திருப்பாவை 5 – மாயனை

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கும் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்!

இந்தப் பாடலில் உயர்ந்த தத்வ விசாரம் இருக்கிறது. ஒரு இடைப்பெண் இன்னொரு இடைப்பெண்ணைப் பார்த்து கேட்கிறாள் “நாமெல்லாம் கர்ம வசப்பட்டவர்கள் – விதிப்படி கர்மாப்படி தான் எல்லாமும் நடக்கிறது என்றால், நாம் எப்படி பரமனை அடையமுடியும்? நம் பிழைகள் நம்மை தடுத்து விடாதா? இத்தகைய விரதங்கள் இருப்பதால் என்ன பயன்? இது வரை செய்த கர்மங்கள், கர்மத்துக்கான பலன்கள் நம்மை விட்டுவிடுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்து செல்கிறதே? இதிலிருந்து எப்படி மீள்வது?” என்று கேட்பதாகவும், அதற்கு இன்னொரு இடைப்பெண்ணாக ஆண்டாள் பதில் சொல்வதாகவும் அமைந்திருக்கிறது.

கர்ம ஞான பக்தி யோகங்கள் தன் சுயமுயற்சியால் வசிஷ்டர் வாமதேவர் போல செய்து முக்தியடையக் கூடிய சக்தர்கள் அல்ல நாம் – நமக்கு வேத வேதாந்தங்கள் தெரியாது, சாஸ்திரம் தெரியாது, சம்பிரதாயம் தெரியாது… ஆனால் நாம் செய்யக் கூடியவைகள் சில உண்டு. அந்த மாயனை, வடமதுரை மைந்தனை, ஆயர் குலத்து அணிவிளக்கை, தாமோதரனை மலர் தூவி தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தோமானால் பல ஜன்மங்களில் நாம் சேர்த்து, இனி சேரப்போகும் அனைத்து பாவங்களும் தீயினில் தூசாக விலகும் என்று பதில் சொல்கிறாள்.

அப்பேர்பட்ட பரமனை நாம் எப்படி அணுகுவது? நாமோ அசுத்தர்கள் – என்றால், நமது அர்ஹதையெல்லாம் பார்க்க தேவை இல்லை – உள்ளமாதிரியே இப்படியே சென்று அடையலாம். அவன் வருவானா? நாம் அங்கே செல்ல வேண்டுமா? என்றெல்லாம் குழம்ப தேவையில்லை. ‘உபாயத்தில் துணிவு புறப்படவொட்டாதாப்போலே, உபேயத்தில் த்வரை முறை பார்த்திருக்க வொட்டாதிறே!’ என்று பூர்வாசார்யர்கள் அருளினார்கள்! அதாவது, கண்ணனை நாம் எப்படி அடைவது என்று பயந்தாலும், அவனை உபேயமாக – அடையும் பொருளாக நினைக்கும் போது அவனை அடையவேணும் என்கிற த்வரை – தணியாத ஆவல் இந்த வழிமுறைகளெல்லாம் பார்க்க விடாது.

ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை அழகாக நமக்காக விளக்கியிருக்கிறாள். த்ரிகரணமான மனம், வாக்கு, காயம் என்னும் கரணங்களைக்கொண்டு, கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனதினால் அனுசந்திப்பதே கர்ம கட்டை விலக்கும் என்கிறாள்! இன்னொரு வகையில், புண்ய பாவங்கள் இரண்டுமே மோக்ஷ பலனை தடுக்கும் – அதனால் அவை இரண்டையுமே பகவதர்ப்பணம் – க்ருஷ்ணார்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தேறும்.

கண்ணனை குழந்தையாக பாவித்து, அவன் செய்த பால லீலைகளை நினைத்து உருகுகிறாள் ஆண்டாள் – நம்மாழ்வார் அவனது சௌலப்யத்தை – சுலபத்தன்மையை நினைத்து நினைத்து ‘எத்திறம் எத்திறம்’ என்று மூவாறு மாதங்கள் வியந்ததைப்போலே. பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன் அல்லவா அவன்?

யாராவது சாமர்த்தியமாக வேலைகள் செய்தால் எந்த ஊர் வேலை இது? எந்த ஊர் நீர்? என்று விசாரிப்பது வழக்கம். அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்!

மாயனை, தாமோதரனை என்று இரண்டு திருநாமங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும். அவன் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன்’ என்று ஆழ்வார் அருளினார் அல்லவா? யசோதை சிறு கயிற்றினால் தன் பொல்லாப் பிள்ளையை கட்ட, அதனால் வடு விழுந்து தாம – உதரனாக தாமோதரனாக இருக்கும் அவன் பெரிய மாயன். தன் சர்வ சக்தியை மறைத்து அடியார்க்கு பொடியனாய் வந்த மாயக்கண்ணன்! அவன் மதுரையில் பிறந்து, யமுனையை கடந்து, ஆயர்பாடிக்கு வந்தான். இவனை பெற்ற பேறு பெற்றதால் யசோதை குடல் விளக்கம் செய்தான். அவள் இவனைக் கட்டிப்போட்ட கதையினை சிந்தித்தாலே மனிதனுடைய கர்மக் கட்டெல்லாம் கழன்று போகும்!

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. ஸ்ரீகாந்த் ஐயா, அற்புதம்.

  //// அதைப்போல் கேட்டுக்கொண்டு, இவன் யமுனைத்துறைவன் என்கிறாள். வைகுண்டத்தில் இருக்கும் விரஜா நதியைப்போல் இங்கே கண்ணனிருக்கும் கோகுலத்தில் யமுனா நதி ஓடுகிறது. அவன் ஸ்பர்சம் பட்டதால் அது தூய பேரு நீர்! ////

  உண்மைதான். யமுனை பரமனுக்கு பிரியமானது. பெருமாள் கேட்டும் அந்த சமுத்திரம் வழிவிடவில்லை. ஆனால், இங்கே நம் நந்தனுக்காக யமுனை ஓடிப்போய் வழி அமைத்ததே!!! அதனால் அது தூய பேரு நீர்தான்.

  நீங்கள் தினசரி தொலைக்காட்சியில் (பொதிகை) ஸ்ரீநிதி ஸ்வாமிகள் விளக்கத்தை கேட்கிறீர்கள் அல்லவா?

 2. எனக்கு மிகவும் பிடித்த திருப்பாவைப் பாசுரங்களில் ஒன்று இது. வியாக்யானம் அமர்க்களமாக இருக்கிறது ஸ்ரீகாந்த்.

  // பால் கறந்து விற்கும் வைச்யனாக பிறந்து, தாசனாக நல்ல ஆத்மாக்களான பாண்டவர்களுக்கு தொண்டு செய்து, க்ஷத்ரீயனாக போர் செய்து, பிரம்மத்தை அடையும் வழிக்கு கீதை சொல்லி ஜகதாசார்யானாக விளங்கிய மாயன் அல்லவா அவன்? //

  அற்புதம்! இது திருப்பாவை ப்ராசீன வியாக்யானம் எதிலாவது உள்ளதா அல்லது தாங்களே எழுதியதா?

  ஏனென்றால் இந்தக் கருத்தை அப்படியே வைத்து பாரதி பாடியிருக்கிறார்.. அது பற்றிய என் பழைய பதிவு ஒன்று – http://jataayu.blogspot.com/2006/12/blog-post_25.html

 3. Srikanth said

  //
  அற்புதம்! இது திருப்பாவை ப்ராசீன வியாக்யானம் எதிலாவது உள்ளதா அல்லது தாங்களே எழுதியதா?
  //
  இது கொஞ்சம் அனுபவித்து எழுதியது… எங்கேயிருந்து படித்தது/கேட்டது என்று சட்டென்று ஞாபகம் வரவில்லை. பாரதி சொல்லியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக ப்ராசீனமான வ்யாக்யானமாக இருக்கவேண்டும்.

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: