திருப்பாவை 2 – வையத்து வாழ்வீர்காள்!

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

வையத்து வாழ்வீர்காள்!
முதல் பாட்டில் ஆய்ப்பாடி சிறுமிகளை அழைத்ததற்கு ஏற்ப கூடிய கோபிகைகளின் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து “வையத்து வாழ்வீர்காள்!” என்று ஆச்சரியப்பட்டு அழைத்து நாம் செய்ய வேண்டிய நோன்பிற்கு செய்யவேண்டிய கிரியைகளை கேளுங்கள் என்கிறாள்.

சேஷத்வமே நமது குறிக்கோள் என்று முதல் பாசுரத்தில் சொன்ன ஆண்டாள் அதை அடையும் மார்க்கத்தில் எதை செய்ய வேண்டும் – எதை செய்யக்கூடாது என்று க்ருத்யா – அக்ருத்ய விவேகம் சொல்கிறாள். இதை செய்தால் அவனுக்கு உகக்கும் – இதை செய்வதால் நாம் பந்தத்தில் சிக்கி உழலுவோம் என்று விவரமாக சொல்கிறாள்.

லோகாயதத்தில் நாஸ்தீக வாதம் செய்து – கண்டதே காட்சி, கொண்டதே கோலம் – கடன் வாங்கியாவது வாழ்க்கையை அனுபவி – நெய் சேர்ந்த அன்னம் உண்டு, குறளை பேசி திரிவதே இன்பம் என்று திரிவர்கள் – இது அக்ருத்யம் – செய்யத்தகாதது என்கிறாள். உன் அடியே நாடும் நாங்கள் நெய்யுண்ணோம் – பாலுண்ணோம் – மையிட்டு, மலரிட்டு, செய்யாதன செய்து, தீக்குறளை பேசி திரியமாட்டோம்.

எங்களிடம் இருப்பதையும் தான தருமமாக கொடுத்து விடுகிறோம்! ஐயம் என்பது நம்மைவிட உயர்ந்த ஆசார்யர்களுக்கும், சந்நியாசிகளுக்கும் சமர்ப்பணம் செய்வது. பிச்சை என்பது ஏழைகளுக்கும், ப்ரஹ்மசாரிகளுக்கும் தர்மமாக தருவது. இவை இரண்டுமே மிக உயர்ந்த காரியங்களான படியால் இவற்றை செய்வோம். பாற்கடலில் பைய துயிலும் பரமனே உய்யும் ஆறு என்று எண்ணி உகந்து அவனடியை பாடுவோம் என்கிறாள். அதென்ன ‘பைய’ துயிலுவது? ஆம், அகில உலகத்தையும் ஈரடியால் அளந்தான் – இந்த பூவுலகை தாங்கி தூக்கினான் – அப்பேர்ப்பட்டவன் சிறிய ஆலிலைக்கும் இலேசாக மிதக்க வல்லவனல்லவா?

இந்த பாசுரத்தின் முதல் பதங்களான வையத்து வாழ்வீர்காள்! என்ற விளியை எடுத்துக் கொண்டு பூர்வாசார்யார்கள் விசாரிக்கிறார்கள். வையத்திலே ஏது வாழ்ச்சி? பரமனோ பாற்கடலில் பைய துயிலுகின்றான். அவனுடைய சேஷிகளான நாம் இங்கே பிரிந்து மாயையில் சிக்கி உழலுகிறோம் – இப்படி இருக்க வாழ்ச்சி ஏது?

வையத்திலேதான் வாழ்ச்சி உண்டு – வைகுந்தத்தில் இல்லை என்பதற்கு சில காரணங்களை பூர்வாசார்யர்கள் சொல்லுகிறார்கள். அவைகளை பார்ப்போம்…

அந்த வைகுந்தனே “ஸ்ரீவைகுண்ட விரக்தாய ஸ்வாமி புஷ்கரிணீ தடே” என்று ஸ்ரீவைகுந்தத்திலே விரக்தி அடைந்து அங்கேயே இருக்கவொட்டாது இங்கே புவிக்கு ஓடி ஓடி வந்துவிடுகிறான்… அப்படி அவன் செய்ய பூமி உகந்ததாகவும் உயர்ந்ததாகவும் இருப்பதால் தானே?

ஜகத் காரணனான பகவான், செளலப்யன், செளசீல்யன், தயாளன், கருணா சாகரன் என்றெல்லாம் வேதங்கள் கோஷிக்கின்றன. ஆனால் தனது அந்த எளிய செளலப்ய தன்மையையோ, கருணை யையோ வைகுந்தத்திலே யாரிடம் காண்பிப்பது? எளியவர்களிடம் தானே கருணையும் எளிமையும் காட்டமுடியும்… அது இந்த வையகத்திலேதானே இயல்பாக அமையக்கூடியது… அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும் நந்தகோபாலா என்று இரைஞ்சக்கூடியவர்கள் இங்கேதானே இருக்கிறார்கள்…!

அடுத்து சொல்கிறார்கள்,

கால அவசரங்களும், கலக்கங்களும் நிறைந்த இந்த உலகத்தில் ஆடாத அசையாத ஆழ்ந்த பக்தி செலுத்துவதுதானே கடினமானதும், பெருமை வாய்ந்ததும் ஆனது? ஆகவே வைகுந்தத்தை விட வையகத்திலேதான் வாழ்ச்சி – அதனால் வையத்து வாழ்வீர்காள்! என்று பெருமை பொங்க ஆண்டாள் அழைக்கிறாள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: