திருப்பாவை 19 – குத்துவிளக்கெரிய

குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்தடங் கண்ணினாய்! நீ உன்மணாளனை
எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிறிவாற்ற கில்லாயேல்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!

ஆண்டாளுடன் சேர்ந்த திருவாய்ப்பாடிப் பெண்கள் அம்பரமே தண்ணீரே பாசுரத்தில் பகவானை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அடுத்த உந்து மத களிற்றன் பாசுரத்தில் பிராட்டியை தனியாக எழுப்ப முயற்சித்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இந்த பாசுரத்தில் மலர்மார்பா! என்று பகவானையும், மைத்தடங் கண்ணினாய்! என்று பிராட்டியையும் சேர்த்தே அனுசந்திக்கிறார்கள். இது ஒரு அபூர்வ அழகுடைய பாசுரம் – பராசர பட்டர் இந்த பாசுரத்தின் நினைவில்தான் திருப்பாவையின் தனியன்களுள் ஒன்றான “நீளா துங்க” என்ற ஸ்லோகத்தை அருளினார். அப்படி பாகவதர்கள் உகந்த பாசுரம் இது!

இந்த பாசுரத்தில் ஆண்டாளோடு சேர்ந்த ஆய்பாடி பெண்பிள்ளைகள் சிறு குழந்தைகளாக குதூகலித்து, பக்தியினால் உள்ளம் கரைய விகசித்து போகிறார்கள். விடிவதற்கு முன்னமே எழுந்திருந்து, “மையிட்டெழுதோம் மலரிட்டு முடியோம்!” என்று நாங்கள் இருக்க, நப்பின்னாய்! நீ கொத்தாக அலர்ந்த பூக்கள் நிறைந்த குழலுடன், குத்துவிளக்கெரிய விட்டு, மலர்மார்பனான பகவான் மீது சயனித்து அவனையும் துயிலெழ விடாமல் செய்கிறாயே! இது தத்துவமன்று! என்கிறார்கள்.

மாதாவாக பிராட்டி இவர்களுக்கு ப்ரியமானதையே செய்பவள். பிதாவாக பகவான் இவர்களுக்கு ஹிதமானதையே செய்கிறவன். ஒரு ஜீவன் எத்தனையோ பாவங்கள் செய்து பகவானிடம் சரணாகதி என்று வரும்போது, இவனுக்கேற்ற ஒரு பிறப்பைக் கொடுத்து, இவன் ஞானத்தைப் பெற செய்ய வேண்டும் என்று பகவான் நினைப்பனாம். பிராட்டியோ, இந்த ஜீவன் நமக்கு குழந்தை அல்லவா! அவன் அப்படி ஒன்று பெரிய பாவங்கள் செய்து விடவில்லை. இவனுக்கு ஞானத்தை நான் தருகிறேன்.. ப்ரம்ம வித்யையை நான் தருகிறேன். இவனை மறுபடி மறுபடி சம்சாரத்தில் சிக்க வைக்க வேண்டாம் என்று புருஷகாரம் செய்வளாம். பகவானும் அதை ஏற்று அப்படி ஞானம் பெற்ற ஜீவனை அழைத்து முக்தி கொடுத்து தன் பாம்பணை மேல் தூக்கி இருத்துவனாம்.

இப்படி மாதா பிதாக்களான இவர்கள் பஞ்ச சயனத்தில் படுத்திருப்பதைப் பார்க்கிறார்கள். அதுவும் சாதாரண பஞ்சு படுக்கை அல்ல அது. அழகு, குளிர்ச்சி, மென்மை, தூய்மை, வெண்மை ஆகிய பஞ்ச குணங்கள் உள்ள படுக்கையாம் அது. இவர்கள், திவ்ய தம்பதிகளின் குழந்தைகளாக, உங்கள் படுக்கையில் முதலில் நாங்களன்றோ ஏறி காலால் துகைத்து விளையாட வேண்டும். நாங்கள் ஏறி விளையாடிய பின்புதானே இந்த படுக்கை நீங்கள் அனுபவித்து உகக்கக் கூடியதாகும்?? (இந்த அழகான விளக்கம் அடியேன் சொல்லவில்லை – பூர்வாசார்யர்கள் வியாக்கியானத்திலிருக்கிறது).

கண்ணன் போர்களில் யானைகளோடு பொருதி அவற்றைக் கொன்று அவற்றின் தந்தங்களை எடுத்து வந்து ‘கோட்டுக்கால்’ – நான்கு கால்களாக தந்தக்கட்டில் செய்து வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட தந்தக் கட்டிலில், மெத்தென்ற பஞ்ச சயனத்தில் மீதேறி படுத்துக் கொண்டிருக்கிறார்கள். உந்து மத களிற்றன் பாசுரத்தில், இவர்கள் நப்பின்னையை அழைக்க அவளும் எழுந்து வர, பகவானுக்கு தன் பதவி மேல் சிறிது பயம் வந்து விட்டதாம். நானல்லவோ ரக்ஷ¢க்க வேண்டும் – இவளே முதலில் போகிறாளே! நம் வேலையை செய்ய முடியாமல் போகிறதே என்று அவளை பிடித்து அவள் கொங்கைகள் இவனது அகன்ற திருமார்பில் சரிய இழுத்து வைத்துக்கொண்டிருக்கிறானாம். அவனாவது ஆண்பிள்ளையாக வன்முறை காட்ட வேண்டியிருந்தது. இவளோ, ‘வாய்திறவாய்!’ என்று வெளியே கேட்கப்பட்டபோது ‘மா சுச:’ என்று பதில் கொடுக்கவொண்ணாத படி தன் பார்வையாலேயே தடுத்து விட்டாளாம்! அதனால் மைத்தடங்கண்ணினாய்! என்றார்கள்.

இங்கே கொங்கைகள் என்று சொன்னது அவள் மாத்ருத்வத்தை சொல்கிறது. குழந்தைக்கு பசிக்க தாய் பொறுப்பளோ! பகவான் நான் முந்தி என்று அவளை தடுக்கிறான். அவள் நான் முந்தி என்று அவனை தடுக்கிறாள். இவர்களது ஆர்த த்வனிக்கு அவள் மாத்ருத்வம் அவளை ரக்ஷ¢க்க சொல்லி தபிக்கப்பண்ணுகிறதாம். சென்ற பாசுரத்தில் இவர்கள் லீலாவிபூதிக்கு போட்டியிட்டுக் கொண்டதை சொன்னார்கள். இந்த பாசுரத்தில் லீலாவிபூதியிலிருந்து ஜீவாத்மாக்களை விடுவித்து நித்ய விபூதிக்கு அழைத்துச் செல்ல இந்த திவ்ய தம்பதிகள் ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்களாம்!

இப்படி அவனது ரக்ஷகத்வத்தை அவளும், அவளது புருஷகாரத்தை அவனும் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள்.

Advertisements

1 பின்னூட்டம் »

  1. // இப்படி அவனது ரக்ஷகத்வத்தை அவளும், அவளது புருஷகாரத்தை அவனும் தடுப்பது தத்துவமன்று தகவுமன்று என்று இவர்கள் இரைஞ்சுகிறார்கள். //

    அற்புதமான விளக்கம்.

    “பஹுகுடும்பியாயிருப்போர் ஒரு மலையடியைப் பற்றிக் கிடப்பார் போலே” என்றும் வியாக்யானம் படித்ததாக ஞாபகம்.

    உலகம் முழுவதையும் குடும்பமாக உடைய பெருமான் பிராட்டியின் தாய்மையையே பற்றுக் கோடாகக் கொண்டிருக்கிறான்..

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: