திருப்பாவை ஆரம்பம்

 

andal_1.jpg

ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தில், ஆழ்வார்கள் உயர்ந்த ஸ்தானத்தை உடையவர்கள். அந்த ஆழ்வார்களின் கூட்டத்தில், பாண்டிய ராஜ சபையில் பர தத்துவம் ஸ்ரீமன் நாராயணனே என்று உலகு உய்ய நிர்ணயம் செய்து, பின் அந்த பரவாசுதேவனான கண்ணனுக்கே தம் அன்பால் கண்ணேறு கழித்த பெரியாழ்வார் மிக உயர்ந்தவர். அப்படிப்பட்ட பெரியாழ்வாரையும் விஞ்சி அந்த பரம்பொருளுக்கே வாழ்க்கைப்பட்ட ஆண்டாள், விஷ்ணு பக்தியின் சிகரமாக விளங்குகிறாள்.

ஆசார்ய வந்தனம்

லக்ஷ்மீ நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் |
அச்மதாசார்யா பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

யோநித்யமச்சுதபதாம்புஜ  யுக்ம ருக்ம
வ்யமோஹதஸ்தத் இதராணி  த்ருணாய மேனே |
அஸ்மத் குரோ: பகவதோஸ்ய தயைக சிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் பரபத்யே ||

ஸ்ரீமான் வேங்கட நாதார்ய கவிதார்கிக கேசரி |
வேதாந்தாசார்ய  வர்யோமே சந்நிதத்தாம் சதாஹ்ருதி ||

ஆண்டாளின் தோற்றம்

ஸித்தானாம் சரதாம் கலாவபகமே வர்ஷே நளாக்யே ரவெள
யாதே கர்க்கடகம் விதாவுபசிதே ஷஷ்டேஹநி ஸ்ரீமதி |
நக்ஷத்ரேர்யமதைவதே க்ஷிதிபுவோ வாரே சதுர்த்யாம் திதெள
கோதா ப்ராதுரபூதசிந்த்யமஹிமா ஸ்ரீவிஷ்ணு சித்தாத்மஜா ||

கலி பிறந்து தொண்ணூற்றேழு ஆண்டுகளுக்கு பிறகு (கடபயாதி சங்க்யை படி ஸித்த என்ற வார்த்தையை தொண்ணுற்று ஏழு என்று கொள்வர்) ஒரு நள வருஷத்தில், சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும்போது, சுக்ல பக்ஷ சதுர்த்தியில், ஆடிமாதம் ஆறாம் தேதி செவ்வாய் கிழமையன்று, அர்யமா என்னும் தேவனுக்குரிய பூர நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில், ஸ்ரீவிஷ்ணு சித்தருடைய பெண்ணாக கோதை அவதரித்தாள்!

ஆண்டாளின் பக்தி

ஆண்டாள் ஆழ்வார்களைக்காட்டிலும் உயர்ந்தவள் என்று சொல்வார்கள் – ஏனெனில் பக்தியில் ஆழ்வார்களே ஆண்டாளின் வழிமுறையை கைக்கொண்டுதான் பரம்பொருளை அடைந்தார்கள் என்று பூர்வாசார்யர்கள் அருளியிருக்கிறார்கள். ஆண்டாள் பெண்ணானதால் அரங்கனை எளிதாக காதலிக்க முடிந்தது – தன் பக்தியை ப்ரணயமாய், விரகமாய் வெளிப்படுத்த முடிந்தது – இதே வழியைத்தான் ஆழ்வார்களும், நாயகி பாவத்தில் கடைபிடிக்க முயற்சித்தார்கள் – நம்மாழ்வார் பக்தியால் தம்மை பராங்குச நாயகியாக்கிக் கொண்டார் – திருமங்கை மன்னன் தம்மை பரகால நாயகி ஆக்கிக் கொண்டார்.

மேற்சொன்ன கருத்தை ஸ்வாமி தேசிகன் இந்த கோதாஸ்துதி ஸ்லோகத்தில் சொல்கிறார்:

போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே!
பக்திம் நிஜாம் ப்ரணய பாவனயா க்ருணந்து ||
உச்சாவசைர்விரஹ ஸங்கமஜைருதந்தை
ஸ்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்தவதீயா ||

“ஹே கோதாதேவி! உன்னுடைய ப்ரியதமனான-காதலனான கண்ணனிடம் பக்தியை ப்ரணய பாவனையாக – காதலாக வெளிப்படுத்தினாய். பிரிந்தால் விரஹமாகவும், பிணைந்தால் இன்பமாகவும் பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்தி நீ செய்த பக்தியைப்போல் உயர்ந்தது வேறில்லாமையால், ஆண்களான ஆழ்வார் ஆசார்யர்களும் தம்மை பெண்ணாகக்கருதி உன் வழிமுறையையே கைக்கொண்டார்கள்”. இதிலிருந்து பரம்பொருளை காதல் செய்து அவனையே மணந்த ஆண்டாளின் வழிமுறையே சிறந்தது என்பது கருத்து.

கோதையின் பாதை

ஆண்டாளுக்கும் வராக அவதாரத்துக்கும் பூர்வசார்யர்கள் சம்பந்தம் சொல்வார்கள். அது எப்படி என்று சற்று விளக்கமாக பார்போம். அவதாரங்களிலேயே வராக அவதாரமே மிகவும் பெரிது என்பர் – த்ரிவிக்ரமாவதாரம் கூட பூமியில் காலூன்றித்தான் நின்றது. வராகமோ பூமியையே தன் கொம்பில் ஒரு தூசி போல் தாங்கி நின்றது. சர்வ ஜகத்துக்கும் காரண பூதனான ஸ்ரீமன் நாராயணன் இந்த வராக அவதாரம் எடுத்தபோது சேதனர்களுக்காக தன்னை அடையும் வழியை சுருக்கமாக பூமாதேவி கேட்டதின் பேரில் அருளினான். இது வராக சரம ஸ்லோகம் எனப்படும். (கீதையின் சரம ஸ்லோகம் போலவே!).

ஸ்ரீ வராக உவாச:
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||
– வராக சரம ஸ்லோகம்

அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!

இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.

ஸ்ரீமத் பாகவதத்தில் கோகுலத்தைச் சேர்ந்த கோபிகைகள், க்ருஷ்ணானுபவத்துக்காக காத்யாயனி விரதம் அனுஷ்டித்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கோபிகைகளுள் தன்னையும் ஒருத்தியாக பாவனை செய்து கொண்டு ஆண்டாள் இந்த விரத அனுஷ்டானத்துக்காக விடியலில் தனது சக தோழிகளை அவர்களது இல்லந்தோறும் சென்று எழுப்பி அழைத்து செல்வதாக அமைந்ததுதான் இந்த திருப்பாவை பாசுரங்கள்.

இந்த திருப்பாவை பாசுரங்களில், ஆண்டாள் வெறும் சரித்திரமாக – நிகழ்வுகளாக பாசுரங்களை நிறுத்திவிடாமல், ஒவ்வொரு சொல்லிலும் வேதாந்த சாரத்தை செதுக்கி இருக்கிறாள். தத்வ த்ரயம் எனப்படும், சேதன – அசேதன – ஈஸ்வர சம்பந்தமான பாசுரங்களாக நமக்காக அனுக்ரஹித்துள்ளாள்.

திருப்பாவை தனியன்கள்

தனியன் என்பது வாழ்த்தி வணங்கும் பாடல் போன்றது. ஒவ்வொரு ஆழ்வாருக்கும் ஆசார்யாருக்கும் தனியன்கள் உண்டு. அந்த வகையில் திருப்பாவை சாற்றுமுறையின் போது இந்த ஸ்லோகத்தையும் பாசுரங்களையும் சொல்லுவது வழக்கம்.

பராசர பட்டர் அருளிய தனியன்

நீளாதுங்க ஸ்தனகிரிதடீ ஸுப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத சிரஸ் ஸித்தம் அத்யாபயந்தீ |
ஸ்வோசிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: ||

எப்படி வட இந்தியாவில் ராதையை கொண்டாடுவர்களோ அப்படியே தென்னாட்டில் வாழ்ந்த ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களும் நப்பின்னையை கொண்டாடுவர். இந்த ஸ்லோகம் “குத்து விளக்கெரிய” என்ற திருப்பாவை பாசுரத்தை ஒத்து இருக்கிறது.

ஸ்லோகத்தின் பொருளாவது, நப்பின்னை எனப்படும் நீளாதேவியின் திருமார்பில் தலை வைத்து உறங்குகின்ற கிருஷ்ணனை, வலிந்து சென்று கோதை எழுப்புகிறாள். “கண்ணா ஒன்றை நீ மறந்து உறங்குகிறாய் – சகல வேதங்களும் வேதாந்தங்களும் (ஸ்ருதி ஸத சிரஸ் ஸித்தம்) வலியுறுத்துவதான (பலாத்க்ருத்ய புங்க்தே) – எங்கள் பரதந்த்ரீயம் – ஜீவர்களான நாங்கள் உன்னையே சார்ந்திருக்கிறோம் என்ற சத்யத்தை நீ மறந்து விட்டாய் போலும் – எங்களை எப்போது உன்னோடு சேர்த்துக்கொண்டு ரக்ஷிக்க போகிறாய்?” என்று உரிமையுடன் கேட்கிறாள். அத்தகைய உரிமையும் பெருமையும் கொண்டு தான் சூடி களைந்து கொடுத்த பூமாலையாலே அந்த கிருஷ்ணனையே கட்டுப்படுத்தி அனுபவித்த கோதை பிராட்டிக்கு கால காலத்துக்கு பல பல நமஸ்காரங்கள்.

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னப்பறவைகள் சூழ்ந்த செழிப்பான வயற்புரங்களை உடைய ஸ்ரீவில்லிபுத்துரிலிருந்து பாமாலையாகவும், பூமாலையாகவும் அரங்கனுக்கு பாடியும் சூடியும் கொடுத்த ஆண்டாள் என்ற அப்பிராட்டியை ஏ மனமே! – சொல்லு (அனுசந்தானம் செய்) என்று உய்யக்கொண்டார் என்னும் ஆசார்யர் அருளிய தனியன் இது.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய் – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு

ஆண்டாள் “வெங்கடவற்கு என்னை விதி” என்று நாச்சியார் திருமொழியிலே சொன்னதை இங்கே நினைவுகூர்கிறார். தான் அரங்கனுக்கு பொருத்தமா என்று எண்ணி அவனுக்கான பூமாலைகளை முதலில் தான் சூடி அழகு பார்த்து பின் அவனுக்கு கொடுத்து இந்த அன்பினாலேயே அவனை அடைந்த சுடர் கொடியே! தொன்மையான பாவை நோன்பை மேற்கொண்டு, தன்னைபோல் பின் வரும் மக்களும் அவனை அடைய பாடி அருளினாய். இந்த உனது பெருமையை நாங்களும் உணர்ந்து உன் வழியை பின்பற்ற அருள் செய்!

பல பல காலமாய் மக்கள் ஆழ்ந்து அமிழ்ந்து குடைந்து நீராடி ஆனந்தித்து அனுபவித்து உய்வு பெற்ற அந்த கிருஷ்ணானுபவத்தை நாமும் வரும் நாட்களில் பெற ஆண்டாளை வணங்கி தொடர்வோம்.

திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கற்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்கோதை மலர்பாதங்கள் வாழியே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: