திருப்பாவை 1 – மார்கழி திங்கள்

மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!

சீர் மிகுந்த ஆய்ப்பாடி! அங்கே செல்வம் மிகுந்த சிறுமிகளை ஆண்டாள் அழைக்கிறாள். ஆய்பாடியை சேர்ந்த சிறுமிகள், நாரயண பரம் ப்ரஹ்ம: என்றபடி ஈஸ்வரனை தம்முடன் கொண்டதால் ஐஸ்வர்யம் மிகுந்தவர்கள். அதையே இப்பாடலில் வரும் நாராயண சப்தத்தால் ஆண்டாள் குறிப்பிட்டு காட்டுகிறாள்.

கண்ணனாக வந்த நாராயணன் சாதாரணமாக இல்லை. நந்தகோபனின் குமாரன் – அவன் எழில் கண்டு எழில் கண்டு ஏரார்ந்த கண்ணை உடைய யசோதையின் மைந்தன் – சிங்கமானது குட்டியாய் இருக்கும்போதே மதயானையையும் எதிர்த்து நிற்குமாம் – வீரத்துக்கு வயது ஒரு வரம்பல்ல என்று பர்த்ருஹரி சொன்னது போல் – அவன் இளம் சிங்கம்! அவனுக்கு கரிய மேகத்தைப்போன்ற மேனி – அதிலேயே அவன் கருணாசாகரனாக காட்சி தருகிறான். அவனுக்கு கதிரவனைப் போல ப்ரகாசமாகவும், அதே நேரத்தில் குளிர் மதிபோல தண்மையான வாத்ஸல்யம் நிரம்பிய முகம்!

விபுவாக உலகமெலாம் பரந்து விரிந்த இந்த மூர்த்தி சிறு குழந்தையாய் வந்த ஒரே காரணத்தால் இந்த குழந்தைக்குத்தான் எத்தனை ஆபத்துக்கள்! குழந்தை தவழ்ந்தால் அங்கே ஒரு அசுரன் காத்திருக்கிறான். நடந்தால் ஒரு அசுரன் வருகிறான். குழந்தைக்கு பசித்தால் அதற்கென்றே ஒரு அரக்கி காத்திருக்கிறாள். ஐயகோ! இந்த குழந்தைக்கு இன்னும் எத்தனை ஆபத்து வருமோ என்று எண்ணிய நந்த கோபர், கொடுந்தொழில் புரிபவனைப்போல் இனி இக்குழந்தைக்கு யாரேனும் ஆபத்து விளைவிப்பரேல் சற்றும் பொறேன் என்று கூரிய வேல் பிடித்த கையினரானார்.

பறை என்பது தாஸத்தன்மையின் சின்னம் – நாராயணனிடம் வேறு எதுவும் கேட்கத்தோன்றவில்லை ஆண்டாளுக்கு – உனக்கடிமையாக நித்ய கைங்கர்யம் செய்வதே போதும் – நாங்கள் என்றும் உன் சேஷ பூதர்கள் – சேஷத்வமே எங்கள் அடையாளம் – அதை நம்மிடமிருந்து மறைத்த நாராயணனே – நமக்கு அதை மீண்டும் தரத்தக்கவன் – அவனே பரம புருஷார்த்தம் – அந்த புருஷார்தத்தை அடைய அவனே உபாயம் – என்று ப்ராப்ய ப்ராபக சங்க்ரஹம் சொல்லி – அதுவும் அவனிடம் சரணாகதியான பிறகு – சரணாகத வத்ஸலானான நாராயணன் நமக்கே தருவன் என்கிறாள்.

அதென்ன இந்த சேஷத்வத்தை கேட்க மார்கழி முதல் நாளுக்காக எதிர்பார்த்திருந்தாளா ஆண்டாள்? மார்கழி அவ்வளவு விசேஷமா? அபரிமிதமான பக்திக்கு பரிமிதமான காலத்தை சொல்வதேன் என்று பூர்வாசார்யர்கள் விசாரிக்கிறார்கள். இங்கே உட்பொருள் அதுவல்ல. பகவானை அடையும் நாளே நன்னாள் – அவன் உள்ளம் எங்கும் நிறைந்த – மதி நிறைந்த நாளே எமக்கு உகப்பான நாள் – அது மார்கழி திங்களாக இருப்பதால் மார்கழி மாதத்துக்கு பெருமை கிடைக்கிறதே அன்றி மார்கழி திங்கள் என்பதால் பக்திக்குரிய காலம் எனக்கொள்ள வேண்டியதில்லை – பகவத் பக்திக்கு எல்லா நாளும் நன்னாளே! என்று பூர்வாசார்யர்கள் அருளியுள்ளார்கள்.

இத்தகைய நன்னாளில் பாரோர் புகழ – பாகவதர்கள் உகக்கும் க்ருஷ்ணானுபவத்தை பெற முதலில் நீராட செல்வோம் என்று ஆண்டாள் திருப்பாவையை ஆரம்பிக்கிறாள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: