Archive for திவ்ய பிரபந்தம்

பாடிப்பற! பாடிப்பற!

என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்
தன்நாதன்காணவே தண்பூமரத்தினை
வன்னாதபுள்ளால் வலியப்பறித்திட்ட
என்னாதன்வன்மையைப்பாடிப்பற எம்பிரான்வன்மையைப்பாடிப்பற

பெரியாழ்வார் திருமாலின் இரு அவதாரங்களான ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் இரு தோழிகள் உளமுறுகி இத்திரு அவதாரங்களின் குண விசேஷங்களை சிறப்பித்து பாடுவதாக அமைத்துள்ளார். பெரியாழ்வாரின் இந்த பத்து பாசுரங்களில் தோழிகள் இருவரும் ஒரு பாட்டு இராமனுக்கு ஒரு பாட்டு கண்ணனுக்கு என்று எதிர் எதிர் பாடியும் குதித்தும் விளையாடுகிறார்கள். ஒவ்வொரு பாட்டிலும் காப்பிய நிகழ்ச்சிகள் அடித்தளமாக குறிப்பிடப்படுகிறது. மிகவும் எளிய நடையில் அமைந்த இப்பத்து பாடல்கள் கேட்போரை பரவசம் கொள்ளச் செய்யும். கண்ணனைக்குறித்து இந்த முதல் பாடலில் சொல்லப்படும் சம்பவம் சரிவர எனக்கு பிடிபடவில்லை. பெரியோர்கள் தெளிவிப்பார்கள் என்று நம்புகிறேன். அதனால் இரண்டாவது பாடலைப்பார்ப்போம்.

என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்
தன்வில்லினொடும் தவத்தைஎதிர்வாங்கி
முன்வில்வலித்து முதுபெண்ணுயிருண்டான்
தன்வில்லின்வன்மையைப்பாடிப்பற தாசரதிதன்மையைப்பாடிப்பற.

இப்பாடலில் ராமன் சீதையை மணந்து திரும்புகையில் சிவதனுசை உடைத்தாயே எங்கே, என்வில்லை வாங்கி நாணேற்றி விடு பார்க்கலாம் என்று இறுமாப்பாக சொல்கிறார் பரசுராமர். சற்றும் தயங்காமல் ராமன் அவரது வில்லை வாங்கி நாணேற்றி அம்பு தொடுத்து அதற்கு பலியாக எதை வைக்கப்போகிறீர் என்று கேட்கவும் தன் கர்வமழிந்து என் தவமனைத்தையும் தந்தேன் – என் தவவலிமையால் கிடைக்கப்போகும் நல்லுலகம் செல்லும் வாய்ப்பெல்லாம் இந்த அம்புக்கு இரையாகட்டும் என்று சொல்லி பரசுராமன், ராமனை வாழ்த்திச்செல்கிறார். அதே போல் ராமன் முதன்முதலில் போரிட்டுக்கொன்றது பெண் அரக்கியான தாடகையைத்தான்.  இந்த இரு நிகழ்ச்சிகளையும் சொல்லி இப்பாடலில் ஒரு தோழி வில்லின் வன்மையை பாடுவோம். தசரதன் மைந்தனான தாசரதியை பாடுவோம் என்கிறாள்.

உருப்பிணிநங்கையைத் தேறேற்றிக்கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்துஎதிர்வந்து
செருக்குற்றான் வீரம்சிதையதலையைச்
சிரைத்திட்டான்வன்மையைப்பாடிப்பற தேவகிசிங்கத்தைப்பாடிப்பற

ருக்மணி கல்யாணத்தை இப்பாடலில் சொல்லப்படுகிறது. ருக்மணிக்கு ருக்மி என்றொரு சகோதரன் உண்டு. ருக்மணியை கண்ணன் மணக்க அவன் சற்றும் சம்மதிக்காமல் எதிர்க்கிறான். கண்ணன் ருக்மணியை கவர்ந்து கொண்டு தேரில் செல்லும் போது எதிரே வந்து ருக்மி எதிர்க்கிறான். தன் தங்கையின் விருப்பத்தையும் கண்ணனையும் மதிக்காமல் எதிர்த்த ருக்மியின் செருக்கு அழிய போர் புரிகிறான் கண்ணன். போரில் தோற்ற ருக்மியைக் கொல்லாமல் அவனை மொட்டையடித்து விரட்டுகிறான் கண்ணன். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு – யசோதை இளஞ்சிங்கம் – என்பதைப்போல் – தேவகி பெற்றெடுத்த வலிமையில் சிங்கத்தை ஒத்த கண்ணனை பாடி ஒரு பெண் குதிக்கிறாள்.

மாற்றுத்தாய் வனம்போகேஎன்றிட
ஈற்றுத்தாய்பிந்தொடர்ந்து எம்பிரான் என்றுஅழ
கூற்றுத்தாய்சொல்லக் கொடியவனம்போன
சீற்றமிலாதானைப்பாடிப்பற சீதைமணாளனைப்பாடிப்பற

தன் மாற்றாந்தாய்தானே சொன்னாளென்றோ, அவள்பேரில் சினமோ கொள்ளாமல் தன்னை ஈன்றதாய் எம்பிரானே என்று அழவிட்டு தந்தையின் வாக்கைக்காப்பாற்ற கொடுமையான வனத்தில் வாழத்துணிந்த சீதைமணாளனை பாடி விளையாடுகிறாள் ஒரு பெண்.

பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்து
நஞ்சுமிழ்நாகம்கிடந்த நல்பொய்கைபுக்கு
அஞ்சப்பணத்தின்மேல் பாய்ந்திட்டுஅருள்செய்த
அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப்பாடிப்பற

கண்ணனை கபடநாடகசூத்திரதாரி – அகடித-கடனா-சமர்த்தன் என்பர். அரசியல் ராஜதந்திரங்களில் சிறந்தவன் அவன். பஞ்சபாண்டவர்களுக்கு தூதனாக களமிறங்கி பாரதத்தின் பின்புலமாக இயங்குகிறான். நச்சுப்பாம்பான காளிங்கனை அவன் நோகுமாறு நர்த்தனாமாடின கண்ணனை யசோதையின் சிங்கத்தை பாடி விளையாடுகிறாள் இவள்.

முடியொன்றிமூவுலகங்களிலும் ஆண்டுஉன்
அடியேற்கருளென்று அவன்பிந்தொடர்ந்த
படியில்குணத்துப் பரதநம்பிக்குஅன்று
அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற

மணிமுடியேற்று மூவுலகத்தையும் ஆண்டு உன் அடியவர்களுக்கு அருளவேண்டும் என்று இரைஞ்சி பின்னால் வந்த பொறாமை வெறுப்பு போன்ற தீயகுணங்களற்ற பரதனுக்கு தன் பாதுகைகளை கொடுத்த செம்மல் ராமனை நினைத்து பாடுகிறாள் இந்தப்பெண்.

காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்
நீள்முடியைந்திலும்நின்று நடம்செய்து
மீளஅவனுக்கு அருள்செய்தவித்தகன்
தோள்வலிவீரமேபாடிப்பற தூமணிவண்ணனைப்பாடிப்பற

காளிங்கன் எனும் நாகப்பாம்புகளின் அரசன் இருந்த குளத்தில் பாய்ந்து அவன் ஐந்து தலைகளின் மீதும் நடனமாடி பின் அவன் மனைவிகள் கேட்டுக்கொண்டதால் உயிருடன் விட்ட அருளாளன் வித்தகன் தோள் வலிமையை ஒருத்தி பாடுகிறாள்.

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொல்கொண்டுபோகி நுடங்கிடைச்
சூர்ப்பனகாவைச்செவியொடுமூக்கு அவள்
ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற

தன்னுடையை இளைய தம்பிக்கு அரசைக்கொடுத்துவிட்டு தண்டகவனம் என்னும் கொடிய மிருகங்களுள்ள வனம் புகுந்தான் ராமன். அரக்கி சூர்ப்பனகையை அவள் கெட்ட மதியால் சீதையை கொல்லத்துணிந்த போது பதிலாக அவள் நோகுமாறு செவி மூக்கு என்று அவயங்களை அறுத்த ராமனை இந்தப்பெண் பாடுகிறாள்.

மாயச்சகடமுதைத்து மருதிறுத்து
ஆயர்களோடுபோய் ஆநிரைகாத்து அணி
வேயின்குழலூதி வித்தகனாய்நின்ற
ஆயர்களேற்றினைப்பாடிப்பற ஆநிரைமேய்த்தானைப்பாடிப்பற

மாயமான சிறுதேராக வந்த அரக்கனை உதைத்து உருக்குலைத்து ஆயர்களோடிருந்து பசுக்களை மேய்த்து குழலை ஊதி மதி மயங்க வைத்த ஆயர்களுள் ஏறு போன்றவனை கண்ணனைப் பாடி விளையாடுகிறாள் இப்பெண்.

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு
ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும்
நேராஅவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற

கடலையே தேக்கி இலங்கை புகுந்து அரக்கன் ராவணனின் பத்து தலைகளை அறுத்து அவன் தம்பியான விபிஷணனுக்கு சிரஞ்சீவி என்று வரமருளி முடிசூட்டி ஆராவமுதான ராமனை இந்தப்பெண் பாடி விளையாடுகிறாள்.

நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்று
உந்திபறந்த ஒளியிழையார்கள்சொல்
செந்தமிழ்தென்புதுவை விட்டுசித்தன்சொல்
ஐந்தினொடைந்தும்வல்லார்க்கு அல்லலில்லையே.

நந்த குமாரனையும் காகுத்தன் எனும் ராமனையும் துள்ளி விளையாடிய  ஜொலிக்கும் ஆடையணிந்த இப்பெண்களின் சொல்லாக விட்டுசித்தன் எனும் பெரியாழ்வாரின் இந்த பத்து பாசுரங்களையும் கற்றுணர்ந்து பாடுபவர்களுக்கு அல்லல் ஏற்படாது என்பதாம்.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்