திருப்பாவை 25 – ஒருத்தி மகனாய்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!

கண்ணன் ஒரு அதிசய பிறவி! ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலமேழும் உண்ட மாயன் அவன்! அவன் பிறப்பிலேயே எத்தனை மாயங்கள்! ஆண்டாள் சென்ற ‘அன்றிவ் வுலகம் அளந்தாய்!” பாசுரத்தில் அவன் செய்த அசாத்யமான காரியங்களை போற்றினாள். இந்த பாசுரத்தில், அன்றும் இன்றும் என்றும் வேறெங்கும் நடக்க முடியாததான பகவத் சேஷ்டிதத்தை பாடுகிறாள். .

வேறெந்த தெய்வமாவது இப்படி கொஞ்சமும் அஸூயைப்படாமல், கர்ப்ப வாசம் செய்திருக்கிறார்களா? அதுவும் பன்னிரு திங்கள் கர்ப்ப வாசம் செய்து கண்ணன் பிறந்தான். இப்படி ஒரு தெய்வம் செய்யலாமா என்றால், கர்ம வசத்தாலே ஜீவர்களான நமக்கு கர்ப்ப வாசம் நேருகிறது. க்ருபா வசத்தாலே அவனுக்கு கர்ப்ப வாசம் நேர்ந்தது. ‘நம்முடைய கர்மம் நம்மோடே அவனை ஸஜாதீயனாக்கும்! அவனுடைய க்ருபை நம்மை அவனோடே ஸஜாதீயனாக்கும்!” அதாவது கர்ம வசத்தால் நாம் எடுக்கிற பிறவி அவனை நம்மிடமிருந்து விலக்குகைக்கு காரணமாயிருக்கும். அவன் க்ருபா வசத்தால் எடுக்கிற பிறவி நம்மை அவனிடம் சேர்க்கைக்கு காரணமாயிருக்கும்.

ஒருத்தி மகனாய் பிறந்து – தசரதன் தவம், யாகங்களியற்றி நான்கு புதல்வர்களை பெற்றான். இங்கே தேவகி, வசுதேவர், யசோதை, நந்தகோபர் என்று நால்வர் இயற்றிய தவத்துக்கு ஈடு இணையற்ற ஒரே யாதவ ரத்னமாக கண்ணன் பிறந்தான். வளர்ந்து பெரியவனாகிய பின் தான் ஸ்ரீராமன் பித்ருவாக்ய பரிபாலனம் செய்தான். இங்கே க்ருஷ்ணனோ பிறந்த சில மணிக்குள்ளே, தன் சங்க சக்ராதி அம்ஸங்களை மறைத்துக்கொள்ள தேவகி ப்ரார்த்திக்க உடனே அப்படி தன் அம்சங்களை மறைத்துக்கொண்டு அவள் இட்ட வழக்கை செய்து காட்டினான். என்னே அவள் பெருமை!

ஓரிரவில் ஒருத்தி மகனாய் – அந்தகாரமான, பயங்கரமான அந்த ராத்திரி நினைவுக்கு வருகிறது. சிறைச்சாலையில் பிறந்து, பிறந்த சில மணித்துளிக்குள்ளாகவே, கொடும் இரவில், கொட்டும் மழையில், பெருக்கெடுத்து ஓடும் ஆற்று வெள்ளத்தைக் கடந்து வேறொருத்திக்கு மகனாய் போய் சேர்ந்தானே! என்ன ஆச்சர்யமான சம்பவங்கள்! பூர்வாசார்யர்கள் இதை வேறு விதமாகவும் அனுபவிக்கிறார்கள்.

‘நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப்போலெ, கம்ஸாதிகள் தண்மை ஸூதிகாக்ருஹத்திலே ஓரிரா தங்கவொட்டிற்றில்லை என்கை’ என்றார்கள். கம்ஸன் முதலான அரக்கர்களின் சமீபம், தெய்வீகமான இந்த குழந்தையை, ப்ரசவிக்கிற அறையில் ஒரு ராத்திரி கூட தங்க விடவில்லை. உடனே குழந்தையை இடம் மாற்றியாக வேண்டியதாகி விட்டது.

அதோடு, முதலில் சொன்ன ஒருத்தி தேவகி. இப்போது சொல்கிற ஒருத்தி யசோதை. யசோதைக்கு ஈடு இணை உண்டோ! ஈடு இணையற்ற அத்விதீயமானவள் அவள். தேவகி கண்ணனை பிறந்த குழந்தையாக பார்த்தாள். யசோதையோ அவன் வளர்ந்து, அவன் பால லீலைகளையெல்லாம், தொல்லையின்பத்தையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தவள். அவள் பெருமைக்கு ஈடே இருக்க முடியாது.

தீயவனான கம்சனின் விஷப்பார்வை கண்ணன் மீது பட்டு விடக்கூடாதே, நல்லவர்களான தேவர்களும் இவன் இருக்குமிடம் தெரிந்தால் அவர்களெல்லாம் இவனிடம் ப்ரமை கொண்டு கூடி வருவர், அதனால் இவனிருப்பது வெளித்தெரிந்து விடுமே என்று யாரும் பார்க்காமல் கண்ணனை நிலவரையில் வைத்து வளர்த்தாளாம் யசோதை. எப்படி நம் மத்தியிலேயே, சேதன அசேதனர்களுக்குள்ளேயே அந்தர்யாமியாய் அவன் இருந்தாலும் மறைந்து இருக்கிறானோ, அதைப்போல் ஆஸ்ரிதர்கள் மத்தியில் பிறந்து வளர்ந்தாலும் அவன் மறைந்தே இருந்தானாம். இது அவனுடைய சங்கல்பம் – அதைத்தவிர வேறு விளக்கங்கள் இல்லை. ஓரிடத்தில் பிறப்பதும், தாயை தவிக்க விட்டு, வேறொரிடத்துக்கு போவதும், உலக கண்களிலிருந்து மறைந்திருப்பதும், பின் வெளிவந்து யுத்தம் செய்வதும் எல்லாம் அவன் சித்தம் – சங்கல்பம்.

இப்படி கண்ணனை நினைக்கும் போதே கம்ஸனையும் நினைக்க வேண்டியிருக்கிறதே! அது அவன் செய்த புண்ணியம்! ஆண்டாள் கம்சனை எண்ணி, ‘தரிக்கிலனாகித் தான் தீங்கு நினைந்த’ என்று கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கிறான் என்று தெரிந்தவுடன் ஓரிடத்தில் தன் உடலை தரிக்க முடியவில்லையாம் கம்சனுக்கு. உடலும் தவிக்க, உள்ளமும் தவிக்க தரிக்க முடியாமல் துடித்தானாம்.

அவனுக்கு தங்கையாய் பிறந்த பாவத்துக்கு, தேவகியின் வயிற்றில் பயாக்னியை வைத்தான். கண்ணன் பிறந்து அந்த அக்னியை கம்ஸன் வயிற்றுக்கு மாற்றி விட்டான். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் தனக்கு தானே தீங்கு செய்து கொண்டான். அவன் கண்ணனை அழிக்க வேண்டும் என்கிற கருத்தை பிழையாக்கி, (எண்ணத்தில் மண் விழ வைத்து), தானே எல்லாம் என்று நினைத்து நிர்பயமாக இருந்த அரக்கன் வயிற்றில் பயாக்னியை உண்டு பண்ணி நெருப்பென்ன நின்றான் கண்ணன். சின்ன குழந்தையாய் இருந்தாலும் கம்ஸனுக்கு நெருப்பென்ன நெடுமாலாய் நின்றானாம் கண்ணன்.

நெடுமாலே! ‘பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே பிச்சின்மேலே பிச்சேற்ற வந்தோம்!” என்று அவன் மீது இவர்களுக்கும், இவர்கள் மீது அவனுக்கு வியாமோகம் அதிகம். அதனால் உன்னை உன்னிடமிருந்து உன்னையே அருத்தித்து பெற வந்தோம். இப்போது ஆண்டாள் அவன் சங்கல்ப விசேஷத்தை நினைத்து பார்த்து, ‘பறை தருதியாகில்’ என்று எங்களுக்கு பறையை – கைங்கர்ய ப்ராப்தியை தருவதென்று சங்கல்பித்தாயானால், உன் சங்கல்பம் இருந்து நீ கொடுத்தால், வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறாள்.

உன் சங்கல்பம் இருந்தால், நீ எங்களுக்கு கைங்கர்ய ஸ்ரீயை கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, நித்யமான பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: