Archive for விசிஷ்டாத்வைதம்

ஆளவந்தார்

ந தர்ம நிஷ்டோஸ்மி ந சாத்ம வேதி
ந பக்திமான் த்வச்சரணாரவிந்தே
அகிஞ்சானோனான்யகதி: சரண்ய!
த்வத் பாதமூலம் சரணம் ப்ரபத்யே!!

நான் தர்மத்தை அறிந்தவனல்லன். அன்றி தன்னையறிந்தவனுமல்லன். உன்னுடைய பாதகமலங்களை  சரணடைந்த பக்தனுமல்லன். வேறொன்றுமறியாது உன்னை சரணடைவதே கதியென்றெண்ணி உன் பாதங்களில் சரணடைகிறேன்.
– ஆளவந்தார்.

நாதமுனிகள் எனும் ரங்கநாதமுனிகள் ஒரு வைணவ பெரியார். ஆராவமுதே எனும் நாமம் திருவாய்மொழியில் சொல்லக்கேட்டு ஆயிரம் நாமங்களில் இல்லாத புதுப்பெயராக இருக்கிறதே என்று எண்ணி தேடியலைந்து அதன் வாயிலாக நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும் ஒன்று திரட்டியவர். இவருடைய புதல்வன் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துரைவர் எனப்படும் யாமுனாசாரியர். ஒருமுறை ஈஸ்வர முனிகள் குடும்பத்துடன் யாத்திரை மேற்கொண்டபோது யமுனை நதிக்கரையில் பிறந்ததால் யமுனைத்துறைவர் என்ற பெயர் வைத்தார்கள். ஈஸ்வரமுனிகள் யமுனைத்துரைவரின் இளம்வயதிலேயே இறைவனடி சேர்ந்தார். தாயின் வளர்ப்பிலேயே இருந்த யமுனைத்துறைவர் தக்க சமயத்தில் கல்வி கற்க மஹா பாஷ்ய பட்டர் என்பாரிடம் அண்டினார்.

அக்காலத்தில் வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற பேரறிஞர் பாண்டிய அரசவையில் வீற்றிருந்தார். கல்வி கற்றவர்களுக்கே உரிய கர்வத்தினால் பாண்டிய நாட்டு அறிஞர்களெல்லாரும் தமக்கு கப்பம் செலுத்த வேண்டும் அல்லது தம்முடன் போட்டியில் பங்கு பெற்று வெல்லவேண்டும் என்று அறிவித்தார். அவரது விரிந்துபட்ட அறிவுக்கெதிராக போட்டியிட துணிவில்லாமல் எல்லா அறிஞர்களும் கப்பம் செலுத்திவந்தனர்.

யமுனைத்துறைவரின் ஆசான் இந்த கப்பம் செலுத்தாததால் கோபமுற்று அக்கியாழ்வான் ஆளனுப்பி வரச்சொன்னார். அச்சமயம் யமுனைத்துறைவரின் ஆசான் இல்லாததால் தம் ஆசானை அழைத்துப்போக வந்தவரிடம் தம் ஆசான் வரத்தேவையில்லை என்று தானே வருவதாகவும் சொல்லியனுப்பினார். இதைக்கேட்ட அக்கியாழ்வான் யமுனைத்துறைவரை அரசன் மூலமாக அழைத்துவர முயற்சித்தார். தான் போட்டியிடப்போவது அரசவை அறிஞரிடம் என்பதால் தன்னை அரச மரியாதையுடன் பல்லாக்கில் அழைத்துக் கொண்டுபோகும்படி ஆளவந்தார் உரைத்தார்.

இதையெல்லாம் கவனித்த பாண்டிய அரசனுக்கும் அரசிக்கும் ஒரு போட்டி ஏற்பட்டது. பாண்டிய அரசிக்கு அக்கியாழ்வானின் மமதை பிடிப்பதில்லை. சரியான ஒரு ஆள் வந்து அக்கியாழ்வானின் கர்வத்தை அடக்கவேண்டும் என்று விரும்பினாள். பாண்டிய அரசிக்கு எப்படியோ சிறுவனான யமுனைத்துறைவர் வெல்வார் என்ற நம்பிக்கை எழுந்தது. அதனால் தன் கணவனிடம் யமுனைத்துறைவர் கண்டிப்பாக அக்கியாழ்வானை வென்று விடுவார் என்றும் அவ்வாறு வெல்லவில்லையெனில் அரசன் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னாள். அரசரும் பதிலுக்கு அப்படி யமுனைத்துறைவர் வெற்றிபெற்றால் தன் அரசில் ஒரு பகுதியை அளிப்பதாக பந்தயம் வைத்தார்.

பிறகு யமுனைத்துறைவர் பல்லக்கில் சகல மரியாதைகளோடு அழைத்து வரப்பட்டார்.  அப்போது அவருக்கு சுமார் பனிரெண்டு வயதுதான் இருக்கும். அவைக்கு வந்த அக்கியாழ்வான், “ஆள் வந்தாரா” என்று கேட்கவும் அரசியே “ஆள வந்தார்” என்று சொன்னாளாம். பிறகு ஆளவந்தாரைக்கண்டு இந்த சிறுவனுக்கு என்ன தெரியப் போகிறது என்று சிறிய சிறிய கேள்வியாக அக்கியாழ்வான் கேட்கவும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி பின் “எம்மை நீர் குறைவாக மதிப்பிட்டு விட்டீர், இப்போது நான் சில விஷயங்கள் சொல்கிறேன், தர்க்கரீதியாக அது இல்லை என்று நிரூபித்துவிடுங்கள், பார்க்கலாம்” என்று ஆளவந்தார் சவால் விட்டார். இதை அக்கியாழ்வானும் ஏற்றுக்கொண்டார்.

அதன்படி ஆளவந்தார் சொன்ன வாக்கியங்கள் “இந்த அரசன் சார்வபெளவமனாகவும் புண்ணியனாகவும் இல்லை”,  “அரசி பத்தினி இல்லை”, கடைசியாக “உங்கள் தாயார் மலடி” என்றார். இத்தகைய வாக்கியங்களை கேட்ட அக்கியாழ்வானால் மறுப்பதா ஏற்றுக்கொள்வதா என்று தெரியவில்லை. தம் தோல்வியை ஒப்புக்கொண்டு, “இதே வாக்கியங்களை நீயெப்படி இல்லை என்று நிரூபிப்பாய்” என்று கேட்டார். ஆளவந்தார் சொன்ன பதில், “அரசன் சார்வ பெளமன் இல்லை – ஏனெனில் சார்வ பெளமன் என்றால் பூமி முழுவதையும் ஆள்பவன் என்று பொருள். மேலும், குடிமக்கள் செய்யும் பாவங்களில் அரசனுக்கும் பங்கு உண்டு என்பதால் புண்ணியனும் இல்லை. இரண்டாவதாக அரசி கன்னிகாதானத்தின் போது இந்திரன் முதலான தேவர்களுக்கு முதலில் தானமாக அளிக்கப்பட்டு அவர்கள் மூலமாக விவாகம் செய்யப்படுகிறாள். மேலும் அரசனே அக்னி இந்திரன் முதலான தேவர்களின் அம்சம் ஆகையால் அவள் பத்தினியாகக் கொள்ள முடியாது. மூன்றாவதாக தர்ம சாத்திரங்களின் படி ஒரு பிள்ளை பெற்ற பெண் மலடிக்கே சமமாவாள் எனப்படுவதால் உமது தாயருக்கு ஒரே பிள்ளையாக நீர் இருப்பதாலே உமது தாயார் மலடியாகிறாள்”  என்று தர்க்க ரீதியாக பதில் சொன்னார்.

தெள்ளத்தெளிவாக தர்க்கரீதியாக வென்றுவிட்டதால் அரசி சிறுவனான யமுனாச்சாரியரை வாரி அணைத்து “எமை ஆளவந்தீரோ” என்று பாராட்டினாள். அரசரும் தமது அரசில் ஒரு பகுதியை பரிசாக அளித்தார். நன்கு கற்றுணர்ந்த ஆளவந்தார் தமது நடுத்தர வயது வரை நல்லாட்சி புரிந்து வந்தார். அச்சமயம் நாதமுனிகளின் சீடர்களில் ஒருவரான ராம மிஸ்ரர் எனப்படும் மணக்கால் நம்பிகள் வைணவம் நசித்து போவதை கண்டு ஆளவந்தார் அரச போகங்களில் திளைப்பதை விடுத்து மீண்டும் வைணவத்துக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினார். அதனால் ஆளவந்தாரை காணவந்தார். ஆனால் அவரால் ஆளவந்தாரை சந்திக்க முடியவில்லை.

பிறகு ஆளவந்தாருக்கு தூதுவளை கீரை மிகவும் பிடிக்கும் என அறிந்து தினம் தூதுவளைக்கீரையை கொணர்ந்து அரண்மனையில் அளித்துவந்தார். சிலகாலம் கழித்து ஒரு நாள் தூதுவளை கீரை வராமல் போகவே ஆளவந்தார் ஏன் கீரை இல்லை என்று கேட்கவும் மணக்கால் நம்பிகளைப்பற்றி சொன்னார்கள். அவரை அழைத்துவரும்படி ஆளவந்தாரும் பணிக்க, நம்பிகள் அழைத்துவரப்பட்டார். நம்பிகள் அரசரான ஆளவந்தாரை தனிமையில் சந்தித்து ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனிகளுடைய சொத்து ஒன்று தம்மிடம் இருப்பதாகவும் அதை ஆளவந்தாரிடம் ஒப்புவிக்க எண்ணுவதாகவும் அதனால் தம்முடன் தனிமையில் வருமாறும் சொன்னார்.

இதற்கு ஒப்புக்கொண்டு பின் தொடர்ந்த ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக்காட்டி இதுவே உமது குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். பச்சைமாமலைபோல் மேனி என்ப்படும் ரங்கநாதரின் பெரிய திருமேனியைக்கண்டவுடன் கண்களில் நீர்வழிய தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆளவந்தார் ஆன்மீகப்பேரரசரானார்.

ஆளவந்தார் ராமானுஜரின் மானசீக ஆசானும் கூட.

ஆளவந்தாரின் காலம் 1017 AD – 1137 AD. ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் ஆளவந்தாரின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மஹாலக்ஷ்மி ப்ரபாவம்

हिरण्यवर्णां हरिणीं सुवर्णरजतस्त्रजाम् ।
चन्द्रां हिरण्मयीम् जातवेदो म अवह ॥
– ஸ்ரீ சூக்தம்

அக்னிதேவனே! பொன்போன்ற காந்தியுடையவளும் பாவங்களைப் போக்குபவளும் பொன்னாலும் வெள்ளியாலும் ஆன ஹாரங்களை அணிந்தவளும் சந்திர பிம்பம் போன்றவளும், பொன்மயமானவளும் ஆகிய ஸ்ரீதேவியை எனக்கருள் புரியுமாறு எழுந்தருள செய்வீர்.
* * *
ஸ்ரீ என்ற பதத்துக்கு மஹாலக்ஷ்மி என்றே பொருள். ஸ்ரீவத்சன், ஸ்ரீகாந்தன், ஸ்ரீதரன் என்றெல்லாம் மஹாவிஷ்ணுவான ஸ்ரீமன் நாராயணனை அழைக்கிறோம். இத்தகைய ஸ்ரீ என்ற சொல்லுக்கு பெரியவர்கள் ஆறு அர்த்தங்களை சொல்கிறார்கள். ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியானவள் எப்போதும் பகவானை ஆச்ரயித்தே இருக்கிறாள். நாம் ஆச்ரயிப்பதற்கும் தகுந்தவளாய் இருக்கிறாள்.

ஸ்ரீரங்கத்திலே போனால் பார்க்கலாம். ரங்கநாதரை சேவிக்க வேண்டுமானால் ஏகப்பட்ட தூரம் உள்ளே போகவேண்டும். தாயாரை சேவிக்க வேண்டுமானால் ஒரு க்ஷணத்திலே சேவித்து விட்டு வந்து விடலாம் – பக்கத்திலேயே இருக்கிறாள் அல்லவா ! மஹாலக்ஷ்மி உடனே கிடைக்கிறாள் நமக்கு! திருவேங்கடமுடையான் சந்நதிக்குத் தான் போங்களேன்… தாயரை சீக்கிரமாக பார்த்துவிடலாம். அவன் சேவை சுலபமாக சுலபமாக கிடைக்குமா! தாயாருக்கு எவ்வளவு காருண்யம் நம்மீது. நாம் சுலபமாகச் சேவிக்கும்படியாக ரொம்பக்கிட்டே நெருங்கி நிற்கிறாள். அவனை எப்போதும் அணுகியே இருக்கிறாள்.

ஸ்ரீ என்ற பதத்துக்கு இப்படி நெருங்கி இருக்கிறவள் என்று பொருள்.

நாம் ஏதாவது குறைகளைச் சொல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே குற்றங்களாக சொல்கிறோம்… அவள் பொறுமையாக உட்கார்ந்து கொண்டு கேட்டுக்கொண்டே இருப்பாளாம்! நம்மிடம் யாராவது கஷ்டத்தையே சொன்னால் கேட்க முடிகிறதா! குறையையே சொல்லிக்கொண்டிருந்தால் யார் கேட்பது? ஆனால் இந்த மஹாலக்ஷ்மி என்ன செய்கிறாள் பாருங்கள்.. நாம் சொல்கிற கஷ்டத்தையெல்லாம் கேட்டுக்கொள்கிறாள். எத்தனை நேரமானாலும் பொறுமையாக கேட்டுக் கொள்கிறாள். அதனால் “இதி ஸ்ரீ:”, “ச்ருணோதி” என்று பெயர் அவளுக்கு…

புருஷாகாரம் என்றபடி நாம் சொல்லும் குறைகளை எம்பெருமானிடத்திலே, ஏகாந்தத்திலே, அவன் ரொம்ப பவ்யப்பட்டுக் கேட்கிற சந்தர்ப்பத்திலே அவன் செவியிலே நம் குறைகளை எடுத்து சொல்கிறாள். ரொம்ப அழகாக சொல்கிறாள். அதிலும் நமது குறைகளை கொஞ்சம் அதிகப்படுத்திச் சொல்லி இன்னும் பகவானுக்கு நம்மீது விசேஷ காருண்யம் ஏற்படுவதற்கு தானே இரண்டு மூன்று சேர்த்துக்கொள்வாளாம். அதிலே நாம் சொன்னதைக்காட்டிலும் ரொம்ப அழகாக, அதையே பகவான் திருவுள்ளம் உகக்கும் படியாக, அவன் உடனே ஒடிவந்து உதவி விடும்படியாக அதை மாற்றி, பக்குவமாக சொல்வாளாம். இதனால் ச்ராவயதி இதி ஸ்ரீ: என்றழைக்கப்படுகிறாள்.

ச்ராவயதி என்ற பதத்திற்கு கேட்கச் செய்கிறாள் என்று பொருள்.

லக்ஷ்மியினுடைய திருவடியை அண்டினோமேயானால் நம்மிடமிருக்கிற தோஷங்களையெல்லாம் போக்கிவிடுகிறாள். தோஷத்தைப்போக்கி எம்பெருமானின் அனுக்கிரஹம் நமக்கு கிடைக்கப் பண்ணுகிறாள்.

நம்மிடம் இருக்கிற தோஷங்களை நிவர்த்திப்பவள். பகவானுடைய அனுக்கிரஹத்தை நமக்கு கிடைக்கப்பண்ணுகிறவள். நாம் சொல்வதையெல்லாம் கெட்டுக்கொள்கிறவள். அதோடு பகவானை கேட்கப் பண்ணுகிறவள். பகவானான நாராயணனை அணுகி இருப்பவள். நாம் ஆச்ரயிக்கத் தகுந்தவளாக, ரொம்ப நெருக்கமாக நம்மிடத்திலே தாயாராக இருந்து ரக்ஷிக்கிறவள் – இந்த ஆறும் எதிலிருந்து கிடைக்கிறது என்றால் ஸ்ரீ: என்கிற பதத்தின் அர்த்தமாக கிடைக்கிறது.

– முக்கூர் லக்ஷ்மி ந்ருசிம்மாச்சார்யார் உபன்யாசம்

Comments (4)