திருப்பாவை 17 – அம்பரமே

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்த கோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்!

இந்த பாசுரத்தில், நந்த கோபருடைய திருமாளிகையுனுள்ளே ப்ரவேசித்த ஆண்டாள் நந்த கோபரையும், யசோதை பிராட்டியையும், பலராமரையும், க்ருஷ்ணனையும் உறக்கத்திலிருந்து விழித்தெழ திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள். இங்கே ஒவ்வொருவரையும் எழுப்பும் போதும் நல்வார்த்தைகள் சொல்லி, அவர்கள் பெருமையைச் சொல்லி எழுப்புகிறாள்.

நந்தகோபர் நிறைய தான தர்மங்கள் செய்பவர். கணக்கில் அடங்காத அளவு துணி மணிகள், அன்னம், தண்ணீர் என்று தானம் செய்கிறார். அதனால் அம்பரமே! தண்ணீரே! சோறே! அறஞ்செய்யும் எம்பெருமான் – நந்த கோபாலா! என்று ஏகாரம் போட்டு அவர் செய்யும் தான தர்மங்களை சொல்கிறார்கள். இத்தை தாரக, போஷக, போக்யமென்று பூர்வாசார்யர்கள் சொல்வர். தாரகம் – என்பது உயிர் தரிக்கப் பண்ணுவது – நீரின்றி உயிர் தரிக்காது, அதேபோல் போஷகம் என்பது வாழ்வதற்கு தேவையான போஷணை – அன்னம் இன்றி உடல் போஷிக்கப் படமுடியாது – ஆடையின்றி உயிர் வாழ்ந்தாலும் வாழ்ந்ததாகாது – அரை மனிதன் ஆகிவிடுவோம் – அது போக்யம் – வாழ்க்கையை மனிதனாக அனுபவிப்பதற்கு அடிப்படை – ஆக தாரக, போஷக, போக்யம் தருவதில் எம்பெருமானுக்கு நிகர் நீர் – என்று சொல்வதாக அர்த்தங்கள் சொல்வர்.

வேறொரு வகையில், எங்களுக்கு அம்பரமே கண்ணன்! சோறே கண்ணன், தண்ணீரே கண்ணன் – என்று எல்லாமும் எங்களுக்கு கண்ணன். கண்ணனுக்கு நாங்கள் அன்னம் – அவன் எங்களை சாப்பிடுகிறான் – நாங்கள் அவன் எங்களை உண்டு ஆனந்தப் படுகிறானே – அந்த ஆனந்தத்தை நாங்கள் சாப்பிடுகிறோம் என்று (அஹமன்ன: அஹமன்னாத: என்றபடி) குறிப்பிடுவதாகவும் அர்த்தங்கள் உண்டு. இன்னும் ஒரு வகை அர்த்தமும் உண்டு – நந்த கோபரே நீர் எவ்வளவோ தானம் செய்கிறீர் – அதைக் கொடுக்கிறீர் – இதை கொடுக்கிறீர் – என்று சொல்லி எங்களுக்கு எங்கள் பெருமான் கண்ணன் வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவதாகவும் அர்த்தம் உண்டு.

கொம்பு அனார்கெல்லாம் கொழுந்தே! – வஞ்சிக் கொம்பைப்போல உள்ள ஆயர்குடிப் பெண்களில் கொழுந்து போன்றவளே! எங்கள் குலத்தை விளக்க வந்த குலவிளக்கே! எம்பெருமானின் மனைவியான எம்பெருமாட்டியே! யசோதா! இங்கே எழுந்திராய் என்று சொல்லாமல் அறிவுறாய் என்கிறார்கள். ஒரு பெண்ணினுடைய கஷ்டம் இன்னொரு பெண்ணுக்கன்றோ தெரியும்! இங்கே இவர்களின் த்வரை உணர்ந்து கண்ணனை தரவேண்டி பெண்ணான உனக்கு தெரியாததா! அறிவுறாய் என்கிறார்கள்.

அடுத்து, கண்ணன் அவர்கள் பார்வைக்கு வர, மற்ற எல்லாவற்றையும் மறந்தார்கள். மஹாபலி தானம் தந்தேன் என்று தாரை வார்க்கும் நீர் கீழே விழும் முன்பாக, எழுலகத்தையும் அதை தாண்டி வளர்ந்து, ஊடு அறுத்து என்று எல்லா உலகங்களின் ஊடாகவும் வளர்ந்த ஓங்கி உலகளந்த கோமகனே! தேவதேவனே! என்கிறார்கள். ‘உறங்குகிற ப்ரஜையைத் தழுவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே’ என்பர் பூர்வாசார்யர். எப்படி தாய் உறங்குகிற தன் குழந்தையை தழுவிக்கொண்டு இருப்பளோ அப்படி நல்லவன், தீயவன், ஆஸ்தீகன், நாஸ்தீகன் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல் எல்லார் தலையிலும் தன் திருவடிகளை ஸ்பர்சிக்க செய்தானே! என்று ஆச்சரியப்படுகிறார்கள்.

ஆனால் இவர்கள் எழுப்பியும் கண்ணன் எழுந்திருக்க வில்லை. பிறகுதான் இவர்களுக்கு உரைக்கிறது – க்ரமப்படி க்ருஷ்ணனின் தமையனான பலராமனை அல்லவோ முதலில் எழுப்ப வேண்டும் – அவன் எழாத போது கண்ணன் எப்படி எழுந்திருப்பன்? என்று எண்ணி, பொன் போன்ற திருப்பாதங்களை பொலிய விட்டு உறங்கும் எங்கள் செல்வா! பலதேவா! உன் தம்பியும் நீயும் உறக்கத்திலிருந்து எழுக! என்று அழைக்கிறார்கள்.

பலராமன் கண்ணனுக்கு இந்த பிறவியில் அண்ணனாக பிறந்து விட்டதால், கண்ணன் அவனிடம் பவ்யம் காட்டுகிறான். அதனால் பலராமனை கட்டி அணைத்து தூங்குகிறானாம். பிராட்டியை பிரிந்து பல நாள் இருந்தவன், தம்பியை பிரிந்தவுடன் இக்கணமே உயிர்விட்டேன் என்றவனாயிற்றே! பலராமனோ தன் ஸ்வரூப ஞானத்தால் கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து பழக்கப்பட்டவனாதலால் அவனும் பவ்யம் காட்டி கண்ணனை விட்டு விலக முடியாத ஆற்றாமையால் அணைத்து படுத்து உறங்குகிறான். இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தூங்கும் அழகை அனுபவித்து ஆச்சர்யப்பட்டு மகிழ்கிறார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக