றைய பாசுரத்தில் கடைசியாக வயதில் சிறியவளான பெண்பிள்ளையை இளங்கிளியே! என்று கூப்பிட்டு அழைக்கிறாள். இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்பிள்ளையை எழுப்பும்போதும், வெளியிலே இருந்து எழுப்புகிறவர்கள் சொல்வது மட்டும் பாசுரத்தில் இருக்க, உள்ளே இருக்கும் பெண் பேசுவதை யூகிக்குமாறு விட்டு விட்டார்கள். ஆனால் இந்த பாசுரத்தில் உள்ளே இருப்பவள் பேசுவதும், வெளியே இருப்பவர்கள் பேசுவதும் சேர்ந்தே பரஸ்பர ஸம்வாதமாக அமைந்திருக்கிறது.

சென்ற பாசுரத்தில் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு! என்று இவர்கள் சொல்ல, அந்த வார்த்தைகளை இந்த பாசுரத்தில் வரும் பெண்ணும் கேட்டு, ‘சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்’ என்று சொல்லிப் பார்க்கிறாள். அப்படியே அந்த நாமங்களிலே கரைந்து அமர்ந்து விடுகிறாள்.

ஆண்டாள் மற்ற பெண்களுடன் இவள் வீட்டு வாசலுக்கு வந்து, ‘எல்லே! இளங்கிளியே… இன்னும் உறங்குகிறாயோ!’ என்று கேட்க, இவள் ஏற்கனவே எழுந்து இவர்களுக்காக காத்திருப்பது அவர்களுக்கு தெரியவில்லை. இவள் இங்கே பகவந்நாமத்தை அனுசந்தித்து அதிலே தோய்ந்து இருக்கும் நிலையில் அவர்கள் பேசுவது இவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி சில்லென்று என் அனுபவத்தின் நடுவே அழைக்கிறீர்களே! சில்லென்று அழையேன்மின்! பூர்ணத்துவம் பெற்றவர்களே – நங்கைமீர், போதர்கின்றேன்! நான் வந்து கொண்டே இருக்கிறேன், இருங்கள் என்கிறாள். அவள் அப்படி சொல்வதற்கு, பூர்வாசார்யர் ‘திருவாய்மொழி பாடாநின்றால், செல்வர் எழுந்தருளுகையும் அஸஹ்யம் ஆமாப்போலே!” என்று சொல்கிறார். அதாவது, திருவாய் மொழி பாராயணம் செய்ய நிறைய தனத்தைக் கொடுத்து ஒருவர் ஏற்பாடு செய்திருந்தாராம். திருவாய்மொழி பாராயணமும் ஆரம்பித்தாகிவிட்டது. அவர் சிறிது காலதாமதமாக அந்த கோஷ்டிக்கு நடுவில் வர – இவர்கள் திருவாய்மொழி பாராயணத்தை சற்று நிறுத்தி விட்டார்கள்.

ஆழ்ந்து அனுபவிக்க இப்படி ஏற்பாடு செய்தவரே தடையாக இருக்கிறதைப்போலே, இந்தப் பெண் அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மற்ற பெண்பிள்ளைகள் அழைப்பது அவளுக்கு இடைஞ்சலாகப் படுகிறது.

இப்படி ஒரு பாகவதனுக்கு இன்னொரு பாகவதன் இடைஞ்சலாக இருப்பர்களோ? உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா.. உன் தாமதத்திற்கு எங்களைக் குறை சொல்லலாமா ? என்ற அர்த்தத்தில் – வல்லையுன் கட்டுரைகள் – நீ கட்டி உரைப்பதில் வல்லமை உடையவள் – பண்டே உன் வாயறிதும் – உன் வாக் சாதுர்யம் எங்களுக்கு புதிதல்ல – பழைய நாட்கள் தொட்டு எங்களுக்கு தெரியும், என்கிறார்கள்.

அந்தப் பெண் இதற்கு பதிலாக, நான் கெட்டிக்காரியல்ல – நீங்களே வல்லமை உடையவர்கள் ஆகட்டும் – வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! தவறு என்னுடயதாகவே இருக்கட்டும் – என்கிறாள். இவ்வளவில், இவள் தமோ குணம் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவள் அல்ல. ரஜோ குணத்தால் சண்டை இட விரும்புபவளும் அல்ல – இவள் சத்வ குணத்தை உடைய பெண் – தவறை தன்னுடையதாகவே ஏற்றுக் கொள்கிறாள். நீங்கள் பெரியவர்கள், நான் சிறியவள் என்ற நைச்ய பாவத்தை வெளிப்படுத்துகிறாள். இதெல்லாம் தான் ஸ்ரீவைஷ்ணவர்களுக்குரிய உயர்ந்த குணங்கள் – பாகவதர்களுக்கு உரிய சீலங்கள்.

வெளியே மற்ற பெண்கள், “சரி, ஒல்லை நீ போதாய்!” – விரைவாக கிளம்பு – ‘உனக்கென்ன வேறுடையை’ – நீ மட்டும் வேறாக தனியாக பகவதனுபவத்தை அனுபவிக்கலாமா? எங்களோடு சேர்ந்து கொள்ள வா என்று அழைக்கிறார்கள். ஆழ்வார்களும் ஆசார்யர்களும் காட்டிய வழியை விடுத்து நீ வேறு வழியில் செல்லலாமா? என்றும் அர்த்தம் சொல்வர். இதற்கு அந்தப் பெண், ‘எல்லாரும் போந்தாரோ?’ – எல்லாரும் வந்துவிட்டார்களா? என்று கேட்கிறாள். ‘போந்தார் போந்து எண்ணிக்கொள்’ என்று
வந்துவிட்டார்கள் – நீயே வெளியே வந்து எண்ணிப்பார்த்துக்கொள், என்றார்கள் இவர்கள். இதற்கு பூர்வாசார்யர்கள், ‘நோன்பிற்கு புதியவர்களான மற்ற இளம்பெண்களும் வந்துவிட்டனரோ?’ என்று அவள் கருணையுடன் கேட்பதாக சொல்வர்கள்.

வல்லானை கொன்றானை, மாற்றரை மாற்றழிக்க வல்லானை, மாயனைப் பாட எங்களோடு வந்து சேர்ந்து கொள் என்று அழைக்கிறார்கள். வல் ஆனை – என்று குவலயாபீடம் என்னும் யானையை கொன்றான். கம்சன் முதலான அரக்கர்களை அவர்கள் அரக்க குணம் கெட அழிக்க வல்லவனான மாயக்கண்ணனை பாட வாராய் என்று அழைக்க அவளும் இவர்களோடு சேர்ந்து கொள்கிறாள்! இந்த பாசுரத்தில், பகவந்நாமத்தை இடையறாது அனுசந்திக்க வேண்டும். பாகவதர்களை மதிக்க வேண்டும்.
கர்வம் – அஹந்தை இவைகளை விடுத்து, எளிமையாக நைச்ய பாவத்துடன் இருக்க வேண்டும். ஆசார்யர்கள் சொன்ன வழியில் நடக்க வேண்டும். அனுஷ்டானத்தில் காலதாமதம் செய்தலாகாது. பகவானை பாகவதர்களுடன் சேர்ந்து சத்சங்கமாக அனுபவிக்க வேண்டும் என்று பாகவதர்களுக்கு உரியதான குணங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறாள்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 14 – உங்கள் புழக்கடை

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

ஆண்டாள் தம் குழுவினருடன் ஒவ்வொரு வீடாக சென்று இன்னும் எழுந்திருந்து வராத பெண்பிள்ளைகளையும் எழுப்பி தம்மொடு சேர்த்துக்கொண்டு செல்கிறாள். இங்கே இந்தப் பாசுரத்தில் அப்படி ஒரு வீட்டு பெண்ணை விடியலுக்கான உதாரணங்களை சொல்லி எழுப்புகிறாள். திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து, பதினைந்தாம் பாசுரம் வரை பத்து பாடல்களில் பத்து பெண்பிள்ளைகளை எழுப்புகிறாள் – இதில் ஐந்து பாசுரங்களில் விடிந்ததற்கான அடையாளங்களைச் சொல்லியும் ஐந்து பாசுரங்களில் அப்படி ஒரு அடையாளத்தையும் சொல்லாமலும் எழுப்புகிறாள். இன்றைக்கு எழுப்பப் போகிற பெண் சற்று வாக் சாதுர்யம் உள்ளவள். அவளது மதுரமான பேச்சுக்கு கண்ணனே மயங்குவன் என்று இவளை விசேஷமாக எழுப்புகிறாள்.

கிராமப்புரங்களில் இப்போதும் ஒரு வழக்கு உண்டு – யாருக்காவது காத்திருந்து மிகவும் நேரமாகிவிட்டால், அவர்கள் வந்தவுடன் – “எவ்வளவு நேரம் காத்திருந்தேன்! காத்திருந்து காத்திருந்து அலமந்து போச்சு!” என்பார்கள் – அதாவது அலர்மலர்ந்து போயிற்று – என்ற அர்த்தத்தில் – மிகவும் ம்ருதுவாக பூ மலரும் – அத்தனை நேரம் காத்திருந்தேன் என்று சொல்வது வழக்கம். அப்படி “பகலில் மலரும் செங்கழுநீர் பூக்கள் எல்லாம் மலர, இரவில் மலரும் ஆம்பல் எனும் கருநெய்தற் பூக்கள் கூம்பிட எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் உனக்காக” என்கிறார்கள். இதைக்கேட்ட அந்த பெண், “என்னைப்பார்த்து உங்கள் நீங்கள் வாய்திறந்தது செங்கழுநீர் என்றும் நான் வாய்மூடி இருப்பதைப்பார்த்து ஆம்பல் என்று சொல்கிறீர்களா? உங்களைப்பார்த்து நான் வாயடைத்துப் போய்விட்டேன் என்றா சொல்கிறீர்கள்?” என்கிறாள். இவர்கள் “இல்லை, நிஜமாகவே பொழுது விடிந்தது – பூக்களெல்லாம் மலர ஆரம்பித்துவிட்டன…” என்று சொல்ல, “நாமெல்லாம் வயற்புறங்களில் பூக்களை பிரித்தும் மூடியும் விளையாடுவது உண்டு…, இதெல்லாம் விடிந்ததற்கு அடையாளமா?” என்று கேட்க, “வயற்புறங்களில் மட்டுமல்ல.. உங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள சிறு குளத்திலும் இதே கதை தான்… பூக்களெல்லாம் மலர்ந்து விட்டன…” என்று சொல்கிறார்கள்.

“அங்கும் நீவிர் அதுவே செய்தீர்” என்கிறாள் அவள். இவர்களெல்லாம் சிறுமிகளாக விளையாடுவதை இந்த பாசுரம் அழகாக வெளிப்படுத்துகிறது. “இதென்ன இப்படி சொல்கிறாய், அளற்று பொடியிலே (செந்நிற பொடி – காவி நிறம் என்று கொள்ளலாம்) புரட்டிய ஆடை தரித்து, தம் ப்ரம்ஹசர்யம் தோற்ற வெண்ணிற பற்களை உடையவராய் சைவ சந்நியாசிகள் தங்கள் திருக்கோயில்களில் சங்க நாதம் எழ, வழிபாடு செய்ய கிளம்பி விட்டார்கள். வைஷ்ணவர்களான நாம் இன்னும் தூங்கலாமா? அனுஷ்டானமே இல்லாது போயிற்றே?” என்கிறாள். சைவ சந்நியாசிகள் க்ருஹஸ்தர்களைப்போல் தாம்பூலம் தரிப்பதில்லை – அதனால் அவர்களை வெண்பற்கள் உடையவர் என்று சிறுவர்களுக்கே உரிய விதத்தில் குறிப்பிடுகிறாள்.

இந்த பாசுரத்தில், தொடர்ந்து நங்காய்! நாணாதாய்! என்று தொடர்ந்து சொல்வதற்கு பூர்வசார்யர்கள் ஒரு அழகான விளக்கம் சொல்கிறார்கள். இந்த பெண் மிகுந்த ஞானம் உடையவள் – ஆனால் அனுஷ்டானத்தில் சிறிது வாசி ஏற்பட்டதால் அதை குறிப்பிட்டு  காட்டுகிறார்கள். வெறும் ஞானம் மட்டும் இருந்து அதற்கு தகுந்த அனுஷ்டானம் இல்லை என்றால் அது ஊருக்கு உபதேசம் போல்தான் அமையும். ‘அது நாய் வாலைப்போலே’ என்றார்கள். நாய் வால் மற்ற மிருகங்களைப்போலே ஈ எறும்பு ஓட்டுவதற்கும் பிரயோசனம் இல்லை, குறிகளை மறைக்கவும் உபயோகம் இல்லை – பேருக்கு இருக்கிறது. அதுபோல ஞானம் இருந்து அனுஷ்டானம் இல்லாமல் இருப்பது கூடாது, அனுஷ்டானமும் மிகவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்கள்.

வாய்பேசும் நங்காய்! உனக்கு வெட்கமே இல்லையே! க்ருஷ்ணன் பெண்களைப் பொய்யுரைத்து ஏமாற்றும் தீம்பன் – அவனுடைய சம்பந்தத்தால் அவனைப்போலவே நீயும் வாயால் பேசினாய்… செயலில் ஒன்றும் காணோமே! எங்கள் குறைதீர எழுந்திருந்து வருவாய்! என்று அழைக்கிறாள். “உங்களோடு வந்து நான் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?” என்று அவள் கேட்க, சங்கொடு சக்கரத்தையும் ஏந்தும் தடக்கைகளை கொண்ட பங்கஜாக்ஷனான பங்கய கண்ணனை பாடு! என்றார்கள்.

வ்யாக்யான கர்த்தா இங்கே ஒரு அழகான விளக்கம் சொல்கிறார். அரவிந்த லோசனான பகவான் சங்கையும், சக்கரத்தையும் இரு மலர்களைப்பொலே தாங்குகிறானாம். ஒன்று சூர்யனாகவும் இன்னொன்று சந்திரனாகவும் இருக்கிறது. இதில், அவனது நாபி கமலம் மலர்ந்து மலர்ந்து கூம்புகிறதாம். இவனோ, ‘கண்ணாலே நமக்கெழுத்து வாங்கி, நம்மையெழுத்து வாங்குவித்து கொள்ளுமவன்’ என்று ஏமாற்றுகிறான். அதாவது அவன் கண்ணழகை காட்டுவனாம். நாம் அதில் மயங்கி அருகே செல்ல, நம்மை அடிமையென எழுதி வாங்கிக்கொண்டு விடுவனாம். உறங்காவில்லி தாசர் கதை நினைவுக்கு வருகிறது. இப்படிப்பட்ட மாயனை எழுந்து வந்து எங்களோடு சேர்ந்து பாடு என்று சொல்ல அவளும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொண்டாள்!

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 13 – புள்ளின்வாய்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளுஞ் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந் தவிர்ந்து கலந்தே லொரெம்பாவாய்!

போதரிக் கண்ணினாய்! என்று ஆச்சரியமாக இந்த வீட்டுப் பெண்பிள்ளையை அழைக்கிறாள் ஆண்டாள். பூர்வாசார்யர்கள் மிகவும் அழகாக ஒரு உருவகத்தை சொல்வர்கள் – இந்த வீட்டு வாசலில் கோபிகைகளுக்குள் சிறிய வாக்குவாதம் வந்து விட்டது – ராமனை பாடுவதா? க்ருஷ்ணனை பாடுவதா? இவர்களுக்கு தாபமோ க்ருஷ்ணன் மேல் – ஆனால் மனத்துக்கினியவன் ராமனே என்று ஒரு கட்சி கிளம்புகிறது. ஒருவரி ராமனுக்கு இன்னொரு வரி க்ருஷ்ணனுக்கு என்று இதற்கு முந்தைய பாட்டிலிருந்தே பாடி வருகிறார்கள்.

இங்கே இந்த வீட்டுக்கு வாசல் வந்ததும், க்ருஷ்ணனை நினைத்து – பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு உருவம் கொண்டு வந்தபோது கண்ணன் அவன் வாய் பிளக்க கொன்றான் என்றார்கள் ஒரு கோஷ்டியினர். பொல்லா அரக்கனான ராவணனை புல்லை கிள்ளிப்போடுவது போல் அவன் தலையை கிள்ளி எறிந்தான் என்றார்கள் மற்றையோர்.

இப்படி இவர்கள் கீர்த்திமைகள் பாட, நடுவில் ஒரு பெண்பிள்ளை, இவர்களை சமாதானப்படுத்தி, உள்ளே தூங்குகிற பெண்ணை போய் எழுப்புவதற்காக “பெண்ணே, வானில் சுக்ரன் உதயமாகி குரு கிரஹம் அஸ்தமனமானபோதே மற்ற பெண்களெல்லோரும் எழுந்திருந்து நோன்பு நோற்க போய்விட்டார்கள்… எழுந்திருந்து வா” என்று சொல்கிறாள். அவள் “அதெப்படி சுக்ரன், குரு முதலான கிரஹங்கள் உதயமாவதும் அஸ்தமனமாவதும் இவர்களுக்கு தெரியும்… இவர்கள் நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமால் எனுமவர்களாயிற்றே!” என்று சொல்ல, இவர்கள் பறவைகளெல்லாம் எங்கும் பறந்து கூவும் சப்தம்கூட கெட்கவில்லையா என்று சொல்லி உள்ளே சென்று அவளை தொட்டு எழுப்புவதற்காக செல்கிறார்கள்.

அவளோ இவர்கள் உள்ளே வருவதைப் பார்த்து தூங்குவது போல் கள்ளமாக நடிக்கிறாள். “பாவாய்! இன்னும் சூரிய உதயமாகவில்லை… இப்போதே கிளம்பி குளிர்ந்த நீரில் நீராட வேண்டாமா… இதுவே நல்ல நேரம்… உன் கள்ளத்தனத்தை விட்டு எங்களோடு கலந்து கொள்” என்று அழைக்கிறாள்.

இந்த பாடலில் புள்ளின் வாய் கீண்டது க்ருஷ்ணன் என்றும் பொல்லா அரக்கனை கொன்றது ராமன் என்றும் சொல்வது ஒரு வகை அர்த்தம். இன்னொரு வகையில், புள்ளின் வாய் கீண்டது ராவணன் – புள் என்னும் பட்சியாகிய ஜடாயுவை கொன்றான் ராவணன் – அந்த பொல்லா அரக்கனைக் கொன்றவன் ராமன் என்று முழுவதுமே ராமனைப்பற்றித்தான் பாடுகிறார்கள் என்று வேறொரு வகையில் ரசிக்கும்படியும் பெரியோர் அர்த்தங்கள் அருளியிருக்கிறார்கள்.

அரக்கன் என்றாலே தீயவன் தானே – பொல்லா அரக்கன் என்று சொல்வது ஏன் என்று கேட்டால், நல்ல அரக்கர்களும் இருந்திருக்கிறார்கள். விபீஷணன், பிரகலாதன், மாவலி என்று நல்லவர்களும் அரக்கர் குலத்தில் தோன்றி பகவத் பக்தர்களாகவும் நல்ல சிஷ்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அதுவும் ராவணன் செய்த பாவங்களை சொல்லவே கஷ்டப்பட்டு பொல்லா அரக்கன் என்றார்கள்.

வியாழம் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். நாஸ்தீக மதமான சார்வாகத்திற்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யனாகவும் அவர்களுடைய சித்தாந்தத்தை உருவாக்கியதாகவும் சொல்வர். ஆக அப்படி நாஸ்தீகம் ஒழிந்து நல்ல ஞானம் எழுந்ததை வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று குறிப்பால் சொல்கிறாள். மேலும் ‘மாயனை…’ பாசுரத்தில் நோன்பில் எப்படி பரமனை மூன்று கரணங்களாலும் துதிக்க வேண்டும் என்று சொன்ன பிறகு, அடுத்த பாசுரத்தில் ஒவ்வொரு வீடாக பெண்பிள்ளைகளை எழுப்ப ஆரம்பித்த போது முதல் பாட்டாக ‘புள்ளும் சிலம்பின காண்’ என்று தொடங்குகிறாள். அதை இங்கே நினைவு கூர்ந்து, அந்த அடையாளங்களை மறுபடி நினைவூட்டுகிறாள்.

போதரிக் கண்ணினாய் என்னும் பதத்தை விதவிதமாக பிரித்து பெரியோர் அனுபவிக்கிறார்கள். போது என்றால் புஷ்பம் – பூவினுடைய துளிர். அரி என்றால் வண்டு. பூவில் வண்டு மொய்த்தாற்போல அலையும் கண்களை – உன் கண்ணசைவை கண்டு கொண்டோம் – என்று சொல்கிறார்கள். வேறொரு அர்த்தமாக போது என்றால் பூ, அரி என்றால் மான் – இவைகளைப்போன்ற விழிகளைக் கொண்டவளே என்றும் கொள்ளலாம். வேறொரு விதமாக போது என்றால் பூ, அதை அரி என்றால் அழிக்கக்கூடிய – பூவின் அழகையும் விஞ்சக்கூடிய அழகான கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

குள்ளக்குளிர குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ! என்று கேட்கும்போது க்ருஷ்ணனை பிரிந்து விரஹ தாபமே சுட்டெரிக்கிறது. இன்னும் சூர்யோதயம் ஆகிவிட்டால் எங்கும் வெம்மை படர்ந்து விடும். அதனால் இப்போதே கிளம்பி நோன்புக்கு ப்ரதான அனுஷ்டானமான நீராட்டத்துக்கு உன் பாசாங்கைத் தவிர்த்து எங்களோடு வந்து கலந்து கொள் என்று அழைக்க அவளும் வந்து இவர்களோடு இணைந்து கொள்கிறாள்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 12 – கனைத்து

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தானெ ழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தே லோரெம்பாவாய்!

கர்ம யோகியாகவும் அனுஷ்டானத்தில் சிறந்தவராகவும் இருந்த கோபாலர் ஒருவர் பெற்ற பாகவத பெண்பிள்ளையை ஆண்டாள் எழுப்பிய பாசுரத்தை இதற்கு முந்தைய ‘கற்று கறவை…’ பாசுரத்தில் பார்த்தோம். இன்றைய பாசுரத்தில், அத்தகைய அனுஷ்டானத்தை எல்லாம் விட்டு விட்டு கண்ணனையே அண்டியிருந்த கோபாலன் ஒருவனை குறிப்பிட்டு சொல்கிறாள் ஆண்டாள். இந்த கோபாலன் கண்ணனுக்கு தொண்டு செய்வதில் – கைங்கர்யம் செய்வதில் மிகவும் ஆவல் கொண்டு அதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறான். இவன் தன்னுடைய சொத்தான பசுக்களை மேய்ப்பது, பால் கறப்பது போன்ற காரியங்களை சரிவர செய்வதில்லை. ஸ்வதர்மத்தை சாமான்யமாக கொண்டு அதை விட்டு, கிருஷ்ணனுக்கு தொண்டு செய்வதை விசேஷ தர்மமாக பிடித்துக்கொண்டிருக்கிறான்.

இவன் நிரவதிகமான செல்வம் உடையவன். அதோடு அந்த செல்வத்துக்கெல்லாம் தலையாய செல்வமாக கைங்கர்யஸ்ரீ என்னும் தனத்தை தன்னிடத்தே கொண்டிருப்பவன். தனக்கு விதிக்கப்பட்ட அனுஷ்டானத்தை – ஸ்வதர்மத்தை கடைபிடிக்க வில்லையானால் பாவம் சேரும். ஆனால் அப்படி அனுஷ்டிக்க முடியாமல் போனதற்கு பகவத் கைங்கர்யம் என்னும் விசேஷ காரணம் இருக்கும் படியால், பாவம் சேராது என்பது உட்பொருளாக ஆண்டாள் குறிப்பிடுகிறாள். அதனால் அப்படிப்பட்ட கைங்கர்யஸ்ரீ எனும் செல்வத்தைப்பெற்ற நற்செல்வன் தங்காய்! என்று அவனுடைய தங்கையை எழுப்புகிறாள் ஆண்டாள்.

தசரதன் சத்யத்தை காக்கவேண்டும் என்கிற சாமான்ய தர்மத்தை பிடித்துக் கொண்டு, ராமனை காட்டுக்கு அனுப்பினான். அவனால் மோக்ஷம் அடைய முடியவில்லை. அதுவே விபீஷணன் செய்நன்றி பாராட்டுதல் என்னும் சாமான்ய தர்மத்தை விட்டு, விசேஷ தர்மமாக ராமனையும், ராமனுடைய தர்மத்தையும் உணர்ந்து சரணாகதி செய்தான். அவன் ஆசைப்பட்டபடி  சிரஞ்சீவியாக வாழ்ந்தான். இதனால் தர்மத்தின் பாதை சூக்ஷ்மமானது – சில நேரங்களில் சாமான்ய தர்மத்தை விட்டு விசேஷ தர்மத்தை கடைப்பிடிப்பது தவறில்லை – என்பது தேறும்.

இந்த வீட்டினுள் நுழையும் போதே மிக அழகான காட்சி உருவகத்தை ஆண்டாள் நம் கண்முன் நிறுத்துகிறாள். இந்த வீட்டு தலைவனான நற்செல்வன் கண்ணனுக்காக ‘சென்று செருச்செய்ய’ – போரிட போயிருக்கிறான். இங்கே வீட்டில் கன்றுடன் கூடிய எருமை மாடுகள் நிறைய இருக்கின்றன. அவன் கண்ணனுக்காக போரிடப் போய்விட்டதால் அவற்றின் பாலைக் கறக்கவும், கன்றை ஊட்ட விடவும் ஆளில்லை. அதனால் மாடுகள் கன்றுகளுக்கு ஊட்ட முடியவில்லையே என்று தவித்து கத்துகின்றன. அவற்றை யாரும் கறக்காமலும், கன்றும் வந்து பால் அருந்தாமல் இருந்தபோதும் தமது வாத்சல்ய குணத்தினாலே, தானே பாலை தம் மடிவழியே சொரிகின்றன. ம்ருக ஜாதியாய் இருந்தாலும் அவற்றுக்கும் உள்ள தாய் சேய் பாசத்தினால் மடியிலிருந்து பால் தானாகவே பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் இவர்கள் வீட்டு வாசற்புறமெங்கும் சேறாகி விட்டது.

இப்படி இருக்கையில் ஆண்டாளும் கோபிகைகளும், வருகிறார்கள். மார்கழி மாதத்துக்கே உரிய பனி பெய்கிறது. மேலே பனி – கீழே சேறு இதன் நடுவில் வாசலில் வந்து வழுக்காமல் இருப்பதற்காக நிலைப்படியையும், உத்தரத்தையும், தண்டியத்தையும் என ஆளுக்கு கிடைத்ததை பற்றிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறோம். நீ நற்செல்வன் தங்கையாயிற்றே! இதென்ன ஒரே பெருந்தூக்கத்தில் ஈடுபட்டிருக்கிறாய்? என்று அழகான காட்சி உருவகத்துடன் இந்த பாசுரத்தை ஆண்டாள் பாடியிருக்கிறாள்.

ஒருவேளை இவள் க்ருஷ்ணனுடன் ஊடல் கொண்டு எழுந்து வர மறுக்கிறாளோ என்று நினைத்த ஆண்டாள், சரி ராமனைச் சொல்லுவோம் என்று சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் என்கிறாள். ஆண்டாள் இங்கே ராமனைப் பாடியதற்கு சிறப்பான அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். கண்ணன் அவன் மீது ப்ரேமை கொண்ட கோபிகைகளை காக்க வைத்து, நிர்தாட்சண்யமாக ஏங்க வைத்து இரக்கமின்றி அலைக்கழிக்கிறான். ஆனால் ராமனோ, அவன் தாய் கெளசல்யை ஆகட்டும், சீதை ஆகட்டும், கைகேயி, சூர்ப்பனகை என்று எல்லோரிடமும் கருணை காட்டினான். அவர்களனைவரையும் மதித்தான். கண்ணனைப்போல், ஆஸ்ரித விரோதிகளை வதம் பண்ணுவதில் ராமனும் மிகுந்த வேகம் கொண்டவன் – அதனால் சினத்தினால் – என்று அவனும் சினங்கொண்டு அழிக்கக்கூடியவன் – சக்தியும் உண்டு – கருணையும் உண்டு – ஆகவே அவனைப்பாடுவோம் என்றார்களாம்.

இலங்கைக் கோமான் என்று சொல்லும்போது, ராவணன் சக்தியை நினைத்துப்பார்க்கிறாள். ராவணன் மூன்றரைக்கோடி ஆண்டுகள் வாழ்ந்ததாக இதிகாசம் சொல்லும். அதிலும் அவன் தவமியற்றி சிவபெருமானை தரிசிக்கும் அளவுக்கு சிறந்த சிவபக்தன். நவக்கிரகங்களையும் காலில் போட்டு மிதித்தவன். குபேரனின் ஐஸ்வர்யத்தை கொள்ளை அடித்து அவனை துரத்தியவன். இப்படி தன் பலத்தால் பல பெருமைகள் கொண்டும், அகந்தையால் அழிந்தான். சிவபெருமானையே அசைத்துப்பார்க்க நினைத்து சிவபெருமானின் கால் விரலுக்கு ஈடாகமாட்டோம் நாம் என்பதை அவன் அறிந்தும் அகந்தையை குறைத்துக்கொள்ளவில்லை.

ராமன் வந்து அவன் ஐஸ்வர்யங்கள், நாடு, மக்கள், சேனை என்று ஒவ்வொன்றாக நொறுக்கி, இறுதியில் நிராயுதபாணியாக நிறுத்தி உயிர்ப்பிச்சை கொடுத்தும் அவனுக்கு அகந்தை போகவில்லை. ராமன் ஏன் அவனை ஒரே பாணத்தில் கொல்லவில்லை?, அவனுக்கென்ன கொஞ்சம் கொஞ்சமாக அழிப்பதில் ஒரு க்ரூர திருப்தியா? என்றால், அப்படியல்ல… இப்போதாவது திருந்துவானா என்று ஒவ்வொரு சண்டையிலும் அவனுக்கு சந்தர்ப்பம் கொடுத்து சரணாகதி செய்ய நேரம் கொடுத்துப்பார்க்கிறான் ராமன். அப்படியும் திருந்தாமல் வணங்காமுடியாகவே அழிந்ததால் கோமான் என்று குறிப்பிடுகிறாள்.

இப்படி நாங்கள் பாடிக்கொண்டே இருக்க நீ துங்கிக்கொண்டே இருக்கிறாயே! இனியாவது எழுந்திரு – இனித்தான் எழுந்திராய்! மற்ற வீட்டுக்காரர்கள், நீ இன்னும் எழுந்திருக்கவில்லை, பாகவதர்களைக் காக்க வைத்தாய் என தெரிந்து உனக்கு அவமானமாகப் போய்விடபோகிறது என்று சொல்கிறாள். இதன் பிறகு அந்த வீட்டுப்பெண்ணும் வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்கிறாள்.

Comments (1)

திருப்பாவை 11 – கற்றுக்கறவை

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்றுசெருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!

இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த ஒரு கோபாலனின் பெண். இவர்கள் வீட்டில் கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் நிறைய இருக்கிறதாம். பசுக்களை எண்ணி சொல்வதிருக்க இவர்கள் வீட்டில் பசுக்கூட்டங்களையே எண்ணிப்பார்க்க முடியாதாம். அவ்வளவு பசுக்கள். கற்றுக்கறவை என்ற பதத்தில் சிறிய கன்றாக இருக்கும்போதே கன்றை ஈன்று பால் சுரக்க ஆர்ம்பித்துவிட்ட பசுக்கள் என்றும் அர்த்தங்களை பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள்.

இந்த பெண்ணின் தகப்பனார் இவ்வளவு பசுக்கள் இருக்கிறதே என்று சிறிதும் ஆயாசப்படாமல், தமக்கு தேவையானது போக, மீதமுள்ள பசுக்களையும் அவைகள் மடியில் பால் கட்டி துன்பப்படாமல் இருப்பதற்காகப் பாலை கறந்து விடுவாராம். அதோடு மட்டும் அல்ல… அவர் இந்த திருவாய்ப்பாடிக்கும் கண்ணனுக்கும் எதிரிகளாயிருப்பவர்களை அவர்கள் பலத்தை அழித்து அவர்களை குன்றிப்போக செய்து விடுவாராம். அத்தகைய எதிரிகள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களை அடக்கிவிடுவாராம். தானுண்டு தன் வேலையுண்டு என்று பால் கறக்கும் இடையருக்கு ஏது எதிரி என்றால் – கண்ணனுக்கு யார் எதிரியோ அவர்களே இவர்களுக்கும் எதிரிகள். கண்ணனுக்கு என்ன ஒரு எதிரியா.. இரண்டு எதிரியா.. எவ்வளவோ அசுரர்கள் – அதனால் இன்னார் என்று சொல்லாமல் செற்றார் என்று பொதுவாகச் சொல்கிறாள் ஆண்டாள்.

இந்த கோபாலர் தம் கடமையில் கர்ம யோகியைப்போல் கண்ணாயிருப்பார். வர்ணாச்ரம தர்மங்களை கடைபிடிப்பவர். நல்ல அனுஷ்டானத்தைக் கொண்டவர். கண்ணனுக்கு எதிரிகள் இருப்பரேல் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அவர்களுடன் போரிடக்கூடியவாராய் பலமும் தைரியமும் மிகுந்தவர். அதோடு எதிரிகள் திறலழிந்தபின் – அதாவது அவர்கள் கையில் ஆயுதத்தை இழந்து நிராயுதபாணிகளாக நின்றுவிட்டால் அவர்களை எதுவும் செய்வதில்லை. திறன் இருக்கிற எதிரியுடன் மோதி அவன் திறனை அழிக்ககூடிய சாமர்த்தியம் உள்ளவர். ஞான பல ஐஸ்வர்ய சித்திகளை பெற்றவர். அப்படிப்பட்ட குற்றமே இல்லாத கோவலர் – இடையர் வீட்டில் பொற்கொடியாக பிறந்தவளே! என்று அழைக்கிறாள் ஆண்டாள்.

அடுத்து புற்றரவல்குல் புனமயிலே! போதராய்! என்கிறாள். ‘எவ்வளவு அழகான பெண் நீ!’. பாம்பு நுழையும் புற்றைப்போல இடையை உடைய பெண்ணே! வியாக்கியானத்தில் ‘புறம்பே புறப்பட்டு புழுதியடைந்த உடம்பன்றிக்கே தன்னிலத்திலே வர்த்திக்கிற ஸர்ப்பத்தினுடைய பணமும் கழுத்தும் போலே ஒளியையும் அகலத்தையும் உடைய நிதம்ப ப்ரதேசத்தை உடையவளே’ என்று பூர்வாசார்யர் அருளியிருக்கிறார்.

பூர்வசார்யர்கள் ஸ்வாபதேசமாக சில குறியீடுகளை விளக்கியிருக்கிறார்கள் – அதாவது திருப்பாவையில் இடையை குறிப்பிடும் இடங்கள் வைராக்கியத்தை குறிக்கும் – இடை சிறுத்து இருப்பது போல் ஆசை சிறுத்து வைராக்கியம் வந்த நிலை – மார்பை குறிப்பிடும் போது பக்தியை குறிக்கும் – மார்பகங்கள் பெற்ற குழந்தைகளுக்கு உயிர் ஊட்டவும், கணவனுக்கு இன்பத்தை தருவதாகவும் தனக்கன்றி தன் குழந்தைகளுக்கும், கணவனுக்கும் என இருப்பதால், தனக்கன்றி தெய்வத்துக்காகவே வெளிப்படும் அன்பை – பக்தியை குறிக்கும். சிரசை, கண்களை சொல்லும்போது ஞானத்தை குறிக்கும் என்று விளக்கங்கள் சொல்வர்.

இந்த பெண்ணுக்கு மயில் தோகையைப்போன்ற விரிந்த அளகபாரம் – விரிந்த கூந்தல் உண்டாம். இவள் கண்ணனுக்கு மிகவும் அணுக்கமானவள் – ப்ரியமானவள். தேசமுடயாய் என்று வேறொரு கோபிகையை சொன்னாளே அதைப்போல் இவளது பக்தி உள்ளார்ந்த தானே சுடர்விடக்கூடியது என்று குறிப்பால் உணர்த்துகிறாள். பொற்கொடி, புனமயில் என்று சொல்லுவதெல்லாம், இவள் மெல்லிய இயல்பை உடையவள், கொழுகொம்பின்றி கொடி வாடியிருப்பது போலே க்ருஷ்ணன் இல்லாமல் இவள் வாடுகிறாள். க்ருஷ்ணனை அண்டியே உஜ்ஜீவனம் செய்யும் பரதந்த்ரை இவள் என்று உணர்த்துவதற்காக ஆண்டாள் சொல்கிறாள்.

அடுத்து, இந்த திருவாய்ப்பாடி முழுவதும் உள்ள கோபிகைகள் அனைவரும் பந்துக்கள் – பாகவத சம்பந்தம் உடையவர்கள். அப்படி உன் சுற்றமான தோழிமார் எல்லாரும் உன் முற்றத்தில் வந்து நின்று முகில் வண்ணனான கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். உன் வீட்டு முற்றம் கண்ணனுக்கு உகப்பானது. அதனால் எங்களுக்கு வந்து அங்கே நின்று அவன் பேர்பாடுவதில் ஒரு ஆனந்தம். நாங்கள் இங்கே உரக்க அவன் பேரை பாடிக்கொண்டிருக்க, நீ இடத்தை விட்டு நகராமல், பேசாமல், செல்வம் நிறைந்த பிராட்டியாக இருக்கிறாயே! இது பாகவதர்களுக்கான லக்ஷணமா? உன் உறக்கத்திற்கு அர்த்தம் என்ன? என்று கேட்டு அவளை ஆண்டாள் எழுப்ப அவளும் எழுந்து மற்ற பாகவத பெண்பிள்ளைகளுடன் சேர்ந்தாள்.

Comments (1)

திருப்பாவை 10 – நோற்றுச் சுவர்க்கம்

நொற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றாமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ!
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

இந்த பாட்டில் கண்ணனுக்கு மிகவும் பிடித்தமான கோபிகை ஒருத்தியை துயில் எழுப்ப பாடுகிறார்கள். இவள் முதல் நாள், நோன்பைப்பற்றியும் அதன் ப்ரயோஜனத்தைப் பற்றியும் நிறைய பேசிவிட்டு இப்போது தூங்குகிறாள். கும்பகர்ணனையே ஜெயித்தவள் போல் தூங்குகிறாள். இவர்கள் அவளை எழுப்ப குரல் கொடுத்தும், ஆற்ற அனந்தலுடன் பதில் பேசாமல் உறங்குகிறாள். அதனால் வெளியே ஆண்டாள் இவளை சிறிது கிண்டல் செய்து பாடுகிறாள். உயர்ந்த மோக்ஷ புருஷார்த்தம் இருக்க தாழ்ந்த சுவர்க்கானுபவத்துக்கு ஆசைப்படுவதுபோல், க்ருஷ்ணனை அனுபவிப்பது இருக்க இப்படி தூக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாயே! ஏ.. ஸ்வர்க்கம் போகின்ற அம்மனே! என்று கேலி செய்கிறாள்.

இதற்கு வேறு விதமாகவும் அர்த்தங்கள் சொல்வர். சுவர்க்கானுபவம் என்பதை க்ருஷ்ணானுபவத்தை குறிப்பதாகக் கொள்ளலாம். ஆண்டாள் அந்த கோபிகையை சுவர்க்கம் புகுந்து கொண்டிருக்கிற அம்மனே! என்கிறாள். சுவர்க்கத்தில் புகுந்துவிட்ட என்றோ, புக போகின்ற என்றோ சொல்லாமல் புகுகின்ற – புகுந்து கொண்டிருக்கிற என்று சுகத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்கிற ஸ்வாமிநியாக – அம்மனாக – தலைவியாக இந்த கோபிகை இருக்கிறாள். இப்படி ஆனந்தத்தில் முழ்கி நமக்கு வாசலும் திறக்காமல், உள்ளே இருந்தபடியே பதிலும் சொல்லாமலிருக்கிறாயே! என்கிறாள் ஆண்டாள்.

இப்போது ஆண்டாளுக்கு சந்தேகம். “ஏன் வாசல் திறக்கவில்லை? உள்ளே கண்ணன் இருக்கிறானோ? அதனால்தான் திறக்க மறுக்கிறாயா?” என்று கேட்க, அவள் உள்ளிருந்தே “கண்ணன் இங்கு இல்லை…” என்கிறாள். ஆண்டாள் “அதுதான் அவன் சூடும் மணம் மிகுந்த திருத்துழாய் – துளசியின் மணம் காட்டிக்கொடுக்கிறதே?” என்கிறாள். அதற்கு அவள் “கண்ணன் உங்களுக்கு தெரியாமல் எப்படி என் வீட்டிற்குள் வரமுடியும்… ” என்று சொல்ல, “அவன் அந்தர்யாமியான நாராயணன் அல்லவா?.. அவன் எதனுள்ளும் இருக்கிறான். சேஷத்வத்தை நமக்கு மீட்டு கொடுக்கும் தர்ம ஸ்வரூபம் அல்லவா அவன்” என்று ஆண்டாள் சொல்கிறாள்.

இதற்கும் அந்த கோபிகையிடமிருந்து பதில் வராமல் போகவே, “கண்ணனைச் சொல்லவும் மறுபடியும் கனவு காண போய்விட்டாளோ” என்று பயந்து, ஆண்டாள் ராமாவதாரத்தின் போது நடந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறாள். இந்த பெண் இப்படி தூங்குகிறதே! கும்பகர்ணனுக்கும் இவளுக்கும் போட்டி வைத்து கும்பகர்ணன் தோற்றுப்போய் தன் தூக்கத்தையும் இவளிடம் சமர்பித்து விட்டானோ? அவன் அந்ய தேவதாந்தரங்களிடம் ‘நித்யத்வம்’ கேட்கப்போய் நா பிறழ்ந்து ‘நித்ரத்வம்’ கேட்டு கூற்றத்தின் வாய் வீழ்ந்தவனாயிற்றே! இவளும், தர்ம ஸ்வரூபமான ஸம்ஸ்த கல்யாண குண பூர்ணனான நாராயணனிடம் ‘நித்ய சேஷத்வம்’ கேட்பதிருக்க, இங்கே நித்ரையில் இருக்கிறாளே! என்று சொல்லி புலம்புகிறாள்.

கிள்ளி களைந்தான், வாய் கீண்டான் என்றெல்லாம் பெருமான் அரக்கர்களை அழித்த கதையை சொல்கிற ஆண்டாள் இங்கே மட்டும்  கூற்றத்தின் வாய் வீழ்ந்தான் என்று கும்பகர்ணன் தானே போய் வீழ்ந்ததாக ஏன் சொல்கிறாள்? ஏனென்றால் மற்ற அரக்கர்கள் எல்லாம் எதிர் நிற்பது பரமன் என்று அறியவில்லை. ஆனால் கும்பகர்ணன் அறிந்தே போய் வீழ்ந்தான். ராவணனே வந்து சரணடைந்தாலும், அவனுக்கு சரணாகதி அளித்து ரக்ஷிப்பேன் என்று சொன்ன கருணா சாகரத்தை – ‘தண்ணீர் குடிக்க கல்லின ஏரியிலே அமிழ்ந்து, சாவரைப் போலே’ – என்று தெரிந்தே வந்து வீழ்ந்து யமனுலகம் அடைந்தான்.

ஆற்ற அனந்தலுடையாய்! கண்ணனைக் கைக்கொண்ட ஒரு கர்வத்தில் இருக்கிறாயோ! நீ சாதாரணப்பட்டவள் இல்லை… அருங்கலம். பகவத் அனுக்ரஹத்துக்கு உக்தமான பாத்திரமானவள் நீ! அந்த ராமாவதாரத்தில் ராமனின் தூதனாக லக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு அவன் கடமையை நினைவூட்ட வந்தபோது, தாரையானவள் தன் ஆடைகள் கலைந்த நிலையிலேயே வந்து நின்றாள். நீ அப்படி செய்து விடாதே! இங்கே கோபிகைகள் ஏராளமானோர் இருக்கிறோம்.. அதனால் தேற்றமாய்-திருத்தமாய் வந்து கதவைத் திற! என்று சொல்ல அந்த பெண்ணும் இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டாள்.

இதில் உள்ள முக்யமான தத்வ விசாரம் ஒன்றை பெரியோர் அருளியிருக்கிறார்கள். இங்கே இவர்கள் பகவதானுபத்திற்காக த்வரையுடன் துடிக்கிறார்கள். அங்கே அவளோ நிச்சிந்தையாக தூங்குகிறாள். இதில் இவர்கள், ‘பரமனை எப்படி அடைவது? எப்போது அடைவது?’ என்று துடிக்கிறார்கள். அவளோ, ‘மோக்ஷமெனும் வீடுபேற்றை தருவது அவன் கருணையல்லவா? நாம் என்ன செய்துவிட முடியும்?’ என்று கிடக்கிறாள். வெளியே இருப்பவர்களுக்கு அவனே ப்ராப்யம். அவனே பேறு. அவனை அடைவதே வீடுபேறு. உள்ளே இருப்பவளுக்கு அவனே ப்ராபகன். வீடுபேற்றை அளிப்பவன். தன்னையே அளிப்பதானாலும் அவனே அளிக்கவல்லவன். சுருக்கமாக வெளியே இருப்பவர்கள் ‘அவனன்றோ பேறு’ என்கிறார்கள் – அவனை அடைய துடிக்கிறார்கள். உள்ளே இருப்பவள் ‘அவனாலன்றோ பேறு’ என்று கொண்டிருக்கிறாள் – அதனால் அவன் தரும்போது தரட்டும் என்று கிடக்கிறாள். இரண்டுமே சரிதான். சிலரை துடிக்க வைப்பதும், சிலரை நிச்சிந்தையாக நிஷ்காம்யமாக இருக்க வைப்பதும் அவனது லீலை அல்லவா!

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 9 – தூமணி மாடம்

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

இந்த பாசுரத்தில் கண்ணனுக்கு மிகவும் நெருங்கிய ப்ரியமானவளான பெண்ணை எழுப்பச் செல்கிறார்கள் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள். பகவத் பக்தர்கள் – பாகவதர்கள் அனைவரும் பந்துக்கள் – உறவினர். அனைவரும் பரமாத்மாவிடமிருந்து பிரக்ருதி சம்பந்தத்தால் வந்த தேக பந்துக்கள். பரமாத்மா எல்லோருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில் “மாமன் மகளே!” என்று ஆண்டாள் அன்போடு அழைக்கிறாள். ‘இட்டீடு கொள்கைக்கு விடவொண்ணாத முறை கட்டிக்கொண்டு..’ என்றபடி க்ருஷ்ண சம்பந்தம் பெற்ற திருவாய்ப்பாடியிலே தனக்கும் ஒரு உறவு இருந்தால் எப்படி இருக்கும் என்ற த்வரையினால் ஆண்டாள் அப்படி அழைக்கிறாள். அந்த கோபிகையோ க்ருஷ்ணனையே மறந்துவிட்டது போல் துயிலணைமேல் படுத்து தூங்குவதால் அவள் தாயரை மாமீ – அவளை எழுப்புங்களேன் என்று கேட்கிறாள்.

இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாட்டில் கோபிகைகள் கண்ணனுக்கு பிடித்தமான ஒரு கோபிகையை எழுப்ப அவளது தாயாரை துணை வேண்டுவதைப்போல் – இதே மாதிரியான ஒரு சூழலில் நம்மாழ்வார் ஒரு பத்து பாசுரங்கள் பாடியிருக்கிறார். தலைவியான பராங்குச நாயகியைப்பற்றி அவளது தோழி, பராங்குச நாயகியின் தாயாரிடம் பேசுவதாக அமைந்துள்ள இப்பாசுரங்கள் ஒப்பு நோக்கத்தக்கவை. நம்மாழ்வார் பாசுரத்தில் தலைவி திருதொலைவில்லி மங்கலத்தில் இருக்கும் பெருமானிடம் காதல் கொண்டிருக்கிறாள். ஆண்டாள் தூங்கிக்கொண்டிருக்கிற கோபிகையை, ஊமையோ.. செவிடோ என்று கேட்கிறாள். இதே போல நம்மாழ்வார் பாசுரத்திலும், “அன்னைமீர் ! அணிமாமயில் சிறுமானிவள் நம்மைக்கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் – தொலைவில்லிமங்கலமென்றல்லால்” என்று தொலைவில்லி மங்கலம் தவிர வேறு வார்த்தைகள் அவள் காதிலேயே விழுவதில்லை என்கிறார்.

இந்த தொலைவில்லிமங்கல பாசுரங்களில் முதல் பாசுரம் ‘துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்’ என்றே தொடங்குகிறது. இதை பூர்வாசார்யர்கள் தூமணி மாடத்து என்ற பதத்துடன் பொருத்தி அற்புதமாக அர்த்த விசேஷங்களை அருளியிருக்கிறார்கள். தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினம் ஆகியவற்றை காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். அவற்றை இரண்டாக தோஷமுள்ள ரத்தினங்கள், தோஷமே இல்லாத ரத்தினங்கள் என்று பிரித்து அவற்றில் தோஷமுள்ள ரத்தினங்களில் தோஷத்தை நீக்கி ‘துவளில் மாமணி’களாக மாற்றி தன் மாளிகையில் பெருமான் வைத்துக்கொள்ளுவனாம். தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு கொடுப்பனாம்.

அத்தகைய தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் ஏற்றி ஒளிர தூபம் கமழ துயிலணை மேல் ஆனந்தமாக அந்த கோபிகை தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கும் தமக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லி “மாமன் மகளே! மணிக்கதவை திற!” என்று ஆண்டாள் கேட்கிறாள். பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளை அவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ?

சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்.. நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள். இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ?

அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .

இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான். ‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான். பிராட்டி இல்லையென்றால் அவனால் ரக்ஷிக்க முடியாது – காகாசுரன் எவ்வளவு பெரிய அபசாரம் செய்தும் பிராட்டியுடன் ராமன் இருந்தபடியால் கொல்லப்படாமல் ரக்ஷிக்கப்பட்டான். அப்படி இந்த மிதுனம் ரக்ஷிக்கையை குறிக்கும். ‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம். ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும்.

இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.

Comments (1)

திருப்பாவை 8 – கீழ்வானம்

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துஉன்னை
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!

இப்போது ஆண்டாள் தன் குழுவான கோபிகைகளுடன் எழுப்ப செல்லும் பெண் ஒரு சிறந்த ஞானி. பகவானான கண்ணனுக்கு ப்ரியமானவள். அதனால் கோதுகலமுடைய பாவாய்! என்று அன்போடு அழைக்கிறாள். இங்கேயும் அந்த பெண்ணுடன் ஆண்டாள் ஒரு சம்பாஷணையில் ஈடுபடுகிறாள். ‘கீழ்வானம் வெளுத்து அருணோதயம் ஆகிறது… இன்னும் நீ எழுந்திருக்க வில்லையா?’ என்கிறாள் ஆண்டாள். இங்கே கீழ்வானம் என்பதில் வானம் என்று ஆகாசத்தை குறிக்கிறது… ஆகாசம் என்பது ஒவ்வொரு ஜீவாத்மாவினுள்ளும் தஹாராகாசம் என்னும் மனத்தின் உள்வெளியை குறிக்கிறது. தஹாராகாசம் வெள்ளென்று சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டொளிரும் பரமாத்மாவை கண்டு கொள்ள முடியும் என்று பொருள் சொல்வர் பெரியோர்.

ஆண்டாள் கேட்ட கேள்விக்கு, உள்ளே இருந்த பெண் “இன்னும் பொழுது விடியவில்லை… கிருஷ்ணனை சென்று சேர்வதற்காக  எப்போது பொழுது விடியும் விடியும் என்று கிழக்கே பார்த்து பார்த்து உங்கள் முகத்தினொளியின் ப்ரதிபலிப்பே உங்களுக்கு கீழ்வானம் வெளுத்தது போல் தோன்றுகிறது…” என்று சொல்ல, ஆண்டாள் சொல்கிறாள் “எருமைகள் சிறுவீடு மேய கிளம்பி விட்டது… வந்து பார்.” என்கிறாள். சிறு வீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும் விடியாத காலையில் எருமைகள் புறப்படுமாம். ஆண்டாளுக்கு எப்படி எருமைகள் சிறுவீடு மேய்வது போன்ற மாடு மேய்க்கும் இடையர்களுக்கு தெரிந்த விஷயங்களெல்லாம் தெரிந்தது? அவள் தன்னையே ஒரு கோபிகையாக பாவித்துக்கொண்டு கண்ணனை மனதார விரும்பியதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

அதற்கு அந்த பெண் சொல்கிறாள், ‘கோகுலத்தில் எருமை மட்டுமா இருக்கிறது… ஆடுகள், பசுக்கள், எருமைகள் எல்லாம்தான் இருக்கின்றன.. எருமை மட்டும் சிறு வீடு மேய கிளம்பிவிட்டது என்று நீங்கள் அன்யதா ஞானத்தினால் – விபரீத ஞானத்தினால் தவறாக புரிந்து கொண்டு சொல்கிறீர்கள்… உங்கள் முகத்தின் ஒளியில் இருள் விலக உங்களுக்கு எருமை நகர்வதுபோல் தோன்றுகிறது” என்கிறாள். “மிக்குள்ள பிள்ளைகளும் போவான்” – என்று ஆண்டாள், “நீ இப்படியே பேசிக்கொண்டிருக்கிறாய்…, ஆய்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் எல்லாம் கிளம்பிவிட்டார்கள்” என்கிறாள்.

இது தொடர்பாக ஒரு விஷயம். முதலில் எருமை சிறுவீடு மேய போவதை சொன்னது – எருமைகள் மிக மெதுவாக நகரும் – நடுவில் காணப்படும் சிறு குளம் குட்டை எல்லாவற்றிலும் விழுந்து எழுந்து போக வேண்டிய இடத்துக்கு போய் சேரும். இது போலே, இதர தேவதாந்தரங்களை நாடுபவர்கள், கண்ட வழிகளில் நுழைந்து தாமதித்து கடைசியாக மோக்ஷத்தை அடைகிறார்கள். ஆனால் பரமனான வாசுதேவனை அண்டிய அடியார்களோ நேரே ‘மிக்குள்ள பிள்ளைகளை போல’ சுலபமாகவும் சீக்கிரமாகவும் மோக்ஷத்தை அடைகிறார்கள். அதற்கு பரமனின் க்ருபையும் கிடைக்கிறது.

இங்கே உள்ளே இருக்கிற கோபிகைப்பெண், “ஆய்ப்பாடியிலுள்ள மற்ற பிள்ளைகள் கிளம்பிவிட்டார்களா? இனிமேல் நான் வந்து என்ன செய்ய? நீங்கள் போங்கள்” என்கிறாள். ஆண்டாள், “போகின்றாரை போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்! கோதுகலமுடைய பாவாய்!” – “க்ருஷ்ணனுக்கு குதூகலத்தை கொடுக்கக் கூடியவளான உன் புருஷகாரம் இல்லாது நாங்கள் எங்கே அவனை சென்று காண்பது… பாவாய், அதனால் நீ வரவில்லை என்று போகிறவர்களிடம் சொல்ல, த்ருக் என போகாமல் அனைவரும் நின்றார்கள்… உனக்காகவே எல்லோரும் காத்திருக்கிறோம்” என்றாள். அதாவது மற்ற கோபிகைகள் “திருவேங்கட யாத்திரை போலே, போகையே பரயோஜனமாகப் போகா நின்றார்கள்” என்றபடி எல்லோரும் இணைந்து செல்வோம் என்று சொல்லிவிட்டு, கடைசியில் க்ருஷ்ணனையே லட்சியமாக நினைத்து மற்ற எல்லாவற்றையும் மறந்து கிளம்பிவிட்டார்கள். “இந்த கோபிகை வரவில்லையே! இவள் க்ருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானவளாயிற்றே! மேலும், செய்யாதன செய்யோம் என்று சொன்னோமே, க்ருஷ்ணானுபவத்தை கூடியிருந்து குளிர்ந்து அனுபவிப்பது இருக்க இந்த கோபிகையை விட்டுவிட்டு போகலாமா?” என்று கேட்டு அவர்களை தடுத்து விட்டோம் என்கிறாள்.

“கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்!”, “மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், அவன் நீ வந்திருக்கிறாயா என்று ஆராய்வன். அப்போது உன்னுடன் சேர்ந்து அவனை பாடி பறை கொண்டு வருவோம்”, என்கிறாள். கேசி என்கிற அசுரன் குதிரை உருக்கொண்டு வந்தான். பகாசுரன் என்னும் அசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்தான். க்ருஷ்ணன் இவர்களை வாயை கிழித்து கொன்றான். கம்சன் அவையில் மல்லர்களை வென்றான். அத்தகைய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால், “நாம் இவர்களை தேடிச்சென்று ரக்ஷ¢ப்பது இருக்க, இவர்களே நம்மை தேடி வந்துவிட்டார்களே! என்று ஹாஹா என்று ஆச்சரியப் பட்டு அருளுவன்” என்கிறாள். அந்த பெண்ணும் இவர்களுடன் சேர்ந்து கொண்டாள் என்பது சரித்ரம்.

பின்னூட்டமொன்றை இடுங்கள்

திருப்பாவை 7 – கீசுகீசென்றெங்கும்

கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்பெண்ணே!
காசும்பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!

சென்ற ஆறாவது பாசுரத்தில் பகவதனுபவத்துக்கு புதியதான ஒருத்தியை எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பகவதனுபவம் உள்ள பெண்ணையே எழுப்புகிறார்கள். இந்த பெண்ணோ அந்த அனுபவமறிந்தும் உறங்குகிறாள். இவளையும் அந்த பரமனின் பெருமையை எடுத்து சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆண்டாள் இந்த பாடல் முழுவதுமே பலவிதமான ஒசைகளைப் பற்றி சொல்கிறாள் – பறவைகள் கத்து கின்றன, ஆய்ச்சியரின் தாலி மணி மாலைகள் முதலானவை எழுப்பும் ஓசை, அவர்கள் தயிர் கடையும் ஓசை என்று பலவிதமான ஒசைகளுடன் இவர்கள் கேசவனை பாடும் ஓசையும் சேர்ந்து ஒலிக்கிறது.

ஆனைச்சாத்தன் என்பது வலியன் குருவி அல்லது பரத்வாஜ பக்ஷி எனப்படும். இது அதி காலையில் எழுந்து கூட்டம் கூட்டமாக எங்கும் தம் துணையுடன் பறந்து ஒலி எழுப்புவது, அவை கிருஷ்ண கிருஷ்ண என்று கிருஷ்ண கானம் செய்வது போல் இருக்கிறதாம்.

ஆய்ச்சிகள், கண்ணன் எழுந்துவிட்டால் தம்மை வேலை செய்ய விட மாட்டானே… தம் மீது சாய்ந்து சாய்ந்து கையை பிடித்து தடுத்து தயிர் கடைவதை தடுத்து விடுவானே.. அதனால் அவன் எழுவதற்கு முன்பாக தயிரை கடைந்து விடுவோம் என்று எப்படி தேவர்களும் அசுரர்களும் அம்ருதத்துக்காக பாற்கடலை அவசர அவசரமாக கடைந்தார்களோ அப்படி வேகமாக கைவலிக்க மறுபடியும் மறுபடியும் சோராமல் கடைகிறார்களாம்.

அதனால் அவர்கள் அணிந்திருக்கும் அச்சு தாலி, ஆமைத்தாலி போன்ற ஆபரணங்கள் ஒன்றோடு ஒன்று மோதி எழுப்பும் ஓசையும் கேட்கிறது. இவ்வளவு சத்தத்துக்கு நடுவே நீ எப்படி தூங்குகிறாய்? பேய்த்தனம் என்னும் தமோ குணம் உன்னை பிடித்துக்கொண்டது போலும்.

நீ நாயக பெண் பிள்ளையாயிற்றே! நாங்கள் கேசவனைப் பாட பாட நீ கேட்டுக்கொண்டே சுகமாக படுத்திருக்கலாமா? பகவதனுபவத்தை உணர்ந்து அதனால் முகத்தில் ப்ரஹ்ம தேஜசை பெற்றவளே! ஹே தேஜஸ்வினி! கதவை திறந்து வந்து எங்களோடு இணைந்து கொள்! என்று அழைக்கிறார்கள்!

இப்பாடலில் உயர்ந்த க்ருஷ்ணானுபவம் இழையோடுகிறது. இங்கே எழுப்புகிறவர்கள் நினைப்பது ஒன்றாக நடந்தது வேறொன்றாக ஆயிற்று. இவர்கள் க்ருஷ்ணனை பாடினால் எழுந்திருப்பாள் என்று பார்த்தால், அவளோ அதை கேட்டுக்கொண்டே படுத்துக்கொண்டிருக்கிறாள்! கேசவன் என்று மார்கழி மாதத்துக்கான மூர்த்தியை சொல்லி, நம்மை துன்புறுத்திய கேசி போன்ற அசுரர்களை அழித்த கேசவனை பாட நீ வரவில்லையா என்று சொல்லி எழுப்புகிறார்கள்.

ஆனை சாத்தன் என்பதற்கு அற்புதமாக பெரியவர்கள் அர்த்தங்கள் சொல்வர். சாத்துதல் அல்லது சாற்றுதல் எனும்போது அழித்தல் அல்லது காத்தல் என்று இரண்டுமே பொருந்தும். பகவான் ஆனைச்சாத்தனாக இருக்கிறான். ஒரு  யானை கஜேந்திரனை பகவான் ரக்ஷித்தான். இன்னொரு யானை குவலயாபீடத்தை கொன்றான். துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனல்லவா அவன் !

பின்னூட்டமொன்றை இடுங்கள்

Older Posts »