திருப்பாவை 21 – ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!

இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடி எழுப்பினார்கள். இந்த பாசுரத்தில் பிராட்டியும் எழுந்திருந்து வந்து இவர்களோடு சேர்ந்து கொண்டு பகவானை எழுப்புவதாகச் சொல்வர். வேறு விதமாக இந்த பாசுரத்திலும் பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே பாடுவதாகவும் சொல்வர். எப்படியாயினும் இவர்கள் பகவான் க்ருஷ்ணனை கண் முன்னே கண்டு அனுபவித்து பாடுவது இந்த பாசுரத்தை உள்ளார்ந்து அனுசந்தித்தால் புரியும்.

ஏற்ற கலங்கள் – எத்தனை குடங்கள், பாத்திரங்கள் வெவ்வேறு அளவில் எடுத்து வைத்து பால் கறந்தாலும், எதிர்பொங்கி மீதளிப்ப என்று அவை எல்லாம் நிரம்பி வழிகின்ற அளவில், மாற்றாதே பால் சொரியும், ஏமாற்றாமல் பாலை சொரிகின்ற வள்ளல் பெரும் பசுக்கள், நிறைய உடையவரான நந்தகோபரின் மகனே! என்கிறாள். பகவ¡ன், பக்தியில் இவன் சிறியவன், இவன் புதியவன், இவன் பலகாலம் பக்தி செய்தவன் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அதோடு மட்டும் அல்ல, அவனையே நினைக்காதவர்களையும் அவன் ரக்ஷிக்கிறான். அதனால் இவ்வளவு என்று எண்ணிச் சொல்ல முடியாத வள்ளன்மை அவனுக்கு. அதற்கு பசுக்களை உதாரணமாக சொல்கிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இந்த குணம் உண்டே. அதோடு இந்த பசுக்களுக்கெல்லாம் சொந்தக்காரரின் மகன், எங்களில் ஒருவனல்லவா நீ என்று அவனது விபவ அவதார மாயையில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து போகிறாள் ஆண்டாள். எங்களோடு உனக்கிருக்கும் சம்பந்தத்தை மறந்து போய்விட்டாயா! என்கிறாள்.

அடுத்த வரியிலேயே அந்த அவதார மாயையை மீறி அவன் அருளாலே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் ஏற்படுகிறது. அடுத்து ஆச்சர்யப்பட்டு சொல்கிறார்கள், “ஊற்றம் உடையாய்!” – சிறிதளவும் அயராது, தயங்காது ஊற்றமாய் உலக வியாபாரத்தை கவனிக்கிறாய்! ஜீவன்களையும் படைத்து, அவற்றைக் காத்து, அவற்றுக்கு புலன்களையும் இன்பத்தையும் படைத்து என்று இதில் தான் உனக்கு எத்தனை உற்சாகம்? என்று ஆச்சரியப்படுகிறாள். அவனது இந்த ஊக்கத்தை பூர்வாசார்யர்கள் இப்படி சொல்கிறார்கள் ‘ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிக்ஞையை மஹாராஜருள்ளிட்டாரும் விட வேணுமென்னிலும் விடாதே முடிய நின்று தலைக்கட்டுகை’ என்று விபீஷண சரணாகதியில் சுக்ரீவன் முதலானவர்கள் எதிர்த்தாலும் ரக்ஷித்தே தீருவேன் என்று ஊக்கக் குறைவில்லாமல் ரக்ஷணத்தை செய்தானே என்று ஆச்சரியப் படுகிறார்கள்.

பெரியாய்! – வேதத்தை நினைக்கிறாள் ஆண்டாள். வேதங்கள் அனந்தம் – எண்ணி அடங்கமுடியாதது. அவனும் அனந்தன். வேதம் அனாதி – ஆதி அந்தம் இன்றி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாதது. – அவனும் அப்படித்தான். அப்படி அவனது சுவாசமாக இருக்கிற வேதத்துக்கும் பெரியவனாக இருப்பவனே! என்கிறாள். இதற்கு பூர்வாசார்யர்கள் பகவானின் பெரிய தன்மையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்து பலவாறாக சொல்வர், “அந்த ப்ரதிக்ஞா சம்ரக்ஷணத்தளவின்றியேயிருக்கும் பலமென்றுமாம்!”, “ஆஸ்ரித விஷயத்தில் எல்லாஞ் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்றிருக்கை என்றுமாம்!”, “தன் பேறாயிருக்கை என்றுமாம்!”, “தன் பெருமைக்கு ஈடாக ரக்ஷிக்குமவன் என்றுமாம்” என்று பலவாறாக அவன் பெரிய தன்மையை, அதே நேரத்தில் எளிமையை சொல்கிறார்கள்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! – ‘பர வியூஹ அந்தர்யாமி தஸைகள் போலன்றிக்கே, சேதன ஜனங்கள் மத்யத்தில் தோற்றமாய் நின்ற’ என்று பூர்வாசார்யர்கள் சொல்கிறார்கள். வேதத்தைவிட பெரியவனான உன்னை, ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து தெரிந்து கொண்டோம், யாரோ சொன்னார்கள் கேட்டோம் என்று இல்லாமல் இங்கே எங்கள் மத்தியில் வந்து தோன்றினாயே! என்று அவன் செளலப்யத்தை – எளிய தன்மையை எண்ணி ஆச்சர்யப் படுகிறாள். ‘சுடரே’ என்ற பதத்துக்கு பூர்வாசார்யர்கள் மிகவும் உகந்து ‘ஸம்ஸாரிகளைப் போலே பிறக்கப் பிறக்க கறையேறுகையன்றிக்கே, சாணையிலிட்ட மாணிக்கம் போலே ஒளிவிடா நிற்கை’ என்றார்கள். ஜீவர்கள் பூமியில் பிறந்து பிறந்து கறையேறிப்போய் இருக்கிறோம். ப்ரக்ருதியின் மாயையில் மூழ்கி இருக்கிறோம். ஆனால் அவன் எத்தனை தடவை வந்து பிறந்தாலும் மாயையில் சிக்குவதில்லை.

விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி, ஒவ்வொரு உடலினுள்ளும் ஜீவாத்மாவும், பரமாத்மாவும் இருக்கிறது. இதில் ஜீவாத்மா எல்லா சுக துக்கங்களையும் அனுபவிக்க, பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த பாவ புண்ணியங்கள், சுக துக்கங்கள் அந்த பரமாத்மாவை தீண்டுவதில்லை. அதனால் அது அப்பழுக்கில்லாத சோதி, சுடர் என்று ஆண்டாள் சொல்கிறாள். அதோடு, ஏற்கனவே வையத்து வாழ்வீர்காள் பாசுரத்தில் பார்த்தபடி, அவன் சுடர் விட்டு ஒளிர்வது இந்த உலகில் தானே – இங்கேதானே அவன் பெருமைகள் சுடர்விட்டு ஒளிரும் என்று சொல்வதாகவும் கொள்ளலாம். துயிலேழாய்! – நீ இந்த உன் தன்மைகளையெல்லாம் தெரிந்தும், நாங்கள் ஏற்ற கலங்களாக இருப்பது தெரிந்தும் நீ இன்னும் உறங்கலாமா!

மாற்றார் உனக்கு வலி தொலைந்து – ஆஸ்ரிதர்களையும், அவர்களது விரோதிகளையும் நினைத்துப் பார்த்து சொல்கிறாள் ஆண்டாள். பகவானுக்கு எதிரிகள் யாரும் இல்லை, அவனது பக்தர்களுக்கு விரோதியை தனக்கும் விரோதியாகவே கொள்கிறான். இங்கே ஆண்டாள், பக்தனுக்கும் விரோதிக்கும் சில விதங்களில் ஒற்றுமை சொல்கிறாள்.

பக்தனும் உன்னை நினைத்து தன் முயற்சி, வலிமை, தன் சாமர்த்யம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அகங்கார மமகாரங்களை தொலைத்து விடுகிறான். விரோதியோ, ஹிரண்ய கசிபு, ராவணன் என்று உனக்கெதிரே நின்று தன் வலிமைகள் அனைத்தையும் தொலைத்து பகவானின் குணங்கள் தோன்ற செய்த புண்ணியத்துக்கு அவனிடமே வந்து சேர்ந்துவிடுகிறார்கள். பக்தர்களும், அவர்கள் விரோதிகளும் கூட, தம் வலிமை எல்லாம் தொலைத்து, தங்கள் நாடு, பொருள், பலம் எல்லாம் தொலைத்து உன் வாசலில் வந்து இப்பேர்ப்பட்டவனை நமக்கு சமம் என்று எண்ணினோமே என்று ஆற்றாமை தோன்ற உன் அடிபணிகிறார்கள்.

அப்படி ‘போற்றியாம் வந்தோம் புகழ்ந்து’ என்று உன்னை நாங்கள் போற்றி புகழ்ந்து வந்தோம், உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்து உன் வீரத்துக்கு தோற்று உன்னிடம் வந்து அடைந்தார்கள். உன் பக்தர்கள் உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு தோற்று உன்னிடம் வந்து சேர்ந்தார்கள். எங்களை இந்த கோஷ்டியில் எதாவது ஒன்றில் சேர்த்தாவது ரக்ஷிக்கக் கூடதா! யாம் போற்றி வந்தோம் என்று பகவானுக்கே பல்லாண்டு சொல்லி போற்றிய பெரியாழ்வாரை ஆண்டாள் நினைத்து அதைப்போலே
‘ஆற்றாமை இருந்தவிடத்தில் இருக்க வொட்டாமையாலே வந்தோம்’ என்று சொல்கிறாள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: