திருப்பாவை 22 – அங்கண் மா ஞாலத்தரசர்

அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ!
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல்சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!

ஆண்டாள் இந்த பாசுரத்தில் தன் சரணாகதியையும், தன் சேஷத்வ தன்மையையும், தான் பகவானிடம் வேண்டுவது என்ன என்பதையும் விண்ணப்பம் செய்கிறாள். இதற்கு முந்தைய பாசுரத்தில் ‘மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண் ஆற்றாது வந்து அடிபணியுமா போலே” என்பதன் தொடர்ச்சியாக, இந்த பாசுரத்திலும் அந்த ஆச்சர்யத்தை தொடர்ந்து சொல்கிறாள். துரியோதனன், அர்ஜுனன் என்று ஞாலத்து பெரிய அரசர்கள் முதற்கொண்டு, கணக்கற்ற அரசர்களும், சக்ரவர்த்திகளும் தங்கள் ஸ்வபிமானத்தை – தன் சொத்து, தன் நாடு, தம்மக்கள், தன் உடல், தன் ஆன்மா என்று தன்னையே அபிமானித்து வந்தவர்கள் அந்த அபிமானம் பங்கமுற உன் கட்டிற்கால் கீழே வந்து சங்கம் – கூட்டம் போட்டிருப்பது போலே நாங்கள் வந்து நிற்கிறோம் என்கிறாள்.

அந்த ராஜர்களெல்லாம் வருவதற்கும் நாங்கள் வருவதற்கும் வாசி இருக்கிறது. அவர்கள் வேறு வழியின்றி உன்னிடம் வந்து நின்றார்கள். நாங்கள் எங்கள் வழியே நீதான் – உன் கைங்கர்யமே நாங்கள் வேண்டுவது என்று வந்து நிற்கிறோம். இத்தை பூர்வாசார்யர் இப்படி சொல்கிறார்: “அனாதிகாலம் பண்ணிப் போந்த தேஹாத்மாபிமானத்தை விட்டு தேஹாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்த்ரியத்தையும் விட்டு அனன்யப் ப்ரயோஜனராய் வந்தோம் என்றுமாம்!”. இப்படி சரணாகதி செய்து இவர்கள் நிற்கையில் அவன் செய்ய வேண்டுவது என்ன என்றும் சொல்கிறார்கள்.

சிறிய மணியினுடைய வாயைப்போல், தனது மொட்டு சிறிது மலர்ந்ததாய் உள்ள தாமரையைப் போலே எங்கள் மேல் உன் பார்வை படாதா என்கிறார்கள். கரியவாகி புடை பறந்து செவ்வரியோடி நீண்ட அப்பெரியவாய கண்கள்’ என்று திருப்பாணாழ்வார் அனுபவித்தது போல், இங்கே தாமரையை உதாரணம் காட்டி உன் சிவந்த கண்கள் திறக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். அப்படி விழிக்கும் போதும் முதல் பார்வை எங்கள் மேல் படவேண்டும்.

அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல் – அப்படி நீ எங்கள் மேல் உன் பார்வை செலுத்தினால், எங்கள் மேல்சாபம் இழிந்து – எங்களுக்கு இன்னும் மிச்சமிருக்கிற சம்சார பாவங்கள் தொலையும். “விஷ ஹாரியானவன் பார்க்க விடிந் தீருமாபோலே, அவன் நோக்காலே, சம்ஸாரமாகிற விஷந்தீரும்” என்கிறார் பூர்வாசார்யர். இவர்களுக்கேது சாபம் – அவனை பிரிந்திருப்பதே சாபம் – அந்த சாபம் நீங்கி உன்னுடன் நாங்கள் சேர உன் கடாக்ஷம் தேவை என்று இரைஞ்சுகிறார்கள்.

இந்த ஜீவன் தன்னது என்று எண்ணிக்கொண்டிருக்கும் மாயை விலகி, அவனிடம் அனன்யார்ஹ சேஷத்வமாக சேர்ந்து, அவன் கருணையாலே கடாக்ஷத்தாலே, தான் சேர்த்த கர்ம பலன்களை விலக்கி அவனிடம் சாயுஜ்யம் அடைவதையே இந்த பாசுரம் சொல்கிறது. நந்தகோபர், யசோதை போன்றவர்களை ஆசார்யர்களாக கொண்ட இவர்களுக்கு அவர்கள் மூலம் சாலோக்யம் கிட்டிற்று. பின் பிராட்டியை அண்டி அவளிடம் சரணாகதி செய்ததால் இவர்களுக்கு அவனிடம் சாமீப்யம் கிட்டிற்று. இவர்கள் பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு அவனை நெருங்கி தம் அபிமானத்தை எல்லாம் விட்டு அனன்ய சரணமாக அடையவும் அவன் சாரூப்யம் இவர்களுக்கு கிட்டிற்று. அவனுடனே இருக்க சாயுஜ்யத்தை இங்கே அவனிடமே யாசிக்கிறார்கள். இப்படியாக ப்ரபத்தி மார்க்கத்தையும், அதன் வெவ்வேறு நிலைகளையும், அதனை அடையும் உபாயங்களையும் ஆண்டாள் அழகாக நமக்கு எடுத்து வைக்கிறாள்.

அடுத்த பாசுரத்தில் க்ருஷ்ணன் விழித்தெழ அவனிடம் பேசவே ஆரம்பித்து விடுகிறார்கள!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: