திருப்பாவை 26 – மாலே! மணிவண்ணா!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

பூவைப் பூவண்ணா! நீ சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்! என்று இவர்கள் கேட்டதற்கேற்ப அவனும் தன் நடையழகைக் காட்டி நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்து, ‘பெண்களே! நீங்கள் வந்த காரியம் என்ன?’ என்று வினவுகிறான். இந்தப் பாட்டில் நோன்புக்கு தேவையான உபகரணங்களையெல்லாம் அவனிடம் யாசிக்கிறார்கள். அதுவும் மாயனே! நாராயணா! உலகளந்தவனே என்றெல்லாம் கேட்டால் அவன் மேன்மைதான் வெளிப்படுகிறது. அவன் பெரியவன் என்ற எண்ணம் ஏற்பட்டு அஞ்சி வாயில் வார்த்தைகளே வருவதில்லை.

அதனால் மாலே! என்றாள். தன் அத்தனை வியாமோஹத்தையும் – பித்து பிடித்த அன்பத்தனையும் கலந்து மாலே! என்றாள் இந்த ஒற்றைச் சொல்லில் அவன் செளலப்யம் – சுலபத்தன்மை, தோளோடு தோள் நின்று விளையாடிய கண்ணனை உருவகிக்கிறாள். இவர்களுக்கு மட்டுமா பித்து? அவனும் தான் மயங்கிக் கிடக்கிறான். கண்ணன், வந்திருக்கிற இவர்களது மார்பகங்களையும், இடையையும், முக அழகையும் பார்த்துக்கொண்டே மயங்கி நின்று விட்டானாம். அதாவது இவர்களது பக்தியையும், வைராக்கியத்தையும் , ஞானத்தையும் கண்டு அவனே ஒரு கணம் மயங்கி நின்று விட, நாங்கள் வேண்டுவன கேட்டியேல் என்று அவனை உலுக்கி எழுப்புகிறார்கள். எங்களுக்கு எத்தனை உன்னிடம் அன்பிருக்கிறதோ அதை விட பலமடங்கு அன்பை நீ எங்களிடம் வைத்திருக்கிறாய் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம் என்றாள்.

நாங்கள் வேண்டுவன கேட்டியேல், இந்த உலகமனைத்திலும் சிஷ்டர்களுக்கு ஆறுதலையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் உண்டு பண்ணக்கூடியதான உன் பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள் வேண்டும். பெரிதான பேரிகைகள் வாத்தியங்கள் வேண்டும். பல்லாண்டு இசைக்கக் கூடிய முக்தர்கள் எங்களுக்கு ஆசார்யர்களாக வர வேண்டும். விடியற்காலை ஆதலால் இருள் விலக்க அழகான விளக்குகள் வேண்டும். இன்னும் நோன்புக்கு வந்து கொண்டிருக்கிற பேர்களுக்கு தொலைவிலேயே இடத்தை அடையாளம் சொல்லத்தக்க கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் குடையாகக் காக்க கூடிய மேல்விதானம் வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே  அபெக்ஷிக்கிறார்கள்.

கண்ணன் கேட்டானாம், இதெல்லாம் வேண்டும் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? இதெல்லாம் மேலையார் செய்வனகள்! எங்களுடைய பூர்வாசார்யர்கள் செய்தபடி எங்களுக்கு தெரியும் என்றார்கள்.
வியாக்கியானத்தில் இந்த இடத்தை அழகாக விளக்கியிருக்கிறார்கள். இவர்கள் கேட்டபடி தன்னுடைய சின்னங்களையெல்லாம் பெருமான் கொடுக்க ஆரம்பித்தானாம்.

என்னிடம் பாஞ்சசன்னியம் ஒன்றுதான் இருக்கிறது, அதன் ப்ரபாவங்களுக்கு ஈடாக இன்னொன்றில்லை, அதை எடுத்துக்கொள்ளுங்கள். நான் உங்களுடன் கூத்தாடின பறை இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். பல்லாண்டு பாடின விஷ்ணு சித்தரே இருக்கிறார். அந்த பெரிய ஆழ்வாரை ஆசார்யானாக வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு நப்பின்னையே கோல விளக்காக உங்களை காட்டித் தருகிறாள். அவளை எடுத்துக் கொள்ளுங்கள். என் கருடன் ஆரோகணித்த கொடி இருக்கிறது அதை எடுத்துக் கொள்ளுங்கள். விதானத்துக்கு என் அத்தவாளத்தையே (உத்தரீயத்தை) எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே பூர்வாசார்யர் சொல்கிறார், அவனுடைய விதானம் ஆதிசேஷன் அல்லவா? அதை ஏன் தரவில்லை என்றால், ஆதிசேஷன் பெருமாளே சொன்னாலும் ‘தன்னையொழிய ஓரடியிடமாட்டாதவனாகையாலே!’ என்று அவனை விட்டு விலகம¡ட்டானாம். அதனால் தன் உத்தரீயத்தையே தருகிறேன் என்றானாம்.

மணிவண்ணா! நீ தருவதாகச் சொல்வதெல்லாம் ஒன்று தானே இருக்கிறது. எங்களுக்கு இதுமாதிரி பலப்பல வேண்டும் என்று இவர்கள் கேட்க, அவன் இல்லாததை எப்படி தருவது என்று திகைக்க, இவர்கள் சொல்கிறார்கள். உன்னிடம் இல்லாதது என்று ஒன்று உண்டா? ஆலினிலையாய்! ஞாலமேழும் உனக்குள் கொண்டு ஆல இலையில் சிறு குழந்தையாக துயில் கொண்டவனாயிற்றே நீ! இருப்பது இல்லாதது எல்லாவற்றையும் கடந்து ‘இல்லாததையும்’, ‘இருப்பதையும்’ உண்டு பண்ணுபவனாயிற்றே நீ, உன் அருளாலே எல்லாம் முடியும் என்று சொல்கிறார்கள்.

இங்கே நோன்பு நோற்பது என்பது பகவானுக்காக பக்தர்கள் செய்யும் கைங்கர்யமே ஆகும். இத்தை பூர்வாசார்யர்கள் சொன்னபடி செய்வது சிஷ்டாசாரம். சங்கங்கள் அவன் ஜெயத்தை சொல்லி இவர்களது அனன்யார்ஹ சேஷத்வத்தை குறிக்கும். பறை பரதந்த்ரீயத்தை குறிக்கும். பல்லாண்டிசைப்போர் சத்சங்கத்தை குறிக்கும். கோல விளக்கு பாகவத சேஷத்வத்தைக் குறிக்கும். விதானம், தன்னாலே தனக்காக எதுவும் இல்லை என்று போக்த்ருத்வ ஞானத்தைக் குறிக்கும். ஈஸ்வரனிடமிருந்து இந்த
ஐஸ்வர்யங்களை எல்லாம் அருள் என்று யாசிக்கிறார்கள்.

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. பக்தர்கள் குறியீடாகக் கேட்கும் ஐசுவரியங்கள் பற்றிய விளக்கம் அருமை.

  மற்றதெல்லாம் புரிகிற மாதிரி இருக்கு.
  இந்த சொற்களுக்கு விளக்கம் தேவைப் படும் –

  அனன்யார்ஹ சேஷத்வத்தை – ?
  பாகவத சேஷத்வத்தை – ?
  போக்த்ருத்வ ஞானத்தை – ?

 2. Srikanth said

  அனன்யார்ஹ சேஷத்வம் – அனன்யார்ஹம் என்றால் வேறோருவருக்கும் சொந்தமாகி விடாமல் – உடமையாகி விடாமல், அவனுக்கேயாகி இருப்பது. சேஷத்வம் என்பது தொண்டு செய்து அடிபணிந்து இருத்தல் என்று சொல்லலாம்.

  பாகவத சேஷத்வம் – பகவானுடைய தொண்டர்கள் – பாகவதர்கள் – அவர்களுக்கு தொண்டு செய்தல்

  போக்த்ருத்வ ஞானம் – எந்த ஒரு (கர்மாவும்) செயலும் அவனுக்காகவே அன்றி நமக்காக இல்லை என்ற அறிவு.

  இவற்றுக்கெல்லாம் ஆழமான அர்த்தங்கள் உண்டு… போகிற போக்கில் சொன்னாலும் இந்த வார்த்தைகளுக்கு உரிய கனம் புரியும்போது மெய்சிலிர்க்க வைத்து கண்ணில் நீரை வரவழைக்கும்!

 3. அனாமதேய said

  ஐயா,
  தங்கள் முயற்சி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

  பாடிப் பற பாசுரங்களில்…
  “என்னாதன் தேவிக்கு…” – சத்யபாமைக்காக இந்திரலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை வேருடன் எடுத்து வந்து த்வாரகாவில் அவருடைய மாளிகையில் இருத்திய லீலை. (கருடன் மீதேறி கண்ணனும் சத்யபாமையும் இந்திரலோகம் சென்றனர்.)

  ~
  Radha

RSS feed for comments on this post · TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: